Wednesday, December 25, 2013

தி மிஷனரி பொஸிஷன்: மதர் தெரசா இன் தியரி அண்ட் இன் ப்ராக்டீஸ்... கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் (The Missionary Position: Mother Teresa in Theory and in Practice - Christopher Hitchens)



.வினோத் குமார்

நோயாளி: "ஐயோ! நோயால் என் உடல் வேதனையை அனுபவிக்கிறதே!"

தெரசா: "இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று அர்த்தம்!"

நோயாளி: "அப்படியென்றால், அவர் முத்தமிடுவதை நிறுத்தச் சொல்லுங்கள்!"

*********************
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். அந்த அன்பு எந்தவித எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறு கொண்டிருந்தால் அது வியாபாரம். ஆனால் 'அன்பு செலுத்துகிறேன்' என்ற போர்வையில் கடவுளின் பெயரைச் சொல்லி, மதத்தைப் பரப்பினால் அதை எவ்வாறு புரிந்து கொண்டு அணுகுவது?

'அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாகவே உள்ளது' என்று தன் இறுதிநாள் வரையிலும் சொல்லி வந்தவர் அன்னை தெரசா. அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து உலகமே அந்த அல்பேனிய கன்னியாஸ்திரியை 'அன்னை' என்றழைத்தது. ஆனால் அவர் அன்னையாக மட்டுமே இருந்திருந்தால் பிரச்னையில்லை. அதையும் தாண்டி நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தை உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் பரப்ப ஒரு முக்கிய 'ஐகான்' ஆகவும் இருந்திருக்கிறார்.

எப்படி?

அந்தக் கேள்விக்கான பதிலைத் தன் புத்தகத்தின் மூலம் தருகிறார் கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ்.


ஹிட்சென்ஸ் ஒரு நாத்திகர் என்பது மட்டுமே அவர் இத்தகையதொரு விமர்சனப்பூர்வமான புத்தகத்தை எழுதக் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. 'அது ஏன்? இது எவ்வாறு?' என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, தான் முன் வைக்கும் வாதங்களுக்குத் தேவையான சாட்சியங்களையும் தரும் ஒரு சிறந்த புலனாய்வுப் பத்திரிகையாளராகவும் அவர் இருந்ததால் இந்தப் படைப்பு சாத்தியமாயிற்று.

காலம் காலமாகப் புனிதம் என்று நம்பப்பட்டு வந்த ஒன்றை கேள்விகளுக்கு உட்படுத்துவதற்கு மிகவும் துணிச்சலும், அசாத்தியமான உழைப்பும் தேவைப்படும். அதுவும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்டமதம் சார்ந்த ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரை விமர்சிக்க தனித்துவமான லாவகம் வேண்டும். அந்த லாவகத்தை ஹிட்சென்ஸ் கொண்டிருந்ததால்தான் தன் படைப்பை கிரேக்கத்தில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த, சமயங்கள் மீது விமர்சனம் செய்து வந்த ஸெனோஃபேன்ஸ் எனும் அறிஞரின் கருத்தை முன் வைத்துத் தொடங்குகிறார்.

"எத்தியோப்பியர்கள் தங்கள் கடவுளை கருப்பு நிறமாகவும் மேல்நோக்கி வளைந்த மூக்கு உள்ள ஒன்றாகவும் கருதினர். திரேசியன்ஸ் நீல நிற கண்கள் கொண்டவராகவும் சிவப்பு கூந்தல் உடையவராகவும் கருதினர். ஆனால் குதிரைகளுக்கோ அல்லது சிங்கங்களுக்கோ கைகள் இருந்தால் அல்லது மனிதர்களைப் போன்று வரையத் தெரிந்திருந்தால் தங்களின் கடவுளைத் தங்களைப் போன்று உரு கொண்ட ஒன்றாகவே வரையும்" என்கிறார் ஸெனோஃபேன்ஸ்.

