Saturday, September 22, 2018

புலிகளுக்கு இடையே ஒரு புனிதி

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 16 செப்டம்பர் 2018 

மனித வாழ்க்கையில் மிகப் பெரிய குற்றம் எது? உரிமைகள் மறுக்கப்படுவதுதான். உயிர் வாழ்வதற்கு, பிடித்த தெய்வங்களை வணங்குவதற்கு, தனக்கான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, மனதில் நினைப்பதைப் பேசுவதற்கு, எண்ணங்களை எழுத்தாக்குவதற்கு என மனித உரிமைகள் பல வண்ணங்களைக் கொண்டவை. இவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையானவை, எந்த உரிமைகள் அவசியமில்லாதவை என்ற ஆய்வுகள் எல்லாம் தேவையற்றவை. மனிதர்கள் சுதந்திரமாக வாழ, எவையெல்லாம் அத்தியாவசியமோ அவை அனைத்துமே அடிப்படை உரிமைகள்தான்!

இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது, அதற்கான எதிர்ப்புகளும் எழவே செய்யும். பெரும்பாலும், அதிகார பீடங்களால்தான் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மீறப்படவும் செய்கின்றன. ஒரு ஜனநாயக அமைப்பில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அங்கு எதிர்ப்பு இருந்தே தீரும். மாற்றுக் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்படாத நிலையே ‘பாசிஸ’ நிலை. உலக வரலாற்றில், இந்த ‘பாசிஸம்’ அரசுகளிடம் மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்கிற போராளிக் குழுக்களிடமும் தென்பட்டிருக்கிறது.

இலங்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில், மனித உரிமைகள் கிஞ்சித்தும் பின்பற்றப்படவில்லை. போராளிக் குழுக்களில், மாற்றுக் கருத்துகளை முன் வைத்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள். அப்படிக் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் மிகச் சிலரே, தொடர்ந்து  ‘பாசிஸ’ தலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ராஜனி திராணகம. சிங்கள ராணுவம், இந்திய அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்டக் குழுக்களின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து உலகத்துக்குச் சொல்லி வந்தவர், 1989-ம் ஆண்டு கொல்லப்பட்டார். வரும் செப்டம்பர் 21-ம் தேதி அவரது 29-வது நினைவு நாள்!

  
மருத்துவம் கற்ற போராளி 

1954-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார் ராஜனி ராஜசிங்கம். இவர்களுடையது தமிழ்க் கிறித்துவக் குடும்பம். அதனால் ‘சக உயிர்கள் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கும் இவருடன் பிறந்த சகோதரிகளுக்கும் இளமையிலிருந்தே இருந்தது. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்தவர், தனது மருத்துவக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்தார். மாணவப் பருவத்திலேயே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. நிறைய கூட்டங்களுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்.

அப்படி ஒரு மாணவர் அரசியல் கூட்டத்தில்தான் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தயாபாலா திராணகமவைச் சந்தித்தார் ராஜனி. அவர் ஒரு சிங்கள பவுத்தர். அவரது அரசியல் ஈடுபாடுகளால் ஈர்க்கப்பட்ட ராஜனி, இனம், மதம், மொழி கடந்து 1977-ல் தயாபாலாவை மணம் முடித்து ராஜனி திராணகம ஆனார். அவர்களுக்கு நர்மதா, சரிகா என இரண்டு மகள்கள் உண்டு.

ராஜனியின் அக்கா நிர்மலா, அமெரிக்காவுக்குப் படிக்கப் போனார். அவர் போன நேரம், வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்து, மாணவர்கள் போராடினர். அது நிர்மலாவுக்கு அரசியல் ரீதியான விழிப்புணர்வைத் தந்தது. இடதுசாரி அரசியலைத் தேர்வு செய்தார் அவர். படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அவர், விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்.

ஒருமுறை, காயமடைந்த ‘இயக்கத்தினர்’ ஒருவருக்கு உதவ நிர்மலாவை நாடினார். நிர்மலா, ராஜனியை நாடினார். ராஜனி அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தார். அப்படித்தான் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வந்தார்.

