Friday, December 1, 2017

நோய் எனப்படுவது...!

.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 24 டிசம்பர் 2016  


ஆங்கிலத்தில் 'To say it is to call it' என்றொரு வாக்கியம் உண்டு. அதாவது, 'ஒன்றைச் சொல்வது அதை அழைப்பதற்குச் சமமானது' என்று பொருள். உதாரணத்துக்கு, 'பாம்பு' என்று சொல்லிவிட்டால் அது உடனே நமக்கு முன்பு படமெடுத்து நிற்பது போன்ற பிரமை அது.

பாம்புக்கு மட்டும்தான் இப்படி ஒரு நிலை என்று நினைத்தால் அது தவறு. மனிதர்களைப் படுத்தியெடுக்கும் நோய்களுக்கும் இதே நிலைதான். ‘தொழுநோய்' என்று சொல்லிவிட்டால், உடனே தனக்கே அந்த நோய் வந்துவிட்டதைப்போல உடலை நெளிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ‘டெங்கு' என்று சொன்னவுடன், இல்லாத கொசு ஒன்று தன் கையில் உட்கார்ந்திருப்பதாக நினைத்துக் கைகளைத் தடவிப் பார்ப்பவர்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ‘கொஞ்சம் டிஸன்ட்ரி' என்று சொன்னவுடன், ஓர் அடி தள்ளி நின்று அடிமூக்கைச் சொறிபவர்களை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?

அப்படியென்றால், ‘இல்னெஸ் ஆஸ் மெட்டஃபர்' எனும் புத்தகம், நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகமாக இருக்கும்! முக்கியமான அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான சூசன் சோன்டாக் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 1978-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து 1989-ம் ஆண்டுஎய்ட்ஸ் அண்ட் இட்ஸ் மெட்டஃபர்ஸ்' எனும் புத்தகத்தையும் அவர் எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும்ஃபர்ரார், ஸ்ட்ராஸ் அண்ட் கிரோ' எனும் பதிப்பகத்தால் முதன்முதலாகத் தனித்தனியாகப் பதிப்பிக்கப்பட்டன. 1991-ம் ஆண்டு இந்த இரண்டு புத்தகங்களையும் ஒன்றாகச் சேர்த்து வெளியிட்டது பெங்குவின் பதிப்பகம்.

வேண்டாம் சோகம்

பிரபல மருத்துவர்கள் சித்தார்த்த முகர்ஜியின்தி எம்பரர் ஆஃப் ஆல் மலாடீஸ்', அதுல் கவாண்டேயின்பீயிங் மார்ட்டல்' ஆகிய புத்தகங்களின் வழியாகத்தான் இந்தப் புத்தகம் எனக்கு அறிமுகமானது. மனித வாழ்க்கையில் நோயை ஒரு உருவகமாகப் பயன்படுத்துவதைக் குறித்து ஆழமான பார்வைகளை இந்த நூலில் சூசன் முன்வைத்திருக்கிறார்.

மார்பகப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்ட பிறகு, இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினார் சூசன். புற்றுநோயை மனிதர்கள் எப்படி எல்லாம் உருவகப்படுத்துகிறார்கள் என்பதை ஆராயத் தொடங்கிய இவரின் பயணம், நோய் என்பது மனிதர்களிடையே எப்படியெல்லாம் உருவகமாகிறது எனும் இடத்தைத் தொடுகிறது. அவர் கண்டடைகிற விஷயங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. ‘உங்களுக்கு இருக்கும் நோயை அங்கீகரியுங்கள். அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி?' என்று சோகத்தில் மூழ்காதீர்கள். யார் மீதும், எதன் மீதும் குற்றம் சுமத்தாதீர்கள்' என்பதுதான் இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.


