Wednesday, October 2, 2019

உண்மையான மருத்துவரும் 'போலி' சாமியாரும்..!


.வினோத் குமார்

ரயிலில் இருந்து வெளியே தள்ளப்படுவதும், விடுதி அறையிலிருந்து வெளியே தள்ளப்படுவதும் ஒன்றல்ல. ஏன்..?

அகிம்சாவாதி காந்திக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் குறித்து பலருக்கும் தெரியும். முன்னவர், 'இந்து மதம் காக்கப்பட சாதி வேண்டும்' என்றார். பின்னவர், 'இந்து மதத்தில் இருக்கும் வரை யாரும் சாதியத்திலிருந்து தப்பிக்க முடியாது' என்றார்.

அப்படியான இந்து மதத்தைக் குறித்து அம்பேத்கர் தயாரித்த உரையை, 'ஜாட் பட் தோடக் மண்டல்' அமைப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதற்காகத்தான் அவர் அந்த உரையைத் தயாரித்திருந்தார். ஆனால் அந்த உரையில், அவர் இந்து மதத்தைப் போட்டுக் கும்மியிருக்கும் விதத்தைப் பார்த்து, அந்த அமைப்பினர் அம்பேத்கரிடம், 'கொஞ்சம் மெதுவா..!' என்று சொல்ல, 'உங்களுக்கு வலிக்கிறது என்பதற்காகவெல்லாம் என்னுடைய கருத்தை நான் மாற்றிக் கொள்ள முடியாது' என்று சொல்ல, அவர் பேசவிருந்த நிகழ்வை அந்த அமைப்பினர் ரத்து செய்தார்கள்.

நல்ல வேளை அம்பேத்கர் அந்த உரையைப் பேசவில்லை. பேசியிருந்தால் காற்றோடு போயிருக்கும். தன்னுடைய தயாரிப்பை வீணாக்க விரும்பாத அம்பேத்கர், அந்த உரைக்கு 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (சாதியை ஒழிக்கும் வழி) என்று தலைப்பிட்டு, அதை ஒரு சிறுபதிப்பாகக் கொண்டு வந்தார். அந்தச் சிறுநூலின் அப்போதைய விலை எட்டணா. ஒரு தலித்தாக, தலித் மக்களின் அவலநிலையைச் சொல்லும் அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க அம்பேத்கர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை எல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத காந்தி, 'நானாக இருந்திருந்தால் அந்தப் புத்தகத்தை இரண்டணாவுக்கு விற்றிருப்பேன்' என்று அங்கும் தனது 'என்.ஜி..தனத்தை' காட்டினார்.

தலித்துகளின் அரசியல் விழிப்புணர்வில் மிக முக்கியப் பங்காற்றிய அந்தப் புத்தகத்தைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 'நவயானா' பதிப்பகம், பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் முன்னுரையோடு வெளியிட்டது. 'என்னது... அம்பேத்கரை அறிமுகப்படுத்த அருந்ததி ராய் வேண்டுமா..?' என்று அந்தப் புத்தகத்துக்கு அப்போது எழுந்த விமர்சனங்கள் நிறைய.

அருந்ததி ராயின் 'தி டாக்டர் அன்ட் தி செயின்ட்' எனும் அந்த முன்னுரை, தற்போது 'பெங்குயின்' பதிப்பக வெளியீடாக அதே தலைப்பில் தனி நூலாகவே கிடைக்கிறது. அம்பேத்கரின் நூலோடு சேர்த்து அந்த முன்னுரையைப் படிப்பதற்கும், தனி நூலாக அந்த முன்னுரையைப் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 'ஸ்டேன்ட் அலோன்' நூலாகப் படிக்கும்போது, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது அந்த முன்னுரை.

அந்த முன்னுரையில், சாதியை அம்பேத்கரும் காந்தியும் எப்படி அணுகினார்கள் என்பதை இருவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களுடனும், அவர்களின் எழுத்துகளை ஆதாரமாகக் கொண்டும் இணைத்துச் சொல்லியிருக்கிறார் ராய்.


இன்று வரையிலும் கிராமங்களில்தான் அதிக அளவிலான சாதிய வன்முறைகளைப் பார்க்கிறோம். அங்கிருந்தால் சாதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதால்தான் இளைஞர்களிடம் 'நகரங்களுக்குச் செல்லுங்கள்' என்றார் அம்பேத்கர். ஆனால் காந்தியோ 'கிராமங்களில்தான் இந்தியாவின் ஜீவன் இருக்கிறது' என்று சொல்லி அவர்களைத் திரும்ப கிராமத்துக்கே அனுப்பினார்.

