Wednesday, March 1, 2023

போர்கள் பல கண்ட தளபதி..!

ந.வினோத்குமார்

கலைஞரின் மகன் என்பதை விடவும் காத்திருப்பின் கதாநாயகன் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம்...  'இவர் எப்போது கழகத் தலைவர் ஆவார்', 'இவர் எப்போது முதல்வர் ஆவார்' என்று எதிர்பார்த்தவர்களுக்குத்தான் அது காத்திருப்பு. ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அது பொறுமை. தனக்கான காலம் வரும் வரையில், கற்றுக்கொண்டே இருந்தார். பொறுத்தார் இப்போது பூமி ஆள்கிறார்!

சலூன் கடையில் தி.மு.க. இளைஞர் அணிக்கான கன்னி முயற்சியைத் தொடங்கியது முதல் இளைஞர் அணிச் செயலாளர், சென்னையின் மேயர், சட்டமன்ற உறுப்பினர், செயல் தலைவர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அரசியல் பரமபதத்தில் பல ஏணிகளில் ஏறி இன்று முதல்வர் எனும் பொறுப்பை அடைந்திருப்பது வரை... ஸ்டாலின் சந்தித்தது எல்லாம் போர்க்களங்கள் தான்!  

'கலைஞரைப் போலப் பேசத் தெரியாது' என்பதுதான் சமூகம் ஸ்டாலினின் மீது வைக்கும் மிகப்பெரும் விமர்சனம். ஆம்... ஸ்டாலின் கலைஞரைப் போல பேசமாட்டார் தான். ஆனால் அவரது சாதனைகள் மக்களை பல தசாப்தங்களுக்குப் பேச வைக்கும். அப்படி என்ன அவர் சாதித்து விட்டார் என்பதை அறிய 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: பெயர் அல்ல... செயல்' எனும் புத்தகம் உதவும். 'நக்கீரன்' இதழில் பொறுப்பாசிரியராக இருந்த கோவி.லெனின் இந்த நூல் ஆசிரியர்.

மேயராக மேன்மைக்குரிய சாதனைகள்

கலைஞரின் சாதனைகளைச் சொல்ல 'நெஞ்சுக்கு நீதி' முதல் 'கலைஞர் கடிதங்கள்' வரை எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. ஆனால் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், இளைஞர் அணிச் செயலாளராகவும், கட்சி செயல் தலைவராகவும் இருந்து ஸ்டாலின் செய்த அளப்பறிய சாதனைகளைச் சொல்லும் புத்தகங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் விதமாக இந்தப் புத்தகம் இருப்பது சிறப்பு.

சென்னையின் மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிக முக்கியமான சாதனை 9 மேம்பாலங்களைக் கட்டி அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. அவைதான் சிங்காரச் சென்னைக்கு முன்னோட்டமாக, புதிய முகமாகவும் முகவரியாகவும் அமைந்தன. அவற்றிற்காக அப்போது ஒதுக்கப்பட்ட தொகை 95 கோடி ரூபாய். "அதில் 30 சதவிகித நிதியை மிச்சப்படுத்தி, மேம்பாலங்களைக் கட்டி முடித்ததில் வெளிப்பட்டது மேயர் ஸ்டாலினின் நிர்வாகத் திறமை" என்கிறார் நூலாசிரியர்.

அதேபோல, ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்தான், மாநகரின் குப்பைகளை அகற்றுவதற்கு தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 'தெலுங்கு கங்கை' எனப்படும் கிருஷ்ணா ஆற்று நீர் வாயிலாக குடிநீர் வசதியும் அவர் மேயராக இருந்த காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. 


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

மேயராக ஸ்டாலின் செய்த சாதனைகள் பொதுமக்களுக்குத் தெரியும். ஆனால் இளைஞரணிச் செயலாளராக இருந்து, அவர் செய்த சாதனைகள் கட்சிக்கு வெளியே பரவலாகத் தெரியாது. இதைக் கருத்தில் கொண்டு, கட்சிக்குள் ஸ்டாலின் செய்த சாதனைகளைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் லெனின். அதுகுறித்து எழுதும்போது, தி.மு.க.வின் மாநாடுகள் மற்றும் பேரணிகளின் பிரமாண்டம் குறித்து அவர் சொல்லும் விதம், வாசகர்களுக்கு வியப்பளிக்கும்.

"தி.மு.கழகத்தின் வரலாற்றில் மாநாடுகளும் பேரணிகளும் தொண்டர்களின் வலிமையைக் காட்டக்கூடிய நிகழ்வுகளாகும். தலைவர்களை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வருவது, யானை‍ குதிரை ஆகியவற்றின் மீது கொடியேந்தி வருவது, பதாகைகளை ஏந்தியபடி தொண்டர்கள் அணிவகுத்து வருவது என்பதெல்லாம் தி.மு.க.வின் தொடக்க கால ஊர்வலங்களின் நிகழ்வாக இருந்தது. மைல்கணக்கில் தொடரும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் கட்டுப்பாட்டைப் பார்த்துத்தான், 'உடுப்பணியாத பட்டாளம்' என்றார் பேரறிஞர் அண்ணா. உடுப்பணியாத பட்டாளத்தைப் பின்னாளில் சீருடை அணிந்த ராணுவம் போல் மாற்றி, தி.மு.க. ஊர்வலத்தை, பேரணியாக்கிய பெருமை இளைஞரணி செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலினுக்குரியது" என்கிறார் நூலாசிரியர்.

வெள்ளைச் சட்டை வெள்ளை பேண்ட் தொப்பி ஷூ அணிந்து பேரணியை நடத்தும் வழக்கத்தை ஸ்டாலின் தான் கொண்டு வந்தார். முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டு இளைஞரணியினருக்கு வீறுநடை பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

மக்கள் நாடி அறிந்தவர்

உள்ளாட்சித் துறை அமைச்சராக அவர் செய்த பெரும் சாதனை... பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி, பட்டியலினத்தவர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததுதான்!

பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதிருந்தபோது தளபதி சந்தித்த கேலிகள், விமர்சனங்கள், அவதூறுகள்தான் எத்தனை எத்தனை..? அவற்றுக்கெல்லாம் 'நமக்கு நாமே', 'ஒன்றிணைவோம் வா', 'கிராம சபைக் கூட்டங்கள்' எனப் பலவிதமான பிரசார உத்திகள் மூலம் மக்களைச் சந்தித்தபடியே இருந்ததால்தான் அவர்களுடைய நாடி அறிந்து, இன்று நாடாளும் பொறுப்பில் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

'தி.மு.க. யாராலும் அடக்க முடியாத யானை. சமூக நீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை ஆகிய நான்கு கொள்கைகள்தான் அதன் கால்கள்' என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார் ஸ்டாலின். அந்தக் கொள்கைகளை ஏந்திக்கொண்டு முன்னேற்ற நடைபோடும் 'திராவிட மாடல்' அரசுக்கு வலுச் சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.