ஹைத்தியின் கொடுங்கோலர்களான ழான் க்ளாட் துவாலியர் மற்றும் மிஷெல் துவாலியர் தம்பதியோடு (பின்னாளில் இவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்) சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் பின்புலத்தில் இருந்து தெரசா மீதான விமர்சனப் பார்வையை முன் வைக்கத் தொடங்குகிறார் ஹிட்சென்ஸ். அத்தம்பதியரின் பெயர் உலகமெங்கும் நாறிக் கிடந்த சமயத்தில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளஹைத்தியின் தேசிய விருதை தெரசாவுக்கு வழங்குகிறார்கள். விருதுடன் சேர்த்து பண முடிப்பும் கிடைக்கிறது. அந்தப் பணம் எல்லாம் நாட்டின் மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் சூறையாடப்பட்டது என்பது 'அன்னைக்கு' தெரியாதாம். பரிசை வாங்கிவிட்டு 'உங்கள் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்' என்று கூசாமல் புகழ்ந்துவிட்டு வருகிறார் தெரசா.


அமெரிக்காவின் ஊழல்வாதி மரியன் பேரியின் மருத்துவமனையைத் திறந்து வைக்கச் செல்கிறார் தெரசா. அப்போது சுமார் கால் நூற்றாண்டு காலம் போராடி கொண்டு வந்த தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை ஒரே நொடியில் அழித்த ஹிலாரி கிளிண்டனும் கூட இருக்கிறார்.  ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்திருந்தபோது தெரசா ஆரம்பித்த 'நிர்மல் ஹிருதய்'க்குச் சென்றார்.  அதற்குக் கைமாறுதான் இந்தப் பயணம்! எப்போதும் வெறும் பருத்தி டையாபர் மட்டுமே உடுத்தியிருந்த குழந்தைகள் ஹிலாரி வந்த போது மட்டும் அமெரிக்க பேம்பர்களை அணிந்திருந்தனவாம்.

மருத்துவமனையைத் திறந்து வைக்கும் முந்தைய நாள் வாஷிங்கடனில் உள்ள 'கருப்பு நகரமான' அனகோஸ்டியாவில் இருந்து சிலர் தெரசாவைச் சந்திக்க வருகிறார்கள். தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதையும், வறுமையில் இருப்பதைப் பற்றியும் தெரசாவிடம் கூறுகிறார்கள். அப்போது அவர்களுக்கிடையே நடந்த உரையாடலில் ஓரிடத்தில் அவர்கள் கேட்கிறார்கள்..

"ஏழைகள் எப்போதும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா?"

தெரசா சொல்கிறார் இப்படி... "ஏழை துன்பப்படுவது என்பது மிகவும் அழகானது. அதை கிறிஸ்துவும் அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்கிறார். ஏழைகளின் துன்பம்தான் உலகத்துக்கு உதவுகிறது!"

இப்படியான ஒருவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் புனிதர் பட்டம் என்பதற்குப் பின் உள்ள சில அடிப்படை உண்மைகளை முன் வைத்து தெரசாவுக்கு அதை வழங்குவது நியாயமானதுதானா என்ற கேள்வியை எழுப்புகிறார் ஹிட்சென்ஸ்.

1588 முதல் 1988 வரை வெறும் 679 நபர்களுக்கு மட்டும் புனிதர் எனும் நிலையை வழங்கியிருந்தது வாடிகன். ஆனால் இரண்டாம் போப் ஜான் பால் காலத்தில் (ஜூன் 1995 வரை) 271 பேருக்குப் புனிதர் பட்டமும், 631 பேருக்கு அருளாளர் பட்டமும் வழங்கப்பட்டது. இக்காலத்தில் வாடிகன் நகரம் ஒரு சமய தொழிற்சாலையாகவே இயங்கியது என்று சொன்னால் அதில் தவறில்லை.

தெரசாவைப் போன்ற துறவிகள், தொழுநோயாளி ஒருவரை குணப்படுத்தினால் உலகத்தில் உள்ள எல்லா தொழுநோயாளிகளையும் குணப்படுத்த முடியாதா என்று கேள்வி எழும். தெரசாவால் இதுவரை எந்த அற்புதமும் நடைபெறவில்லை என்பதால் அவருக்கு அருளாளர் பட்டத்தையோ, புனிதர் பட்டத்தையோ வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது இன்றைய வாடிகன். தெரசாவை இது வேதனை கொள்ளச் செய்யும் என்றாலும், அவரின் முற்றும் முதலுமான நோக்கம் அதை அடைவது அல்ல. மாறாக, 'மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி'யை உலகம் முழுக்க நிறுவுவதில்தான் அவரின் நோக்கம் இருந்தது.