காசம் உருவாக்கிய பொய்கள்

ஆரம்பக் காலத்தில், காசநோயை நெருப்பாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு மனிதரின் உடலுக்குள் தோன்றும் அந்த நெருப்பு, அவரைஎரித்துவிடும்' என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. வெளிப்படுத்தப்பட முடியாத அன்பால், விருப்பத்தால், காமத்தால்தான் ஒருவருக்குக் காசநோய் ஏற்படுவதாக மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. எனவே, இந்த நோய் தாக்கியவர்களை ஒருவிதமான மென்சோக அன்புடன் பார்க்கும் பார்வை அன்று இருந்தது.

அதேபோல ஓவியர்கள், கவிஞர்கள் போன்ற படைப்புத் திறன் மிக்க மனிதர்களைத்தான் இந்த நோய் அதிகமாகத் தாக்குகிறது என்றும், இந்த நோய்த் தாக்கம் கொண்டவர்களிடமிருந்து கற்பனா சக்தி மிகுந்த படைப்புகள் வெளிவரும் என்றும்கூட நம்பப்பட்ட காலம் அது.

பலவீனப்படுத்தும் பார்வை

பின்னாட்களில் காசநோய்க்கான காரணங்கள் கண்டறியப்பட்டவுடன், அந்த நோய் மிகவும் கீழ்மையான உருவகப்படுத்தலுக்கு உள்ளானது. ஹிட்லரின் காலத்தில் யூதர்களைக் காசநோய்க்கு ஒப்பாகக் கருதினார்கள். பின்னர், காசநோயை விடவும் கொடியதான புற்றுநோய் மக்களிடத்தில் பரவலாகக் காணப்பட்டது.

காசநோய்க்கு வழங்கப்பட்ட அதேரொமான்டிசைஸ்' உருவகங்கள் புற்றுநோய்க்கும் வழங்கப்பட்டன. பிறகு, ‘சோம்பி இருப்பதுதான் புற்றுநோய்', ‘பாவம் செய்த மனிதனுக்கு வழங்கப்பட்ட தண்டனை', ‘புற்றுநோய் என்பது மனிதன் தனக்குத் தானே வழங்கிக் கொண்ட நியாயம்', ‘புற்றுநோய் ஒரு சுய பழிவாங்கல்' என்று கீழ்மையாக உருவகப்படுத்தப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் டி.ஹெச்.லாரன்ஸ், சுயஇன்பப் பழக்கத்தைமனித நாகரிகத்தின் ஆபத்தான புற்றுநோய்' என்று குறிப்பிட்டார்.

இப்படியான பார்வைகள், நோய் பீடித்த ஒருவர் மீதுஇந்த நோய் ஏற்படுவதற்கு நீதான் முழுமுதல் காரணம்' என்று குற்றம் சுமத்துகின்றன. அவை, நோய் பாதிப்புக்கு உள்ளானவரை மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் பலனற்றதாக மாற்றிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தேவையற்ற வெறுப்பு

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மாரடைப்பால் ஒருவர் இறந்தால் அதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். பின்னர், இந்த நிலை காசநோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கும் ஏற்பட்டன. அதில் திரைப்படங்களும் (தமிழ் சினிமாவில் மாரடைப்பு (இதயம்), ரத்தப் புற்றுநோய் (வாழ்வே மாயம்), நுரையீரல் புற்றுநோய் (பவித்ரா), இன்னும் பல...) முக்கியப் பங்காற்றின. ஆனால், இப்படிப் பெருமையாகச் சொல்லும் நிலை, ‘எய்ட்ஸ்' உள்ளிட்ட இதர நோய்களால் பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கிறதா என்றால், இல்லை. ஏன்?

காரணம், காசநோயோ அல்லது புற்றுநோயோ ஏற்படுவதற்குச் சுற்றுச்சூழல்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது (அதில் உண்மையும் உண்டு என்றாலும்) என்று பொத்தாம்பொதுவாகக் கூறப்படுவதுதான். ஆனால், பாலியல் ஒழுக்கமின்மையுடன் இணைந்தே எய்ட்ஸ் புரிந்துகொள்ளப்படுவதால் அது வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. ‘எய்ட்ஸ்' நோய் நாமாகப் பெற்றுக்கொள்வது என்று புரிந்துகொள்ளப்பட்டிருப்பதுதான், அந்த நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களை அருவருப்புடன் பார்க்க வைக்கிறது.