ஆவணப்படமான போராட்ட வாழ்க்கை 

மருத்துவப் படிப்பை முடித்தவுடன், சில காலம் யாழ்ப்பாண மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார் ராஜனி. பின்னர் 1983-ம் ஆண்டு காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்று, உடற்கூறியல் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க இங்கிலாந்தில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். பிறகு லிவர்பூல் மருத்துவக் கல்லூரியில் மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கை நரம்புகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

  
இந்த நேரத்தில்தான், நிர்மலா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்தில் இருந்துகொண்டு, தனது சகோதரியின் விடுதலைக்காகக் குரல் எழுப்பி வந்த ராஜனி, லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சிலருடன் இணைந்து, இலங்கையில் சிங்கள ராணுவம் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் எடுத்துரைத்து வந்தார். பிறகு, நிர்மலா விடுதலையானார்.

80-களின் மத்தியில் தாயகம் திரும்பிய ராஜனி, யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில்தான் இந்திய அமைதிப் படைகள் வந்தன. சிங்கள ராணுவம், அமைதிப் படைகள் ஆகியவை அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து வந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். பின்னர் அவற்றை ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார். அவர்களது மறுவாழ்வுக்காக ‘பூரணி மகளிர் மையம்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார்.

அதே நேரம், அவரும் அவரது சக ஆசிரியர்களும் இணைந்து ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். சிங்கள ராணுவம், அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் ஆகியோரின் மனித உரிமை மீறல்களை ‘தி புரோக்கன் பாமைரா’ (தமிழில், ‘முறிந்த பனை’ என்று வெளியானது) என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்தனர்.

  
ராஜனி தனியாகத் தொகுத்த ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனும் ஆவணமும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றது. 2005-ல் அந்த ஆவணத்தின் பெயரிலேயே ராஜனி திராணகம குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது மகள் சரிகாவே ராஜனியாக நடித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் பிரபல எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாஜ்ஜி.

நாவலில் நிலைபெற்ற ராஜனி 

ராஜனியை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் 2014-ல் ‘சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி’ எனும் நாவலை டி.டி.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அது தற்போது,  ‘சுகந்தி அலைஸ் ஆண்டாள் தேவநாயகி’ எனும் தலைப்பில், பிரியா நாயர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

போருக்குப் பிந்தைய இலங்கையில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் இந்த நாவலில், ராஜனியை ஆண்டாள் தெய்வநாயகி எனும் கற்பனையான பெண் கடவுளின் வழித் தோன்றலாகச் சித்தரித்து, அந்தக் கடவுளைப் பற்றியக் கதையைச் சொல்வதன் மூலமாக, இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரின் பாதிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

 
‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்’ என்று சொன்ன ராஜனியின் வார்த்தைகள் பலித்தன. விடுதலைப் புலிகளால் அவர் கொல்லப்பட்டார். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

‘முறிந்த பனை’ புத்தகத்தின் ஆரம்பத்தில் ‘ராஜனியை யார் கொன்றார்கள் என்பது முக்கியமல்ல. அவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியே முக்கியம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாசிஸம்’தான் அந்தக் கேள்விக்கான பதில் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று ‍(சற்றே மாறுதல்களுடன்)

Thursday, September 6, 2018

பேனாவிடம் தோற்றுப் போன ‘பாசிஸ’ தோட்டா..!

ந.வினோத் குமார்

‘குற்றங்களை நீக்குபவர்’ என்ற பொருளில் அமைந்ததுதான் ‘ஆசிரியர்’ எனும் சொல். மாணவர்களிடத்தில் இருக்கும் குற்றம், குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தும் ஆசிரியர் எப்படி மதிக்கத்தக்கவரோ, அதேபோல, சமூகத்தில் நடக்கும் குற்றங்களைத் தன் பேனாவின் மூலம் நீக்க முற்படுகிற பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களே! 

அப்படியான ஆசிரியர்களில் ஒருவர்தான் கெளரி லங்கேஷ். அதற்கான பரிசு, அவர் ஆசிரியர் தினத்தில் கொல்லப்பட்டது! 