இது இப்படியிருக்க, தெரசாவின் 'ஒளிவட்டம்' படம் பிடித்த கதை தெரியுமா உங்களுக்கு?

தெரசாவைப் பற்றி வெளிவந்துள்ள புத்தகங்களில் மிகவும் முக்கியமானது மால்கம் மக்கரிட்ஜ் எழுதிய 'சம்திங் பியூட்டிஃபுல் ஃபார் காட்'. தெரசா தன் 'மிஷனரி' நோக்கத்தை நிறைவேற்ற அவருக்கு முக்கியத் தேவையாக இருந்தது பஞ்சமும் வறுமையும் நோயும் சூழ்ந்த ஒரு நகரம். அதற்கு அவர் தேர்வு செய்த இடம் கல்கத்தா. ஆனால் மக்கரிட்ஜ் தன் புத்தகத்தில் விவரிப்பது போல கல்கத்தா அப்படி ஒன்றும் மோசமான நகரமாக இருக்கவில்லை.

'நிர்மல் ஹிருதய்' பற்றி அறிந்து கொள்ள ஹிட்சென்ஸ் இந்தியா வந்திருந்த போது தான் பார்த்த கல்கத்தாவைப் பற்றி சிலாகித்து எழுதுகிறார்.

"...கல்கத்தா மிகவும் ஏழ்மையானது, ஜன நெரிசலானது, அழுக்கானது என்பதெல்லாம் ஓரளவுக்கு மேல் அதிபுனைவு செய்யப்பட்ட ஒன்று. அங்கிருக்கும் மக்கள் போராடுகிறார்கள், பணியாற்றுகிறார்கள் முக்கியமாக அவர்கள் பிச்சை எடுப்பதில்லை. இது தாகூர், ரே, போஸ், மிருணாள் சென் ஆகியோர் பிறந்த நகரம். அங்கு திரைப்படங்கள், திரையரங்குகள், பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் அனைத்துமே உயர்ந்த ரகம் கொண்டவை. ரகுபிர் சிங்கின் புகைப்படங்கள் நகரின் கட்டிடக்கலையை எடுத்தியம்புகின்றன. மதச்சார்பற்ற இடதுசாரி அரசியல் பிரதானமானதாக உள்ளது. அங்கு மிகவும் வரவேற்கத்தகாத ஒரு விஷயமாக இருந்தது மதம் என்பதுதான்".

மக்கரிட்ஜ் தெரசாவைப் பற்றி பி.பி.சி.க்காக ஓர் ஆவணப்படம் எடுத்திருந்தார். அதன் ஒளிப்பதிவாளர் கென் மக்மில்லன் மிகவும் புகழ் பெற்றவர். அவர்கள் 'நிர்மல் ஹிருதய்' உள்ளே படம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தனர். அங்கு ஒளி மிகவும் குறைவாக இருந்தது. கென் மக்மில்லன் அப்போதுதான் கோடக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருந்த பிலிம் ரோலைக் கொண்டு படம்பிடித்தார். அதை பிராசஸிங் செய்த பின் பார்த்த போது மெல்லிய ஒளி படர்ந்திருந்தது. அது இயற்கையான ஒளிதான் என்று மக்மில்லன் சொன்னாலும், மக்கரிட்ஜ் அதை தெய்வீக ஒளி என்று எழுத அது உலகம் முழுவதும் பரவியது. இதைத்தான் தெரசா செய்த அற்புதம் என்று சொல்லித் திரிபவர்களும் இருக்கிறார்கள்.

இது எல்லாவற்றையும் விட மிகவும் தூற்றத் தக்க ஒரு விஷயமாக இருந்தது 'நிர்மல் ஹிருதய்' நோயாளிகள் படும் துயரம். பிரபல 'லான்செட்' மருத்துவ ஆய்வு இதழின் அன்றைய ஆசிரியர் ராபின் ஃபாக்ஸ் அங்கு தான் பார்த்த நிலைமை எழுதுகிறார். மலேரியாவால் அவதிப்பட்ட நோயாளியின் ரத்தத்தைப் பரிசோதிக்க அங்கு அனுமதியில்லை. காரணம், தெரசா வகுத்த 'சேவையின் நிபந்தனை' அது. அங்கு ஒரு நோயாளிக்குப் பயன்படுத்திய ஊசியை 'ஸ்டெரிலைஸ்' கூட செய்யப்படுவதில்லை என்று அங்கு பணியாற்றிய தன்னார்வலர் பெண்மணி ஒருவரே எழுதுகிறார்.