நோயல்ல, நோய்மை

சொல்லப்போனால், ‘எய்ட்ஸ்' என்பது ஒரு நோயே அல்ல. ‘நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதற்கான ஒரு விஷயத்தை நாம் பெற்றிருக்கிறோம்' என்பதைத்தான் ஆங்கிலத்தில் ‘Acquired Immuno Deficiency Syndrome' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கியத்தின் முதல் எழுத்துகளை வைத்துத்தான் இந்த நோய்க்கான பெயரே உருவானது. இது நோய் இல்லை. மாறாக, பல நோய்கள் கூட்டாகச் சேர்ந்து தாக்கும் ஒரு நோய்மை நிலை.

ஆண் தன்பாலின உறவாளர்களிடையேதான் இந்த நோய் முதன்முதலில் தென்பட்டது. எனவே, அன்றிருந்த மதபோதகர்கள் இந்த நோயைஇயற்கையின் பழிவாங்கல்' என்று அழைத்தார்கள்.


தவறான உருவகம்

பல மருத்துவ ஆய்வுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக, இன்று அந்தப் பார்வைகள் மாறியிருக்கின்றன. அதற்காக சந்தோஷப்பட முடியாது. ஏனென்றால், அதைவிட ஆபத்தான உருவகங்கள் இன்று தோன்றியிருக்கின்றன. ‘ வார் ஆன் கேன்சர்', ‘ வார் ஆன் எய்ட்ஸ்' என்று புற்றுநோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தையுத்தம்' என்பதாக உருவகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு நோயையுத்தம்' என்கிற நிலையுடன் அணுகுவது, சர்வாதிகாரப் போக்கு என்கிறார் சூசன். எவ்வளவுக்கு எவ்வளவு, அந்த நோயை எதிர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதும் நடக்கிறது. யுத்தங்களால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயரும் அகதிகளை, ‘நோயைக் கடத்தி வருபவர்கள்' என்று பார்க்கும்இனவெறுப்பு' மனநிலை பல நாட்டு மக்களிடம் இருப்பதை, இங்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் நிச்சயமற்ற எதிர்காலம்

உலகச் சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஹல்ஃப்தான் மஹ்லர், “எல்லா நாடுகளிலும் எய்ட்ஸ் அழிக்கப்படாதவரை, எந்த ஒரு நாட்டிலும் அதைத் தனியாக அழித்துவிட முடியாதுஎன்றார். ஜெர்மன் நாட்டின் எய்ட்ஸ் நோய் நிபுணர் டாக்டர் எய் பிரிக்கெட் ஹெல்ம்-மோ, “ஏதேனும் ஒரு வகையிலாவது எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியாத சமூகத்துக்கு நிச்சயமான எதிர்காலம் என்ற ஒன்று இல்லைஎன்கிறார்.

அந்த எதிர்காலம் இந்தியாவுக்கு இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம், மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளஹெச்..வி. மற்றும் எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்ட மசோதா'வின் 14-ம் பிரிவின் கீழ், ‘மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவுக்கு (as far as possible) ‘ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி' (.ஆர்.டி) மருந்துகளை வழங்க வேண்டும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த மருந்துகள் வழங்குவதைக் கட்டாயமாக்காமல், அந்தக் கடமையிலிருந்து அரசை விடுவிப்பதாக இந்தப் பிரிவு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இலவசமாக மருந்துகள் கிடைப்பது நின்றுபோகும். சந்தையில் அவற்றின் விலை அதிகமாக இருக்கும். எத்தனை பேரால் அவற்றை வாங்க முடியும்?