கன்னட மொழி பத்திரிகை உலகத்தின் முகங்களில் ஒன்றாக ‘லங்கேஷ் பத்திரிக்கே’வும், 2005-க்குப் பின்னர் ‘கெளரி லங்கேஷ் பத்திரிக்கே’வும் விளங்கின என்றால் அது மிகையில்லை. என்ன… அந்த முகம், ஒப்பனைகளற்ற முகம். அரசியலை சுயலாபத்துக்காக ஆராதிக்காத பேனாக்களில் ஒன்று, கெளரியினுடையது! 

நாட்டை, பண்பாட்டை காவிமயப்படுத்துவதற்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தவர் கெளரி. அந்தக் கண்டனங்களை எதிர்கொள்ள முடியாத இந்து பாசிஸ வெறிக்கு 2017-ல், இதே தினத்தில் அவர் பலியானார். ஓர் ஆண்டாகியும், அன்றைய தின இரவில் நடந்த கொலைக்கு, இன்னும் விடியல் வரவில்லை. 

கெளரி லங்கேஷின் மரணத்துக்கு முன்பு வரை, அவரைப் பற்றியோ, அவரது செயல்பாடுகள் பற்றியோ கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, பொது மக்களிடையே பரவலாக அறியப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்றே கருதுகிறேன். ஆனால் அவர் கொல்லப்பட்ட, அடுத்த இரண்டு மாதங்களில் அவரைப் பற்றிப் பலரும் தெரிந்துகொண்டார்கள். அதற்கு முக்கியக் காரணமாக விளங்கியது, ‘தி வே ஐ ஸீ இட்’ எனும் புத்தகம். 

கெளரி லங்கேஷ் எழுதிய கட்டுரைகள், கெளரி லங்கேஷ் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர், கெளரியின் நண்பரும் பேராசிரியருமான சந்தன் கவுடா. ‘நவயானா’ பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் 2017 நவம்பர் மாதத்தில் வெளியானது. 

  
என்னதான் கெளரி, இதழியல் படிப்பைப் படித்திருந்தாலும், அவர் எடுத்த உடனே, அவரது தந்தை ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிக்கே’வில் சேர்ந்துவிடவில்லை. பெரிய காரணம் எதுவும் இல்லை, அவருக்கு கன்னடம் அவ்வளவாகத் தெரியாது, அதனால்! எனவே, ஆங்கில இதழியலில் கவனம் செலுத்தினார் கெளரி. அவரது ஆரம்பகால ஆங்கில இதழியல் கட்டுரைகள் சில, இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. 

புட்டபர்தி சாய் பாபாவின் தில்லுமுல்லுகள், 80-களில் பெங்களூருவை மிரள வைத்த சைக்கோ கொலைகாரன் ‘நாகராஜா’ (அவனைச் சிறையில் வைத்துப் பேட்டி எடுத்திருக்கிறார் கெளரி), ராஜீவ் கொலையில் ஈடுபட்ட சிவராசனை ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ பெங்களூருவில் வைத்துச் சுற்றி வளைத்தபோது, அவர்களுடன் கூட இருந்து, வழங்கிய நேரடி ரிப்போர்ட் என கெளரியின் ‘ரிப்போர்ட்டேஜ்’ அனைத்தும், ஒரு ‘க்ரைம் திரில்லர்’ நாவலைப் போன்று அவ்வளவு விறுவிறுப்புடனும், தகவல் செறிவுடனும் எழுதப்பட்டிருக்கின்றன. 

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு, 2000-ல் ‘லங்கேஷ் பத்திரிக்கே’வின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் கெளரி. அப்போது, ‘இவருக்கு கன்னடம் தெரியாதே.. எப்படிப் பத்திரிகையை நடத்துவார்?’ என்று பலரும் கேலி பேசினர். ஆனால், தனக்கு கன்னடம் தெரியாது என்பதை மறைக்காததுடன், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியால் கன்னடத்தை நன்கு கற்கவும் செய்தார் அவர். அந்த விடாமுயற்சியும் பயிற்சியும்தான், தாய்மொழியைக் கற்காதவர்களை ‘வேர்களற்ற ஆன்மாக்கள்’ என்று கெளரியை எழுதச் செய்தன. 