மேலும், அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்தால் ஒரு நோயாளி குணமடைவார் என்ற நிலையிருந்தும் அவ்வாறு செய்யப்படவில்லை. காரணம், ஒருவருக்குச் செய்தால் அங்குள்ள எல்லோருக்கும் செய்ய வேண்டுமே என்கிறார் அங்கு பணியாற்றிய ஒரு சகோதரி. ஆனால் 'அன்னைக்கு' நோய் உபாதைகள் இருந்த போது அவர் உலகின் சிறந்த மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு ஏன் நியூயார்க்கில் ப்ரான்க்ஸ் நகரத்தில் தெரசா ஆரம்பிக்க இருந்த இல்லத்துக்கு மாற்றுத் திறனாளிகள் அதிகம் வருவர். அவர்களுக்காக 'எலிவேட்டர்' வழங்க முன் வந்தது அரசு. ஆனால் அன்னை அதைத் தவிர்த்தார்.

தன் இல்லத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளிடம் 'உங்களுக்கு சொர்க்கத்துக்குப் போக டிக்கெட் வேண்டுமா?' என்று தாதிகள் கேட்பார்களாம். அந்நோயாளியும் என்ன சொல்வார் 'ஆம்' என்பார். உடனே, அவரின் நெற்றியில் மருந்திடுவதுபோல பாவ்லா காட்டி மதம் மாற்றத்துக்கான மந்திரங்களை உதடுகளுக்குள்ளே ஓதி அவரை கிறிஸ்தவராகவே அனுப்பி வைப்பார்களாம். சேவை என்ற பெயரில் தெரசா மதம் மாற்றம் செய்ததற்கு இது ஓர் உதாரணம்.

தவிர, வங்காளதேசப் போரின் போது எதிரிகளால் கற்பழிக்கப்பட்ட பெண்களிடம் தெரசா ஒரு கோரிக்கையை முன் வைத்தார். 'தயவு செய்து உங்கள் கருவைக் கலைத்து விடாதீர்கள்' என்பதுதான் அது. ஒரு பெண்ணாக இதை அவர் சொன்னது எத்தகைய வலியை அப்பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்?

வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளிலும் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கும் அக்குடும்ப உறுப்பினர்களின் ஆயுட் காலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் அடிப்படையில் உணவு, கல்வி என அனைத்தையும் பார்க்கையில் கருக்கலைப்பு என்பது ஒருவரின் உரிமை. ஆனால் கருக்கலைப்பைத் தடை செய்ய விதண்டாவாதம் புரிந்தவர் தெரசா. இப்படி இன்னும் பல உண்மைகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்துகிறார் ஹிட்சென்ஸ்.

இறுதியாக அவர் எழுதிச் செல்லும் வாக்கியங்களைக் கொண்டு முடிப்பது இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக அமையும்.

"As Edward Gibbon observed about the modes of worship prevalent in the Roman world, they were 'considered by the people as equally true, by the philosopher as equally false and by the magistrate as equally useful'. Mother Teresa descends from each element in this grisly triptych".

புனிதங்களின் மீது விமர்சனப் பார்வை உடையவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது!

நன்றி: 1) acelebrationofwomen.org (மிஷெல் துவாலியருடன் தெரசா படம்)
               2) magnumphotos.com (நிர்மல் ஹிருதய் படம்)


 

Sunday, December 8, 2013

தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்ட்டி



தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்ட்டி (The Bridges of Madison County)

ந.வினோத் குமார்

உச்சகட்ட காமத்தின் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பரவசம் போன்றதான ஒன்றை அனுபவித்தபடியே இந்தப் பதிவை எழுதுகிறேன். ஒரு புத்தகத்தைப் படிப்பது மட்டுமல்லாது அதைப் பற்றி பேசுவது, எழுதுவது கூட இவ்வளவு மகிழ்வைத் தருமா என்பது நினைக்க நினைக்க ஆச்சர்யமாக உள்ளது.