நமது உடல் யாராலும் ஊடுருவப்படவில்லை. நமது உடல் போர்க்களம் அல்ல. எனவே, நோயை யுத்தமாகக் கருத வேண்டாம்' என்கிறார் சூசன் சோன்டாக். எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தை இந்தியாவே ஒருவேளையுத்தமாக'க் கருதினால், போர்க்கால அடிப்படையில் .ஆர்.டி. மருந்துகள் இலவசமாக வழங்க அரசு முயற்சிக்க வேண்டும். அதற்கு அரசை முதலில் நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்!

நன்றி: தி இந்து (நலம் வாழ இணைப்பிதழ்)

Wednesday, November 8, 2017

பணமதிப்பு நீக்கம் ஒரு நாடகம்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 10 அக்டோபர் 2017


கடந்த நவம்பர் 8 இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் குறித்து விமர்சனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. உலக அரங்கில், பல்துறை ஆய்வு முடிவுகளை வெளியிடும் மிக முக்கியமான ஆய்விதழாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழின் ஆசிரியராகச் சுமார் 12 ஆண்டுகாலம் பணியாற்றிய சி.ராம் மனோகர் ரெட்டியும் இந்நடவடிக்கையை விமர்சிக்கிறார். ‘டீமானிடைசேஷன் அண்ட் பிளாக் மணி’ (ஓரியண்ட் பிளாக் ஸ்வான்’ பதிப்பக வெளியீடு) எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தையொட்டி, ‘தி இந்து மையம்’ சமீபத்தில் விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ராம்மோகன் ரெட்டியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

மக்களின் எதிர்ப்பு இல்லாத காரணத்தாலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்தக் கேள்வியை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று, இந்த நடவடிக்கை மூலம் அரசு என்ன சாதித்தது? இரண்டு, மக்கள் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறார்கள்?

முதல் கேள்விக்குப் பதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் அரசு, மிகக் குறைந்த அளவே சாதித்திருக்கிறது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு, கடந்த மூன்று நான்கு மாதங்களில், அரசுக்குத் திரும்பக் கிடைத்திருக்கும் கறுப்புப் பண அளவு, மிகவும் குறைவுதான். ஆர்.கே. நகரைப் பாருங்கள். எவ்வளவு கறுப்புப் பணம் புழங்கியிருக்கிறது? 

இரண்டாவது கேள்விக்குப் பதில், இந்த நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கறுப்புப் பணம் ஒழியும்’ என்று நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்கூட, அவர்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் இப்போது உண்மையை உணர்ந்திருப்பார்கள்.


கள்ள நோட்டுக்களைக் கட்டுப்படுத்துவது இந்த நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. அது சரிதானா?

நிச்சயமாக இல்லை. காரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போதும் புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆக, இந்தப் புதிய ரூபாய் நோட்டுக்கள் முன்பு நம்மிடையே இருந்த ரூபாய் நோட்டுக்களில் இருந்த அதே அம்சங்களையே கொண்டிருக்கின்றன. புதிய ரூபாய் நோட்டுக்களில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமில்லை.

இந்த நடவடிக்கையின்போது, தங்களிடமிருக்கும் கணக்குக் காட்டப்படாத பணத்தை ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்ட’த்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு வழிவகை செய்தது. இதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை கறுப்புப் பணம் வசூலாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெறும் ரூ.4,000 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டது இன்று இதிலிருந்தே தெரிகிறதே! பணமதிப்பு நீக்கத்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்தான் அதிகப் பயனடைந்துள்ளார்கள். காரணம், வங்கிகள் மூலம் அவர்கள் தங்களின் பணத்தை வெள்ளையாக மாற்றிவிட்டார்கள். நீங்கள் குறிப்பிட்ட திட்டத்தையும் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சுலபமாகத் தப்பித்துவிட்டார்கள்.