'கிராம மக்கள் தங்கள் கிராம விஷயங்களைச் சாதிய அமைப்பின் மூலம் நிர்வகித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அமைப்பின் மூலம் தங்கள் மீது மேற்கொள்ளப்படும் அதிகார துஷ்பிரயோகத்தை அவர்கள் சமாளித்தார்கள்' என்று காந்தி என்னவோ பிதற்றினார். அதுவும் இந்தப் பிதற்றலை 1916‍-ல் சென்னையில் சொன்னார் என்பது நமக்குத்தான் எவ்வளவு 'எம்பராஸ்மென்ட்..?'

தான் ஒரு 'பனியா'வாக இருந்தாலும், 'பிராமணீயம்' என்பதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர் காந்தி. அவரது பக்தர்களும் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். உண்மையில், 'ஒவ்வொரு நபருக்குள்ளும் குறிப்பிட்ட சதவீத அளவு பிராமணீயம் இருக்கிறது' என்கிறார் ராய். அதனால்தான், வன்னியர்கள் பறையர்களை அடிப்பதையும், பறையர்கள் அருந்ததியர்களை அடிப்பதையும் நம்மால் தடுக்கவே முடியவில்லை என்கிறார் அவர்.

காந்தியைப் பற்றிப் பேசுகிறபோது பலரும் சொல்லும் ஒரு கட்டுக்கதை 'அவர், இந்தியர் என்பதால் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்' என்பது. ரயிலில் இருந்து அவர் வெளியே தள்ளப்பட்டது உண்மை. ஆனால் அவர் இந்தியர் என்பதற்காக, 'இனவெறி' கொண்டெல்லாம் ஆங்கிலேயர்கள் அவரை வெளியே தள்ளவில்லை. அவர் பயணித்தது 'வெள்ளையர் மட்டும்' பயணிப்பதற்கான பெட்டி. 'மகளிர் மட்டும்' பேருந்தில் எப்படி ஆண் பயணிகள் சென்றுவிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.

ஆனால் காந்தி என்ன சொன்னார் தெரியுமா? 'பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தென்னாப்பிரிக்காவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களை, இங்குள்ள கறுப்பர்களுக்கு நிகராக நடத்தக்கூடாது. எங்களை ஆங்கிலேயர்களுக்கு நிகராக நடத்துங்கள்' என்று தன்னுடைய மேட்டிமைத்தனத்தைக் காட்டினார். இந்த வாய்க்கொழுப்புக்காகத்தான் அவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.

காந்திக்காவது இந்த அவமானம் தென்னாப்பிரிக்காவில்தான் நடந்தது. ஆனால், அம்பேத்கரோ தன் சொந்த மண்ணிலேயே அவமானப்படுத்தப்பட்டார். தான் தங்கியிருந்த பார்ஸி ஓட்டல் அறையிலிருந்து அம்பேத்கர் வெளியே தள்ளப்பட்டதற்குக் காரணம், அவரது சாதி. ஆம், வேறு வழியில்லாததால், 'நானும் பார்ஸி'தான் என்று பொய் சொல்லித்தான் அம்பேத்கர் அங்கு தங்கினார்.

காந்தி ரயிலில் இருந்து தள்ளப்பட்டது அவர் கேட்ட சலுகைக்காக. ஆனால் அம்பேத்கர், விடுதியிலிருந்து தள்ளப்பட்டது அவர் சாதிக்காக..!

காந்தி ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதை வைத்து தென்னாப்பிரிக்காவில் அன்று ஒரு 'ஜோக்', கறுப்பர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அது இதுதான்:

'தென்னாப்பிரிக்காவில் 1893-ல் எல்லாம் நன்றாகவே இருந்தது. காந்தி வந்தார். ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். 1920-ல், நம்மால் ரயிலில்கூட ஏற முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார்'.

அதேபோல, காந்தி அரையாடை உடுத்தியிருந்தாலும் அவர் தனது போராட்டங்களுக்காக பிரபல தொழிலதிபர் ஜி.டி.பிர்லாவிடம்  கையேந்தி நின்றார். 'காதி முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் கல்வி. இந்த மூன்று விஷயங்களுக்கு எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த மூன்றில் உனக்கு எதில் விருப்பமோ அதற்கு உன்னுடைய நன்கொடையை வழங்கு' என்று பிர்லாவிடம் சொன்னார் காந்தி. இன்றைய 'கார்ப்பரேட் என்.ஜி..' கூட்டுக் களவாணித்தனம் வழியாக மேற்கொள்ளப்படும் 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி' (சி.எஸ்.ஆர்) இப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.

