Thursday, July 28, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - IV

வந்தார் மூக்நாயக்... வாழ வைத்தார்!


ந.வினோத் குமார்
 
அம்பேத்கருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய அரசியலமைப்பைக் கட்டியெழுப்பியவர்... சாதிகளுக்குச் சுளுக்கெடுத்தவர்... அதில் சிக்கியிருந்த பலரை விடுவித்தவர்... இந்து மதத்துக்கு வேப்பிலை அடித்தவர்... என அவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இந்தச் சாதனைகளை எல்லாம் செய்வதற்கு ஆரம்பகாலங்களில் அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது எது என்று பார்த்தால், அது 'மஹர்' இன மக்களுக்காக அவர் கொடுத்த உழைப்புதான்! 'மூக்நாயக்' (குரலற்றவர்களின் தலைவன்) என்று தான் ஆரம்பித்த முதல் பத்திரிகை கூட அவர்களுக்காகத்தான்!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடித்தள மக்களுக்கும் அடுத்து மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்கள் மஹர் இன மக்கள். 'எங்கெல்லாம் கிராமங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மஹர் இனத்தவர் இருப்பார்கள்' என்பது அக்காலத்தில் மராட்டியப் பகுதிகளில் புழங்கி வந்த அவமதிப்பு மிகுந்த ஒரு பழமொழி இது.

இந்த நிலை, ஆங்கிலேயேர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு மாறியது. மஹர் இன மக்களுக்கு ஆங்கிலேயர்களின் வருகை என்பது தோல்வியாக இல்லாமல், தாங்கள் விடுதலை அடைவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமைந்தது. காரணம், ஆங்கிலேயர்கள் தங்களின் போர்ப்படைகளுக்கு, பெருமளவில் மஹர் இன மக்களைச் சேர்த்துக்கொண்டார்கள். அதன் பிறகு, 'எங்கெல்லாம் ஒரு மஹர் இனத்தவர் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு மகாராஷ்டிரம் இருக்கும்' என்ற புதுமொழியை மஹர் இனத்தவர் பெருமையுடன் சொல்லிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகை, மஹர் இன மக்களைக் கைதூக்கிவிட்டது என்று சொன்னால், அவர்களைத் தலைநிமிரச் செய்த பெருமை முழுக்க முழுக்க அம்பேத்கரையே சாரும். மஹர் இன மக்களுக்காக அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறது 'அம்பேத்கர்ஸ் வேர்ல்ட்' எனும் புத்தகம். 'நவயானா' பதிப்பகத்தின் மறுபதிப்பான இந்தப் புத்தகம் 2013-ம் ஆண்டு வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த அம்பேத்கரிய‌ அறிஞர் இலியனார் செல்லியட் எனும் பெண்மணிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

1962-ம் ஆண்டு அம்பேத்கர் குறித்தும் மஹர் இன எழுச்சி குறித்தும், 'அம்பேத்கர் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம்' எனும் தலைப்பில் இரண்டு வருடங்கள் முனைவர் ஆய்வுக்காக இலியனார், இந்தியாவுக்கு வந்தார். அந்த ஆய்வின் பலன்தான் இந்தப் புத்தகம். அதன் பின்னர் 1969-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் கார்ல்டன் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றினார். அம்பேத்கரின் எழுத்துகள் இந்தியாவைத் தாண்டாத காலம் அது. அப்போது அவரின் எழுத்துகளை தன் ஆய்வுகள் மூலம் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதில் இலியனார் செல்லியட்டுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தப் பெருமைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்தப் பெண்மணி இந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி காலமானார்.

இந்தப் புத்தகத்தில், மஹர் இன மக்கள் அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும், சமய ரீதியான நடவடிக்கைகளிலும் மேம்பட்ட நிலைக்கு முன்னேற அம்பேத்கர் எவ்வாறு உந்து சக்தியாக இருந்தார் என்பதை ஆழமாக அலசுகிறார் இலியனார்.