மேலும், அந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளில், வருமானத்தில் 25%-க்கும் குறைவாகக் கணக்குக் காட்டப்படாத பணத்தை டெபாசிட் செய்தவர்களை இப்போது, வருமான வரித்துறை தனக்குக் கிடைத்துள்ள கூடுதல் அதிகாரத்தின் காரணமாக, வன்கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது, சட்டத்தை மதித்து நடந்துகொண்டவர்கள் மாட்டிக்கொள்ள மறுபக்கம், சட்டத்தை மதிக்காதவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை என்பதைத் தாண்டி, அது ஒரு அரசியல் தந்திரம் என்கிறீர்கள். அதை விளக்க முடியுமா?

நிச்சயமாக! முதல் விஷயம், பணமதிப்பு நீக்க அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டது. முன்னறிவிப்பு கொடுத்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உஷாராகிவிடலாம் என்று அரசு நினைத்திருக்கலாம். ஆனால், அவ்வளவு ரகசியமாக வைத்தும், பலர் தப்பித்துக்கொண்டார்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.

கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதுதான் எங்களின் லட்சியம் என்கிறது அரசு. கறுப்புப் பணம், அதில் ஒரு சிறு பங்குதான். அதனால்தான் மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பது எங்களின் முதல் நடவடிக்கை என்றார். ஆனால் அந்த நடவடிக்கைக்குப் பிறகு, வேறு பெரிய நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுவே அவர்களின் மெத்தனத்தைக் காட்டுகிறது.

உதாரணத்துக்கு, இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தல் நன்கொடைகளில் பெரிய அளவில் கறுப்புப் பணம் கைமாறுகிறது. எனவே அதைத் தடுக்க ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற விஷயம் இந்த பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள், வங்கிகள் மூலம் இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால் ஒருவர், தான் எந்தக் கட்சிக்கு நிதி அளித்தேன் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. அதேபோல, தான் யாரிடமிருந்து நிதி பெற்றேன் என்று கட்சியும் வெளிப்படுத்த அவசியமில்லை. இது மேலும் குழப்பத்தையே விளைவிக்கும். கறுப்புப் பணம் அதிகமாக இது வழிசெய்யும்.

நவம்பர் 8-ம் தேதி பிரதமரின் உரையில், ‘ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றார். ஆனால் அந்த அறிவிப்பு அடுத்த நாள் அரசிதழில் வெளியானபோது, ஊழல் என்ற வார்த்தை காணப்படவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும்.

 
அப்படியென்றால், பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம்தான் என்ன?

இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு கள்ள நோட்டுக்கள் வெளியாகின. அந்தத் தோல்வியை மறைக்க, ‘கறுப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்று சொல்லப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு, எதிர்பார்க்கப்பட்ட அளவு கறுப்புப் பணம் வரவில்லை. அந்தத் தோல்வியை மறைக்க ‘பணமில்லாப் பொருளாதாரம்’ என்று சொன்னார்கள். ஆனால் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ‘பணமில்லாப் பொருளாதார’ பிரச்சாரமும் இப்போது தோல்வியைத் தழுவியுள்ளது.

ஆட்சிக்கு வந்த பிறகு, அம்பானி, அதானிகளுக்கு நிறைய சலுகைகள் 
வழங்கப்பட்டன. இதனால் மோடி அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அவர்மீது மக்கள் வெறுப்புடன் இருந்தார்கள். அதிலிருந்து தன் மீதான பிம்பத்தை நிலைநிறுத்திக்கொள்ள, இப்படி ஒரு நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஆம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஒரு நாடகம். அந்த நாடகத்தின் மூலம் அவருக்குத் தேவையான அளவு அரசியல் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால், பொருளாதாரம்தான் சிக்கலில் மாட்டிக்கொண்டது!

நன்றி: தி இந்து

Friday, October 13, 2017

ஆருஷி கொலைக்கு 'அவர்களே' காரணம்!