ஒரு நாடோடி. ஐயோவா நகரத்தில் பண்ணையை கவனித்துக் கொண்டு வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரனின் மனைவி. நாடோடிக்கும் ராணுவ வீரனின் மனைவிக்கும் நிகழும் மத்திம வயது நான்கு நாள் காதல், அது அந்த இருவரின் வாழ்விலும் உருவாக்கும் மாற்றங்கள்... அந்தக் கதையை முன்னும் பின்னுமாக 'ஃப்ளாஷ்பேக்' முறையில் சொன்ன விதத்தில் வாசக இதயத்தினுள் கடத்தப்படும் சோகம்... இதுதான் 'தி பிரிட்ஜஸ் ஆஃப் மேடிசன் கவுண்ட்டி' என்ற நாவல் என்று இறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதுவாகவும் கூட இருக்கலாம். 'இப்படித்தான் காதல் இருக்க வேண்டும்' என்று யாரேனும் விதிகள் வகுக்க முடியுமா என்ன? அதுபோன்றுதான் இந்தப் புத்தகமும். வாசிக்கிற ஒவ்வொருவரின் மனதிலும் வேறு வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் நாவல் இது!

ராபர்ட் ஜேம்ஸ் வேல்லர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல் இது. தன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல இது உண்மை நிகழ்வுகளும் புனைவும் சேர்த்து உருவாக்கப்பட்ட படைப்பு.



ராபர்ட் கின்கெய்ட் என்பவர் தன் 50களில் இருக்கிறார். விவாகரத்துப் பெற்றவர். 'நேஷனல் ஜியாகரஃபி' இதழுக்குப் புகைப்படம் எடுப்பவர். காடுகள், மலைகள், பாலைவனங்கள் என உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று அரிய விஷயங்களை புகைப்படமாக எடுத்து வாசகர்களை வியக்க வைப்பவர். சில சமயம் தானே கட்டுரைகளையும் எழுதுபவர். ஒரு அசைன்மென்ட்டுக்காக அமெரிக்காவின் ஐயோவா நகரத்தை தேடிச் செல்கிறார்.

ஓரிடத்தில் வழி கேட்க ஒரு வீட்டின் முன் தன் காரை நிறுத்துகிறார். அப்போது அங்கு அவருக்கு உதவுபவர் ஃபிரான்செஸ்கா ஜான்சன். முன்னாள் ராணுவ வீரனின் மனைவி. அவளுக்கு இரண்டு குழந்தைகள். 40களில் இருப்பவள்.

ராபர்ட் கின்கெய்ட்டைப் பார்த்தவுடனே ஃபிரான்செஸ்காவின் மனதில் இனம்புரியாத ஒரு தடுமாற்றம். 'ரோஸ்மேன் பிரிட்ஜ்'க்கு வழிகாட்டிய படியே கின்கெய்ட் உடன் பயணிக்கிறாள் ஃபிரான்செஸ்கா. அன்று மாலை வரை அவளின் வீட்டில் களைப்பாறுகிறார் ராபர்ட் கின்கெய்ட். ஃபிரான்செஸ்காவின் உதவி செய்யும் பாங்கு, அவளின் ஒவ்வொரு நகர்விலும் உதவி என்பதைத் தாண்டிய ஓர் ஈர்ப்பு, அதில் தனக்கான காதலைத் தேடுதல் என்று கின்கெய்ட் அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறார். அன்று இரவு நகரின் வெளியே இருக்கும் தன் ஹோட்டல் அறைக்குத் திரும்பி விடுகிறார் கின்கெய்ட்.

அப்புறம்... அடுத்த நாள். அதற்கடுத்து இரண்டு நாள். மொத்தம் நான்கு நாட்கள். இந்த நான்கு நாட்களுக்களில் இருவருக்கிடையில் நடைபெறும் உரையாடல்களும், பரஸ்பர அன்பு கூறுதலும்... அடடா.. வாசிக்க வாசிக்க.. நாம் ராபர்ட் கின்கெய்ட் ஆகவோ, ஃபிரான்செஸ்கா ஆகவோ மாறிவிடுகிறோம்.

