Wednesday, March 1, 2023

போர்கள் பல கண்ட தளபதி..!

ந.வினோத்குமார்

கலைஞரின் மகன் என்பதை விடவும் காத்திருப்பின் கதாநாயகன் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஆம்...  'இவர் எப்போது கழகத் தலைவர் ஆவார்', 'இவர் எப்போது முதல்வர் ஆவார்' என்று எதிர்பார்த்தவர்களுக்குத்தான் அது காத்திருப்பு. ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அது பொறுமை. தனக்கான காலம் வரும் வரையில், கற்றுக்கொண்டே இருந்தார். பொறுத்தார் இப்போது பூமி ஆள்கிறார்!

சலூன் கடையில் தி.மு.க. இளைஞர் அணிக்கான கன்னி முயற்சியைத் தொடங்கியது முதல் இளைஞர் அணிச் செயலாளர், சென்னையின் மேயர், சட்டமன்ற உறுப்பினர், செயல் தலைவர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அரசியல் பரமபதத்தில் பல ஏணிகளில் ஏறி இன்று முதல்வர் எனும் பொறுப்பை அடைந்திருப்பது வரை... ஸ்டாலின் சந்தித்தது எல்லாம் போர்க்களங்கள் தான்!  

'கலைஞரைப் போலப் பேசத் தெரியாது' என்பதுதான் சமூகம் ஸ்டாலினின் மீது வைக்கும் மிகப்பெரும் விமர்சனம். ஆம்... ஸ்டாலின் கலைஞரைப் போல பேசமாட்டார் தான். ஆனால் அவரது சாதனைகள் மக்களை பல தசாப்தங்களுக்குப் பேச வைக்கும். அப்படி என்ன அவர் சாதித்து விட்டார் என்பதை அறிய 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: பெயர் அல்ல... செயல்' எனும் புத்தகம் உதவும். 'நக்கீரன்' இதழில் பொறுப்பாசிரியராக இருந்த கோவி.லெனின் இந்த நூல் ஆசிரியர்.

மேயராக மேன்மைக்குரிய சாதனைகள்

கலைஞரின் சாதனைகளைச் சொல்ல 'நெஞ்சுக்கு நீதி' முதல் 'கலைஞர் கடிதங்கள்' வரை எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. ஆனால் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், இளைஞர் அணிச் செயலாளராகவும், கட்சி செயல் தலைவராகவும் இருந்து ஸ்டாலின் செய்த அளப்பறிய சாதனைகளைச் சொல்லும் புத்தகங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் விதமாக இந்தப் புத்தகம் இருப்பது சிறப்பு.

சென்னையின் மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிக முக்கியமான சாதனை 9 மேம்பாலங்களைக் கட்டி அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. அவைதான் சிங்காரச் சென்னைக்கு முன்னோட்டமாக, புதிய முகமாகவும் முகவரியாகவும் அமைந்தன. அவற்றிற்காக அப்போது ஒதுக்கப்பட்ட தொகை 95 கோடி ரூபாய். "அதில் 30 சதவிகித நிதியை மிச்சப்படுத்தி, மேம்பாலங்களைக் கட்டி முடித்ததில் வெளிப்பட்டது மேயர் ஸ்டாலினின் நிர்வாகத் திறமை" என்கிறார் நூலாசிரியர்.

அதேபோல, ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்தான், மாநகரின் குப்பைகளை அகற்றுவதற்கு தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 'தெலுங்கு கங்கை' எனப்படும் கிருஷ்ணா ஆற்று நீர் வாயிலாக குடிநீர் வசதியும் அவர் மேயராக இருந்த காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. 


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

மேயராக ஸ்டாலின் செய்த சாதனைகள் பொதுமக்களுக்குத் தெரியும். ஆனால் இளைஞரணிச் செயலாளராக இருந்து, அவர் செய்த சாதனைகள் கட்சிக்கு வெளியே பரவலாகத் தெரியாது. இதைக் கருத்தில் கொண்டு, கட்சிக்குள் ஸ்டாலின் செய்த சாதனைகளைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் லெனின். அதுகுறித்து எழுதும்போது, தி.மு.க.வின் மாநாடுகள் மற்றும் பேரணிகளின் பிரமாண்டம் குறித்து அவர் சொல்லும் விதம், வாசகர்களுக்கு வியப்பளிக்கும்.