எனினும், மஹர் இனத்துக்காக அம்பேத்கர் ஆற்றிய முக்கியப் பணிகளில் ஒன்று, அவர்களை இந்து மதத்திலிருந்து வெளியேற்றி, புத்த மதத்துக்கு மதம் மாற்றியதுதான். 'நான் நிச்சயமாக இந்துவாக இறக்க மாட்டேன்' என்று அம்பேத்கர் சபதமேற்ற வருடம் 1935. சுமார் இருபது வருடங்கள் கழித்து 1956-ல் தான் அவரால் புத்த மதத்துக்கு மதம் மாற முடிந்தது. ஆக, அந்த இருபது வருடங்கள் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? இந்து, இஸ்லாம், சீக்கியம், ஜைனம், கிறிஸ்துவம், தேராவாத பவுத்தம் எனப் பல சமயங்களைப் பற்றி ஆராய்ந்தார். இறுதியாக அவர் தேர்வு செய்தது பவுத்தம்.

தனது முடிவு, அதாவது, இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் இணைவது குறித்து 1936-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டமொன்றில், வெளிப்படுத்துகிறார். தன்னோடு, இதர மஹர் இன மக்களும் மதம் மாற வேண்டிய கட்டாயம் குறித்து அவர் உரையாற்றுகிறார். அந்த உரை மிகவும் கவித்துவமான உரையாக இருந்தது. 'முக்தி கோன் பதே?' (முக்தி அடைவதற்கான வழி என்ன?) என்ற தலைப்பில், மராத்தியில் எழுதப்பட்ட அந்த உரையை, இந்தப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார் இலியனார். அந்த வரிகள் இவை:

மதம் என்பது மனிதனுக்காக. மனிதன் மதத்துக்காகப் பிறக்கவில்லை.

நீங்கள் சுயமரியாதையுடன் இருக்க, மதம் மாறுங்கள்.
ஒத்துழைப்பு நல்கும் சமுதாயத்தை உருவாக்க, மதம் மாறுங்கள்.
அதிகாரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
சமத்துவம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
சுதந்திரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
மகிழ்ச்சி தரும் உலகம் படைக்க, மதம் மாறுங்கள்.

உங்கள் மனிதத்தை மதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்கள் தாகத்துக்கு நீர் தராத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்கள் கல்விக்குத் தடையாக இருக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களுக்கு நல்ல பணி கிடைப்பதைத் தடுக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களை ஒவ்வொரு விஷயத்திலும் அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?

மனிதர்களுக்கிடையில் மனிதநேயத்தைத் தடுக்கும் ஒரு மதம், மதமல்ல. அபராதம்.
மனிதனின் சுயமரியாதையைப் பாவமாகக் கருதும் ஒரு மதம், மதமல்ல. நோய்.
செத்த மிருகத்தைத் தொடலாம் ஆனால் மனிதனைத் தொடத் தடை விதிக்கும் ஒரு மதம், மதமல்ல. பைத்திய நிலை.
ஒரு சாதி மட்டும் கல்வி கற்கக் கூடாது, பொருள் சேர்க்கக் கூடாது, ஆயுதம் ஏந்தக் கூடாது என்று கூறும் ஒரு மதம், மதமல்ல. மனித வாழ்வை கேலிக்குட்படுத்துவது.
கல்லாதவர் கல்லாதவராகவும், ஏழை ஏழையாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று போதிக்கும் ஒரு மதம், மதமல்ல. தண்டனை.

சொல்லாதே: மனிதர்களை விட மிருகங்களை மதிப்பவர்களை, பார்ப்பனர்களைக் கடவுளாக மதிப்பவர்களை, பக்திமான்கள் என்று.
சொல்லாதே: எறும்புகளுக்குச் சர்க்கரையையும், மனிதர்களுக்குத் தாகத்தையும் வழங்குபவர்கள், பக்திமான்கள் என்று.
சொல்லாதே: தன்னுடைய மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுபவர்களை, சமுதாயத்தை வெறுப்பவர்கள் என்று.