ந.வினோத்குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 29 ஜனவரி 2016

இந்திய வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘டாப் 10' கொலைக் குற்ற வழக்குகளைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயமாக இடம்பிடிக்கும் தன்மை கொண்டது ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

‘யார் கொன்றார்கள்?' இதுதான் அந்த வழக்கின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் அந்தக் கேள்வி கூட முக்கியமில்லை. 'ஆருஷியின் பெற்றோர்கள் இந்தக் கொலையைச் செய்தார்களா?' என்ற கேள்விதான் கேட்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது 'ஆருஷி' புத்தகம்.

பத்திரிகையாளர் அவிரூக் சென் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். வெளிநாட்டில் 'ஃப்ரிலான்ஸ்' பத்திரிகையாளராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இவர், இந்த வழக்கு தொடர்பாக எழுதுவதற்காகவே இந்தியா வந்தார்.

ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதிக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை அவிரூக் சென் அலசும் விதத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது நியாயம் யார் பக்கமென்று!

அதைத் தவிர இந்திய சமூகத்தின் சமகால அரசியல், அறிவியல், போலீஸ் விசாரணை, நீதிமன்ற வழக்கங்கள், சிறை நடத்தை முறைகள் ஆகியவற்றையும் அங்கங்கே தொட்டுச் செல்வதின் மூலம், ஒரு குற்ற வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சி எப்படியெல்லாம் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

இந்தியாவில் முதன்முதலில் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட‌ ‘நார்க்கோ அனாலிசிஸ்' விசாரணை 1989-ம் ஆண்டு டாக்டர் எஸ்.எல்.வயா எனும் பெண் ஒருவரால் நடத்தப்பட்டது எனும் தகவல்...

‘முன்பெல்லாம் வீட்டு வேலைக்காரர்கள் நம் குடும்பங்களில் ஒருவராக இருந்தனர். ஆனால் இப்போது அப்படியல்ல' எனும் சமூகப் பார்வை...

‘காவலர்கள் பலர் வழக்கைப் புலனாய்வு செய்வதை விடவும் வாக்குமூலங்களைப் பெறவே முனைகிறார்கள், காரணம் அதுதான் நீதிமன்றத்தில் சுலபமாகத் தண்டனை பெற்றுத் தரும் வழியும், சோம்பேறித்தனமான வழியுமாகும்' எனும் காவல்துறையின் போக்கு...

‘ஆருஷியின் ‘வஜைனல் ஸ்வாப்'பை நீங்கள் ஏன் அடையாளமிடவில்லை?' என்று மருத்துவர் ஒருவரைக் கேட்டதற்கு, ‘உத்தரப் பிரதேசத்தில் ‘வஜினல் ஸ்வாப்' எடுக்கும் வழக்கம் இல்லை' என்று சொன்னார் (இது 2008-ம் ஆண்டில் நடந்தது!) எனும் தகவலின் மூலம் நூலாசிரியர் முன்வைக்கும் மருத்துவத்துறையின் அக்கறையின்மை...

‘க்ரைம் ஸீன் ரீகன்ஸ்ட்ரக்ஷன்' எனும் முறையில் உள்ள குளறுபடிகள்... என பல தகவல்கள் மூலம் இந்த வழக்கை 360 டிகிரி கோணத்தில் அணுகி பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார் அவிரூக் சென்.


சமீபத்தில் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' விழாவில் தன் புத்தகம் குறித்த உரையாடல் நிகழ்வுக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

உங்கள் புத்தகத்தைப் படிக்கும் ஒருவருக்கு இந்தக் கொலைக்கும் ஆருஷியின் பெற்றோருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வரும். ஆனால், அவர்களை 'இன்னொசன்ட்' என்று சொல்லி விட முடியுமா?