'அவனது அறையில் அவனுக்குப் பிடித்த வாசகங்களை எழுதி ஒட்டி வைத்திருப்பான்' என்று நாயகனை அறிமுகப்படுத்துவதிலேயே சுவாரஸ்யத்தைக் கூட்டி விடுகிறார் நாவலாசிரியர். 'நான் அவளை விட்டு விலகியிருந்ததைக் காட்டிலும் அதிகமாக என்னைவிட்டு அவள் விலகிப்போனாள்' என்று கின்கெய்ட்டின் தனிமையை எடுத்துரைப்பதாகட்டும், 'நான் மனிதனாவதற்கு நீண்ட காலம் முன்பு அம்பாக இருந்தேன்' என்று நாயகனின் இயல்பை விளக்குவதாகட்டும் நாவலாசிரியர் அசரடித்து விடுகிறார்.


நாவலின் பல இடங்களில் ஜென் போன்றதான வாசகங்கள் நிறைய...
உதாரணமாக...

* தீர விசாரிப்பது அனைத்தையும் காலி செய்துவிடும். சில விஷயங்கள், சில மாயமான விஷயங்கள், அவை அர்த்தம் புரியாமல்தான் இருக்க வேண்டும். அர்த்தம் அறிய முயற்சித்தால் எல்லாம் போச்சு!

* பழைய கனவுகள் நல்ல கனவுகள். அவை நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த கனவுகளைக் கொண்டதற்காக நான் மகிழ்கிறேன்.

* ஒரு விதத்தில் ஆண்கள் எல்லோரும் கவிஞர்களாகவும், காதலர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பெண்கள்.

* செக்ஸ் இருக்க வேண்டிய இடத்தில் சயின்ஸ் இருப்பதால் எந்தவிதத்திலும் நஷ்டம் இல்லை என்று பெரும்பாலான சமயங்களில் பெண்கள் நினைக்கிறார்கள்.

* ஆண்கள் முதுமையை அடையும்போது அவர்கள் நீரை நோக்கி நகர்கிறார்கள்.

* நாம் ஒரு திசையில் செல்ல, உலகம் இன்னொரு திசையில் செல்கிறது. பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு கடைப் பொருட்களைக் கண்ணாடி வழியாக குனிந்து பார்ப்பது போல நான் உலகைப் பார்க்கிறேன்.

* உண்மையில், எளிமையாக இருப்பதுதான் மிகப்பெரிய சவால்.

இந்த நாவலில் நாயகன் ஒரு போட்டோகிராஃபர் என்பதால், அத்துறை சம்பந்தமான சில விஷயங்களும் வருகின்றன. உதாரணத்துக்கு நாயகன் ஓரிடத்தில் சொல்கிறான் இப்படி... 'ஒளியை பிரதிபலிப்பதற்குத்தான் ஆப்ஜெக்ட்ஸ்'. (பெரும்பாலும், ஆப்ஜெக்ட்ஸ் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒளியைப் பயன்படுத்துகிறார்கள்). இன்றெல்லாம், ஜஸ்ட் ஒரு 'க்ளிக்' மூலம் படத்தை அப்போதே பார்த்துவிட முடியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் நாவலின் படி நாயகன் தன் பிலிம் ரோல்களை நியூயார்க் நகரத்துக்கு அனுப்பி டெவலப் செய்து, பிரிண்ட் எடுத்து பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அங்கு எடிட்டர்கள் அதைப் பார்த்துவிட்டு திரும்பவும் போட்டோகிராஃபரை அழைத்து ஏதாவது திருத்தங்கள் செய்யச் சொல்வார்களாம். 

இந்த நாவலின் மைய நீரோட்டமாக 'எரோடிசிசம்' இருக்கிறது. சிலர் 'எரோட்டிக்' ஆக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு சில விஷயங்களை எழுத அது அபாசமாகி விடும். தமிழ் நாவல் உலகில் 'எரோடிசிசம்' வகையை மிக லாவகமாகக் கையாண்டவர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் இதை, இந்நாவலாசிரியர் மொழியின் துணையுடன் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

ஓரிடத்தில், ராபர்ட் கின்கெய்ட்டின் போட்டோகிராஃபி சார்ந்த நடவடிக்கைகளைப் பார்த்து ஃபிரான்செஸ்கா தன் மனதை இழக்கிறாள். அப்போது அவளின் நிலையில் இருந்து நாவலாசிரியர் எழுதுகிறார்... 'மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவள் கால்களுக்கிடையே ஈரத்தை உணர்ந்தாள்'. ஆங்கிலத்தில் உள்ள சொல் வளத்திற்கு, அந்த இடத்தில் 'ass', 'vagina'  போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் வெறுமனே 'கால்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில் ஆபாசத்தில் இருந்து அந்த இடம் தப்பித்தது!