இப்படி நன்கொடை வாங்கினாலும், அவர் தன்னை வறியவனாகவே காட்டிக்கொண்டார் காந்தி. மக்கள் 'ஐயோ பாவம். என்ன எளிமையான மனிதன்?' என்று புகழ்ந்தார்கள். உண்மையில், எளிமை என்பது ஒரு சிந்தனை. அதை உடைகளில் காட்டி வெளிப்படுத்த முடியாது. அது உங்கள் செயல்களில் வெளிப்படும் ஒன்று. அதேபோல, வறுமை என்பது செயற்கையாக மேற்கொள்ளப்படும் விஷயம் அல்ல. வறுமை என்பது அதிகாரமற்றிருப்பது. அந்த அதிகாரத்தைப் பெற காந்தி செய்த 'பிஸினஸ்'தான் அவரது அரசியல்!

இந்த காந்தி ஜெயந்தி தினத்தில், மத்திய அரசின் 'ஸ்வச் பாரத்' திட்டம் குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது. என்னதான் 100 சதவீத வெற்றி என்று பீற்றிக்கொண்டாலும், திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக இரண்டு தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட நாடு இது. எனில், அவர்களுக்கு முறையான கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர தவறியது யார்? வேறு யார், சாதி இந்துக்கள்தான்..!

தலித்துகள் கழிவறையைச் சுத்தம் செய்வது பற்றி எழுதுகையில், காந்தி தன்னுடைய வாழ்வின் இறுதி வரையிலும், அந்தப் பணியை 'புனிதமான' பணி என்றே சொல்லி வந்திருக்கிறார். பார்ப்பானின் மலத்தைத் தன் கையால் அள்ளுவதில் ஒரு தலித்துக்கு என்ன புனிதம் இருக்கிறது?

ஆனால் அப்படியான புனிதப் பணியை மேற்கொள்ளுபவர்களைக் கோயிலுக்குள் விடமாட்டார்களாம். கேரளத்தின் வைக்கத்தில், சாதி இந்துக்குள் பயன்படுத்தும் சாலையைத் தாங்களும் பயன்படுத்ததாழ்த்தப்பட்டோர் போராடினர். அந்தப் போராட்டத்துக்கு ஜார்ஜ் ஜோசப் எனும் காந்தியவாதி தலைமை ஏற்றார். ஆனால் காந்தி என்ன சொன்னார் தெரியுமா... 'இந்துக்களின் பிரச்சினையில் வேற்று மதத்தவர் தலையிடுவது சரியில்லை' என்றார். ஆனால் இதே காந்திதான், வைக்கம் போராட்டத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இஸ்லாமியர்களின் 'கிலாஃபத் இயக்கத்துக்கு' தலைமையேற்றார். இதிலிருந்தே தெரியவில்லையா... காந்தியின் இரட்டை வேடம்..!

காந்தி ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்குச் சரியான தளம் அமைத்துக் கொடுத்தது, தலித்துகளுக்கான இரட்டை வாக்குரிமை தொடர்பான அம்பேத்கரின் முயற்சிகள். அப்போது காந்தி நடத்திய உண்ணாவிரத நாடகம் ஏற்படுத்திய தாக்கம்தான் எத்தகையது..! பூனா ஒப்பந்தம் மூலம் அவர் செய்த சதி, காலத்துக்கும் அவர் பெயர் சொல்லும்.

தீண்டத்தகாதவர்களைப் பசுவுக்கும் கீழாகக் கருதிய புனிதரை வேறு எப்படி நினைவு கொள்ள முடியும்? அந்த ஒப்பந்தம் தலித்துகளின் அரசியல் எழுச்சியை மேலும் தாமதப்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

'ஜனநாயகம், சாதியை ஒழிக்கவில்லை. மாறாக அதை இன்னும் ஆழமாக, மேலும் நவீனப்படுத்தியிருக்கிறது. எனவே அம்பேத்கரை வாசிக்க இதுவே சரியான நேரம்' என்கிறார் ராய். 

'வாசிப்பதன் மூலமாக மட்டுமே புரட்சிகள் நடைபெறும்' என்று இந்த முன்னுரையில் ஆரம்பத்தில் சொல்கிறார் ராய். உண்மைதான் அது..!