நீதிமன்றத்தில் ராஜேஷ் மற்றும் நுபுர் தம்பதிக்கு எதிராக வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பார்த்தாலே உண்மை விளங்கும். அவை அனைத்துமே ஜோடிக்கப்பட்டவை. தவிர, இந்தக் கொலையை விசாரிக்கத் தேவையான‌ அடிப்படையான இரண்டு விஷயங்கள். வெப்பன் (கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம்) மற்றும் மோட்டிவ்! இவை இரண்டுமே இந்த வழக்கில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்த வழக்குக்காக தல்வார் தம்பதி உட்பட இதில் தொடர்புடைய அனைவரையும் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள். ஆனால் தல்வார் வீட்டில் வேலை பார்த்துவந்தவரும் ஆருஷியுடன் கொல்லப்பட்டவருமான ஹேம்ராஜின் நண்பர்களை நீங்கள் ஏன் சந்திக்கவில்லை?

ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சமயத்தில் நான் இந்தியாவில் இல்லை. ஆருஷி கொலை வழக்கு நீதிமன்றத்தில் தொடங்கப்போகும் சமயத்தில் ‘மும்பை மிரர்' பத்திரிகையிலிருந்து இந்த வழக்கை ரிப்போர்ட் செய்ய வேண்டும் என ‘அசைன்மென்ட்' வழங்கப்பட்டது. 
நான் இங்கு வந்த சமயத்தில் ஹேம்ராஜின் நண்பர்கள் மூன்று பேரும் நேபாளத்துக்குச் சென்று விட்டார்கள். நேபாளம்தான் அவர்களின் தாய்நாடு.

ஆருஷி கொலைக்குப் பிறகு சில மாதங்களில் அவர்களும் ‘நார்க்கோ அனாலிசிஸ்' உள்ளிட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவருமே ‘இவன் தான் கொலை செய்தான், நான் பார்த்தேன்', ‘அவன் தான் கொலை செய்தான், நான் பார்த்தேன்' என ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தியதும் தெரியவந்தது. இருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டார்கள். உடனே அவர்கள் நேபாளத்துக்குத் தப்பிவிட்டார்கள். அதனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்தக் கொலையை ‘ஆணவக் கொலை' என்று கூறப்படுவது பற்றி?

அது தவறான பார்வை. தல்வார் தம்பதியைக் குற்றவாளிகள் என்று கூறிய நீதிமன்றம் இந்தக் கொலையை ‘ஆணவக் கொலை' போன்று சித்தரித்துள்ளது. ஆனால் ‘இது ஆணவக் கொலையேதான்' என்று அது வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆருஷி கொலை வழக்கு சமீபத்தில் ‘தல்வார்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக வந்ததே? நீங்கள் பார்த்தீர்களா?

ஆம். பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஆனால் அது ஃபிக் ஷன். கொஞ்சமே கொஞ்சம் உண்மையான விஷயங்களுடன் ஒத்துப்போகிறது. என்னுடைய புத்தகமோ முழுக்க முழுக்க நான்-ஃபிக் ஷன்!

  
இந்த வழக்கில் மிகவும் நெருடலாக நீங்கள் உணர்ந்த விஷயம் எது?

ஆருஷி கொலை செய்யப்பட்டது தெரியவந்த 2008-ம் ஆண்டு மே15-ம் தேதி காலை, தல்வார் தம்பதி வீட்டுக்கு முதலில் சென்றது பாரதி மண்டல் எனும் வேலைக்காரப் பெண்தான். அன்று அவள் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் வேறு. அதே வாக்குமூலம் வழக்கு நடைபெற்ற 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வேறு விதமாகத் திரிக்கப்பட்டது. அப்போது பாரதி மண்டல், ‘போலீஸார் எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்களோ, அதைத்தான் இங்கு சொல்கிறேன்' என்று வெளிப்படையாகவே சொன் னார். இதை என்னவென்று சொல்வது?

என்னதான் சொல்லுங்கள். தல்வார் தம்பதிக்கு வழங்கப்பட்டது ஒரு ‘ஸ்லோ டெத்!'

நன்றி: தி இந்து (இளமை புதுமை)

அவிரூக் சென் படம்: ந. வினோத்குமார்