"தி.மு.கழகத்தின் வரலாற்றில் மாநாடுகளும் பேரணிகளும் தொண்டர்களின் வலிமையைக் காட்டக்கூடிய நிகழ்வுகளாகும். தலைவர்களை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வருவது, யானை‍ குதிரை ஆகியவற்றின் மீது கொடியேந்தி வருவது, பதாகைகளை ஏந்தியபடி தொண்டர்கள் அணிவகுத்து வருவது என்பதெல்லாம் தி.மு.க.வின் தொடக்க கால ஊர்வலங்களின் நிகழ்வாக இருந்தது. மைல்கணக்கில் தொடரும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் கட்டுப்பாட்டைப் பார்த்துத்தான், 'உடுப்பணியாத பட்டாளம்' என்றார் பேரறிஞர் அண்ணா. உடுப்பணியாத பட்டாளத்தைப் பின்னாளில் சீருடை அணிந்த ராணுவம் போல் மாற்றி, தி.மு.க. ஊர்வலத்தை, பேரணியாக்கிய பெருமை இளைஞரணி செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலினுக்குரியது" என்கிறார் நூலாசிரியர்.

வெள்ளைச் சட்டை வெள்ளை பேண்ட் தொப்பி ஷூ அணிந்து பேரணியை நடத்தும் வழக்கத்தை ஸ்டாலின் தான் கொண்டு வந்தார். முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டு இளைஞரணியினருக்கு வீறுநடை பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

மக்கள் நாடி அறிந்தவர்

உள்ளாட்சித் துறை அமைச்சராக அவர் செய்த பெரும் சாதனை... பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி, பட்டியலினத்தவர்களை அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததுதான்!

பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதிருந்தபோது தளபதி சந்தித்த கேலிகள், விமர்சனங்கள், அவதூறுகள்தான் எத்தனை எத்தனை..? அவற்றுக்கெல்லாம் 'நமக்கு நாமே', 'ஒன்றிணைவோம் வா', 'கிராம சபைக் கூட்டங்கள்' எனப் பலவிதமான பிரசார உத்திகள் மூலம் மக்களைச் சந்தித்தபடியே இருந்ததால்தான் அவர்களுடைய நாடி அறிந்து, இன்று நாடாளும் பொறுப்பில் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

'தி.மு.க. யாராலும் அடக்க முடியாத யானை. சமூக நீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை ஆகிய நான்கு கொள்கைகள்தான் அதன் கால்கள்' என்று சட்டமன்றத்தில் குறிப்பிட்டார் ஸ்டாலின். அந்தக் கொள்கைகளை ஏந்திக்கொண்டு முன்னேற்ற நடைபோடும் 'திராவிட மாடல்' அரசுக்கு வலுச் சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Thursday, February 23, 2023

விஜயமும் வீழ்ச்சியும்!

ந.வினோத்குமார்

'சல்மான் ருஷ்டி ஒரு பிசாசு' என்றார் கல்வியாளர் ஒருவர். 'ஆமாம் சார்... எழுத்து, உழைப்பு, கற்பனை பிசாசு' என்றேன். சல்மான் ருஷ்தியின் புதிய நாவலான 'விக்டரி சிட்டி'யை வாசித்தவர்கள் யாரும் என் கருத்துடன் உடன்படவே செய்யலாம்.

ருஷ்தியின் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலுக்குப் பிறகு வரும் அவரது நூல் என்பதே, இந்தப் படைப்புக்குப் போதுமான அளவுக்கு 'புரொமோஷன்' கொடுத்துவிட்டது. தவிர, இந்தியாவின் ஒரு காலகட்ட வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய ஒரு பேரரசு குறித்த கதையைச் சொல்கிறது என்பது, 'அந்தப் படைப்பு எப்போது வரும்?' என்ற எதிர்பார்ப்பைத் தீவிரப்படுத்திவிட்டது.

தற்போது புத்தகம் வெளியாகி ஏறக்குறைய இரண்டு வாரங்களாகிவிட்டது. எப்படி இருக்கிறது புத்தகம்? ஒரு வரியில் சொல்வதானால் 'விக்டரி சிட்டி... ஜெயம்..!'