இந்தப் புத்தகத்தில் அவர் கன்னடத்தில் எழுதிய கட்டுரைகளில் சில, ஆங்கிலத்தில் வெவ்வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்த அதே தெள்ளிய எழுத்து நடை, மொழிபெயர்ப்புக் கட்டுரைகளிலும் காண முடிகிறது. வேறு வேறு நபர்கள் மொழிபெயர்த்திருந்தாலும், அந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தட்டுத் தடங்கலைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு ‘ஸ்மூத்’ ஆக இருக்கிறது ‘ரைட்டிங் ஃப்லோ’. ஆங்கில, கன்னட மொழிகளின் மீது கெளரிக்கு இருந்த வளம் காரணமாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. இந்த வெற்றிக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 

ஆங்கில மொழி ‘அதிகாரத்தின் கருவி’ என்ற புரிதலை கெளரி கொண்டிருந்த காரணத்தால்தான், ‘மோடியின் ஆங்கிலம் மோசமாக இருக்கிறது’ என்று சிலர் கேலி செய்தபோது, ‘கருத்தியல் ரீதியான எதிரியை, அவரது ஆங்கில மொழித் திறன் குறைபாட்டைப் பயன்படுத்தி கேலி செய்யக் கூடாது’ என்றார். 

சம்பளத்துக்காக அல்லாமல், சமூகத்துக்காகப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் இன்று ஒரு குழப்பம் உண்டு. தான் ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’டாகவும் இருக்க வேண்டுமா அல்லது வெறுமனே பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிட வேண்டுமா என்பதுதான் அது. இந்தக் குழப்பத்துக்கு கெளரி தரும் பதில் இது: 

“நமது ‘ஜர்னலிஸ’த்துக்கு இதயத்தையும், ஒரு பார்வையையும் ‘ஆக்டிவிஸம்’ தருகிறது என்றால், நமது ஆக்டிவிஸத்துக்கு ஒரு முழுமையான புரிதலையும் கூர்ந்து அறியும் திறனையும் ஜர்னலிஸம் தருகிறது. எனவே, இன்றைய காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் ‘மக்கள் நலன் சார்ந்து’ இயங்குபவராக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் தன்னளவில் ஒரு ஆக்டிவிஸ்ட்டாக இல்லாமல் அது முடியாது!” 

சமீபத்தில், கெளரியைப் போலவே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி, உயிர் தப்பித்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், கெளரி குறித்து எழுதிய கட்டுரை இந்தப் புத்தகத்தில் உண்டு. அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் இப்படி இருக்கின்றன:

“கெளரி எப்படி இறந்தார் என்பதை நாம் மறவாமல் இருப்போம். போலவே, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!”

கெளரி நம் நினைவில் வாழ்வார்… ‘பாசிஸ’ தோட்டாவைச் சுமந்துகொண்டு!

Monday, September 3, 2018

கடல் பிரார்த்தனை!

ந.வினோத் குமார்
 
2015-ம் ஆண்டு, செப்டம்பர் 2-ம் தேதி. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த தருணம். அங்கிருந்து பலர், அகதிகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அப்படிப் பயணப்பட்டவர்களில் சிலர், ஐரோப்பிய நாடுகளில் அரவணைப்பைத் தேடிச் சென்றனர்.

அந்தப் பயணத்தில், பெரும்பாலான மக்கள் மத்திய தரைக்கடலில், ரப்பர் படகுகளில், எந்தப் பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல் சென்று, புயலடித்தபோது கவிழ்ந்த படகிலிருந்து விழுந்து, நீரில் மூழ்கி இறந்தனர். அப்படி இறந்தவர்கள் சிலரின் சடலங்கள் துருக்கியின் கரையை அடைந்தன. அந்தச் சடலங்களில் ஒன்றுஆலன் குர்திஎனும் பெயரைத் தாங்கி இருந்தது.