'இப்போது அவன் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருப்பான் இல்லையா?' என்று ஷவர் சத்தத்திலேயே ஃபிரான்செஸ்கா வெட்கம் கொள்ளும் இடம், 'இந்த நீர் தானே அவனைத் தழுவியது' என்று அவள் பரவசமடைகிற இடம், 'நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் நிர்வாணமாக உறங்கினாள்' என்று நாயகியின் நிலையில் இருந்து நாவலாசிரியர் எழுதுமிடம் என... yes, eroticism is a matter of subtlety, an art form of its own!

அதேபோன்று, கதாபாத்திரங்களின் மனதை மிக நுட்பமாக விளக்குவதிலும் சாதிக்கிறார் நாவலாசிரியர். 'இந்த ஐயோவா நகர சமையலறையில் நாங்கள் இருவர் மட்டும் பேசிக் கொண்டிருக்க, சமையலறையின் தேய்ந்து போன கதவு 'க்ளிக்' என்று மூடிக் கொள்ளாதா' என்று நாயகன் நினைப்பது போல் வரும் வரிகள் இதற்கு எடுத்துக்காட்டு!
  
நாவலில் சமூக சிந்தனைக்கும் இடமிருக்கிறது. கதைப்படி, ஃபிரான்செஸ்கா ஆரம்ப காலங்களில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள். அப்போது அங்கு அவள் சந்திக்கும் சங்கடங்கள், ஆசிரியர்கள் மாணவர்களிடையே எவ்வளவு இன்னலுக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதை தமிழில் எழுத சங்கடமாக இருந்ததால் ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

"...She remembered Matthew Clark looking at the boy beside him and then forming his hands as if to cup them over a woman's breasts when she read, "The golden apples of the sun"..."

இந்த நாவலை 'For the peregrines'  என்று சமர்ப்பித்திருக்கிறார் நாவலாசிரியர்.

'பெரிகிரின்' எனும் ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் அர்த்தம் தேடினால், 'வேட்டைப் பருந்து', 'அலைதல்' என்ற வார்த்தைகள் கிடைக்கின்றன. இந்த அற்புதமான காதல் கதையை ஏன் இந்த வார்த்தைகளுக்குக் கொடுத்தார் என்று வாசிக்கும் போது கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கான விடையையும் ஃபிரான்செஸ்காவின் வாயிலாகவே தருகிறார்.

'அகராதியில் 'பெரிகிரின்' எனும் வார்த்தைக்கு 'வேட்டைப் பருந்து', 'அலைதல்' போன்ற அர்த்தங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த இலத்தீன் வார்த்தைக்கு 'அந்நியன்', 'வழிப்போக்கன்' என்ற அர்த்தங்களும் உண்டு. ஆம் அவன் ஒரு 'வழிப்போக்கனாக'த்தான் எனக்கு அறிமுகமானான்'.

நாவலை வாசித்து முடிக்கையில் காதலை மட்டுமல்லாமல் ராபர்ட் கின்கெய்ட் மற்றும் ஃபிரான்செஸ்காவையும் சேர்த்தே நேசிக்க முடியும். ஒரு நல்ல நாவல் (கவனிக்க, புத்தகமல்ல..) உங்களை அழ வைக்கும் அல்லது பெருமூச்சொறிய வைக்கும் அல்லது கவிதை எழுத வைக்கும். எனக்கு முதல் இரண்டையும் ஏற்படுத்தியது இந்நாவல். வேறொருவர் இதை வாசிக்கையில் உலகின் எந்த மூலையிலாவது நல்ல கவிதை எழுதப்படலாம்!

நாவலின் ஓரிடத்தில் இப்படிச் சொல்லப்படுகிறது...

"In an universe ambiguity, this kind of certainty comes only once, and never again, no matter how many lifetimes you live!"

மேற்கண்டவார்த்தைகள் இந்த நாவலுக்கும் பொருந்தும்!  

நன்றி: http://rememberingletters.wordpress.com
(ரோஸ்மேன் பிரிட்ஜ் புகைப்படத்திற்கு)