'விஜயநகரம்' என்பதுதான் 'விக்டரி சிட்டி'. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் தென்னகம் நோக்கிய படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியதில் விஜயநகரப் பேரரசுக்கு முக்கியப் பங்குண்டு.

"துங்கபத்திரை கிருஷ்ணா பேராறுகளுக்குத் தெற்கிலுள்ள தென்னிந்தியப் பெரும்பகுதியில் தென்னாட்டுக் கலாசாரமும் சமயங்களும் அரசியல் முறைகளும் அழிந்துபடாது நிலைபெற்றிருக்கவே விஜயநகரப் பேரரசு தோன்றியதெனக் கூறலாம். கி.பி. 1336 ஆம் ஆண்டில் அமைக்கப்பெற்ற விஜயநகரம் என்னும் நகரமானது 1565 ஆம் ஆண்டு வரையில் பெரியதொரு பேரரசாக வளர்ந்து, ஹொய்சாளர்கள், காகதீயர்கள், சோழர்கள், பாண்டியர்கள் முதலிய அரச வமிசங்களால் ஆளப்பெற்ற நிலைப்பகுதிகளைத் தன்னகத்தே கொண்டு, பெரும்புகழுடன் விளங்கியது" என்று தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'விஜயநகரப் பேரரசின் வரலாறு' என்ற புத்தகம் சொல்கிறது. இதை எழுதியவர் டாக்டர் அ.கிருஷ்ணசாமி.

எல்லோராலும் புனைவு எழுதிவிட முடியாது. அதிலும் வரலாற்றுப் புனைவை வரலாற்றுக்கு நெருக்கமாக சிலரால் மட்டுமே எழுத முடியும். 'வரலாற்றுக்கு நெருக்கமாக' என்ற சொற்களை நான் 'கான்ஷியஸாக'வே இங்கு பயன்படுத்துகிறேன். இருக்கின்ற தகவல்கள், ஆவணங்களை வைத்துக்கொண்டு வரலாற்றைக் கூட எழுதிவிட முடியும். அப்படி எழுதிவிட்டால் அது வரலாறு. பாட புத்தகம். அது புனைவு ஆகாது. ஆனால் வரலாற்றைத் திரிக்காமல், உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். அதையும் நெருடல் இல்லாது சொல்ல வேண்டும். அதை மக்களை மயக்கும் மொழியில் சொல்ல வேண்டும். அந்த மயக்கம், வாசகர்களை விழிப்புறச் செய்வதாகவும் அமைய வேண்டும்.

பலரும் வரலாற்றுப் பாட நேரத்தில் தூங்கி விழுவதும், வரலாற்றுப் புதினங்களைத் தூங்காமல் விழுந்து விழுந்து படிப்பதும் ஏன் என்று நினைக்கிறீர்கள்..? முன்னதில் தேதிகள் முக்கியம், அதனால் தூக்கம். பின்னதில் வார்த்தைகள். அதனால் விழிப்பு. எனவேதான் ருஷ்தியும் இந்நாவலில் சொல்கிறார் இப்படி: "Words are the only victors".

நாவலில் எங்குமே தேதிகளோ, ஆண்டுகளோ இல்லை. மாறாக, நிகழ்வுகளை விவரிப்பதன் மூலம் அந்தந்த காலகட்டத்தை நம் கண் முன் கொண்டு வந்துவிடுகிறார். விஜயநகரப் பேரரசைப் பற்றிச் சொல்லும்போது அதன் நாயகர் கிருஷ்ண தேவராயர் என்பார்கள். ஆனால் இந்த நாவலைப் பொறுத்த வரையில் பம்பா கம்பனா என்பவள்தான் நாயகி!

யார் அந்த பம்பா கம்பனா?  அரசியா, இளவரசியா? அப்படியும் சொல்லலாம். கவிஞரா, வரலாற்றை முன் கூறுபவளா? அப்படியும் சொல்லலாம். 247 ஆண்டு கால ஒற்றை வாழ்க்கை என்பது அவளுக்கு வரமா, சாபமா? கேள்விகள் ஏராளம். அதற்கான பொருத்தமான விடைகளைத் தேடிக்கொள்ளும் பொறுப்பை நமக்கே விட்டுவிடுகிறார் ருஷ்தி.