சிறுகதை அஞ்சலி

மெத்தையில், குப்புறக் கவிழ்ந்து ஆழ்ந்து உறங்குவது போல, மூன்று வயது ஆலன் குர்தியின் உடல் கரையில் கிடந்தது. பத்திரமாய்க் கரையில் சேர்த்துவிட்ட திருப்தியில் அலைகள் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியான அவனின் படத்தைக் கண்டு, பலர் கண்ணீர் சிந்தினர். கடலில் நிராதரவாக விடப்பட்ட குர்தி, இன்றைய அகதிகள் சந்திக்கும் இன்னல்களுக்குச் சாட்சியாக வரலாற்றில் நின்றுவிட்டான்!

அவன் மறைந்து, இந்த நாளுடன், மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எனினும், அகதிகளின் நிலையில் எந்தப் பெரிய மாற்றமும் வந்துவிடவில்லை. இந்நிலையில், ஆலன் குர்தியை மீண்டும் நினைவுகொள்வதன் மூலம், அகதிகளின் நிலையை உலகுக்கு எடுத்துச் செல்ல முடியுமென்று நம்பியிருக்கிறார், காலித் ஹுசைனி. அவர் ஒரு மருத்துவர். தி கைட் ரன்னர்எனும் அற்புதமான நாவலை நாவலாசிரியர்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி, சிறுகதை. ஆலன் குர்தியின் நினைவாக, அவர்ஸீ பிரேயர்எனும் சிறுகதையை எழுதினார். கதையின் ஒவ்வொரு வரியும் கவித்துவச் சோகத்துடன் நம்மை எதிர்கொள்கின்றன. 

சிரியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதியாகச் செல்ல, கப்பலுக்காகக் காத்திருக்கும் பொழுதில், சிரியாவிலிருந்து தப்பித்த தந்தை, தன் மடியில் படுத்திருக்கும் மகனுக்குச் சொல்வதுபோன்ற, கடித வடிவத்தில் அந்தக் கதையை எழுதியிருந்தார். இது ஒரு வகையில், தனிமையில் பேசி நடிக்கும்மோனோலாக்வகைமையைச் சேர்ந்த ஒரு படைப்பு. அந்தச் சிறுகதை தற்போது புத்தகமாகியிருக்கிறது.  

 
டான் வில்லியம்ஸின் அற்புதமான நீர் வண்ண ஓவியங்களுடன் ப்ளூம்ஸ்பரி பதிப்பக வெளியீடாகச் சமீபத்தில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம். விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து கிடைக்கக்கூடிய வருவாயில், ஒரு பவுண்டை (இந்திய மதிப்பில் சுமார் 92 ரூபாய்) அகதிகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துக்கு வழங்கப்பட உள்ளதாகப் புத்தகத்தின் பின் அட்டையில் கூறப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த பொக்கிஷம்

இந்தக் கதையை, சுமார் 7 நிமிடங்கள் ஓடக்கூடிய மெய்நிகர் படமாக உருவாக்கி அதை 2017-ல் யூடியூப்பில் தவழ விட்டிருந்தார் ஹுசைனி. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கும் அவர் எழுதியஸீ பிரேயர்கதையின் இறுதி வரிகள் இப்படியிருக்கின்றன:

இந்த இரவில் நான் நினைத்துப் பார்ப்பதெல்லாம், கடலின் ஆழத்தையும், பரப்பளவையும், அலட்சியத்தையும்தான். இதனிடமிருந்து உன்னைக் காப்பதற்குத் திராணியற்றவனாக இருக்கிறேன். என்னால் செய்யக் கூடியதெல்லாம் பிரார்த்திப்பது மட்டும்தான். கரை தென்படுவதற்கு முன், இந்த நீரில் நாம் மூழ்கிவிடாமல் இருக்க, கடவுள் இந்தக் கப்பலைச் செலுத்துவாராக.

 
ஏனென்றால், நீ விலையுயர்ந்த பொக்கிஷம், மர்வான். காணக் கிடைக்காத மிக விலையுயர்ந்த பொக்கிஷம். அது இந்தக் கடலுக்குத் தெரியும். என் பிரார்த்தனை இந்தக் கடலுக்குத் தெரியும்”. 

நன்றி (ஆலன் குர்தி படம்): aljazeera.com