ஒரு நாட்டில் ஒரு அரசன். அந்த அரசனுக்குப் பல மனைவிகள். அந்த நாட்டின் மீது திடீரென்று ஒரு போர். அதில் அந்த அரசன் கொல்லப்படுகிறான். அந்நாளைய வழக்கப்படி, கொல்லப்பட்ட அரசனின் மனைவிமார்கள், அந்தப் போரில் கணவனை இழந்த பெண்கள் எல்லோரும் கூட்டாக 'சதி'யில் எரிந்துபோகிறார்கள். அப்படி இறந்துபோன பெண்ணொருத்தின் மகள்தான் பம்பா கம்பனா. அந்த நிகழ்வுக்குப் பிறகு, அவளுக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியால் தன் கையில் கிடைத்த சில விதைகளை நிலத்தில் தூவி ஒரு நகரத்தை உருவாக்குகிறாள். அந்த நகரத்தில் மக்களைப் படைக்கிறாள். இந்தப் பூமியில் அவர்கள் பிறந்ததற்கான நோக்கம் என்னவென்று அவர்களின் வாழ்க்கையை அவர்களின் காதுகளில் ஓதி, அவர்களுக்கு உயிர் கொடுக்கிறாள். நகரமும் மக்களும் வளர்கிறார்கள். அரசர்கள் பிறக்கிறார்கள். போர்கள் நடைபெறுகின்றன. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகின்றன. மதங்கள் வளர்கின்றன. கலைகள் உயர்கின்றன. பின்னர், தங்கள் செயல்களால் தங்கள் கண் முன்னேயே அந்த நகரம் அழிவதைப் பார்க்கிறார்கள் அரச வம்சத்தினர்.

இந்தக் கதையை  கவிதை நடையில் எழுதி 'ஜெயா பரஜெயா' (அதாவது, ஜெயா வெற்றி, பரஜெயா வீழ்ச்சி/தோல்வி) என்று அதற்குத் தலைப்பிட்டு, ஒரு பானையில் போட்டு மூடிவிடுகிறாள். பின்னாளில், அனாமதேயர் ஒருவரால் அந்தப் புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகிறது. அந்தக் கற்பனையான புத்தகத்தைப் பற்றிச் சொல்வதன் வழியே, வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் கொண்டு, உண்மையான சில மனிதர்கள், உண்மை போன்று தோற்றமளிக்கும் சில கற்பனைக் கதாப்பாத்திரங்களின் உதவியோடு விஜயநகரப் பேரரசின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ருஷ்தி.

விஜயநகரப் பேரரசின் புகழுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், 'தென்னாட்டில் இந்துக்களை அணி திரட்டியது' என்பது முக்கியமானது. அதுவே கூட அதன் புகழுக்கு ஒரு கரும்புள்ளி என்றும் கூடச் சொல்லலாம். ருஷ்தியின் நாவலை கடந்த பத்து ஆண்டு கால இந்திய அரசியல் வரலாற்றுக்கும் கூட நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். அதைத்தான் ருஷ்தி இவ்வாறு சொல்கிறார்: "History is the consequence not only of people's actions, but also of their forgetfulness".

இந்த நாவலில் நிறைய தமிழ்த் தொடர்புகள் உண்டு. கள்ளர்/மறவர்கள் வருகிறார்கள். சோழர்களும் நடராஜரும் குறிப்பிடப்படுகிறார்கள். மதுரா விஜயம் வருகிறது. சம்புவராயர்கள் பற்றி ஒரு வரி உண்டு. ஆண்டாள் வருகிறாள். அதிரசம் கூட வருகிறது. படிக்கப் படிக்க அவ்வளவு சுவையாக இருக்கிறது!

இந்த நாவலைப் பற்றிய அறிமுகத்தை, இந்த நாவலில் ருஷ்தி எழுதிய சில‌ வரிகளைக் கொண்டே  முடிக்கிறேன். அதுதான் படைப்புக்கான மரியாதையாகவும், அறிமுகத்தின் முத்தாய்ப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

"Fictions could be as powerful as histories, revealing the new people to themselves, allowing them to understand their own natures and the natures of those around them, and making them real".

நன்றி படங்கள்: அமேசான் (புத்தக அட்டை), தி நியூயார்க்கர் (சல்மான் ருஷ்தி)