                                                                                      (தமிழில்: ந.வினோத் குமார்)

என்ன சொல்ல? நாடு தன்னிடமிருந்த ஒரு நல்ல கவிஞனை வெளிப்படுத்திக் கொள்ள மறந்துவிட்டது. மறுத்துவிட்டது என்பதும் சரிதான்!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் நான்காவது பதிவு இது)
 

Friday, July 8, 2016

அந்த ‘கோட்’ அவருக்கு எப்போது கிடைக்கும்?


ந.வினோத்குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 8 ஜூலை, 2016

அந்த அரங்கத்தில் உலக அளவில் பிரபலமான பேராசிரியர்களும், பேராசிரியர்களையே மிஞ்சும் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அமர்ந்திருந்தனர். மேடையில் 41 வயதான அந்த‌ இளைஞர் தான் கடந்து வந்த பாதையைச் சொல்கிறார். தன்னால் உயர்ந்த மாணவர்களின் பின்னணியைச் சொல்கிறார். அவை ஒவ்வொன்றும் அங்கு அமர்ந்திருந்தவர்களைப் புல்லரிக்க வைக்கிறது. புத்துணர்வு கொள்ளச் செய்கிறது. கைதட்டல்களால் அரங்கம் அதிர்கிறது.

இது நடந்த இடம் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் எம்.ஐ.டி. நடந்த ஆண்டு 2014. அவர் ஆனந்தகுமார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே எம்.ஐ.டி. மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘எட் எக்ஸ்’ எனும் கல்வி வலைதளத்தில் கணிதப் பாடம் நடத்த அழைக்கப்பட்டுள்ளார். இதை ஆனந்த் குமாரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!

அந்த ஆனந்த் குமாரைப் பற்றித்தான் பேசுகிறது ‘சூப்பர் 30 ஆனந்த் குமார்’ எனும் புத்தகம். இதனை எழுதியவர் பிஜு மேத்யூ. பெங்குயின் வெளியீடான இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 

ஆனந்த் குமார்...? பிஹார் மாநிலத்தின் ஒரு மூலையில் பிறந்த அவர், கணிதம் படிப்பதற்காகவே பிறந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் கணிதப் பாடத்தை அவ்வளவு விரும்பிப் படித்தார். அதன் விளைவு கல்லூரிக் காலத்திலேயே உலக அளவில் பிரபலமான கணித ஆய்விதழ்களில் கட்டுரைகள் வெளிட்டார். அது அவரை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் மேற்படிப்புப் படிக்க வரவேற்றது.

ஆனால், வறுமையும், தான் உயரக் காரணமாக இருந்த தந்தையின் மரணமும் கேம்ப்ரிட்ஜ் கனவை, கனவாக மட்டுமே இருக்கச் செய்தன. அதனால் அவர் சோர்ந்துவிடவில்லை. ‘என்னைப் போன்று திறமை இருக்கும், வறுமையில் வாடும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புகிறேன். அதுவரை என் அப்பா எனக்காகப் பரிசளித்த இந்த ‘கோட்’டை நான் அணியமாட்டேன்’ என்று சபதம் ஏற்றார். அந்த சபதம்தான் இன்று ‘சூப்பர்30’ என நிலைபெற்றிருக்கிறது!

வருடத்துக்கு 30 பேர். அவர்களை ஐ.ஐ.டி. நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது. இதுதான் ஆனந்த் குமாரின் இலக்கு. 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுப் பொறியியல் படிப்புக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். சிலர், மேற்படிப்பு படிக்க வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கிறார்கள். விரைவில், ஆனந்த் குமாரின் மாணவர்கள் சிலர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் காலடி எடுத்து வைப்பார்கள். ‘கோட்’ அவர் கைக்கு வரும் நாள் தொலைவில் இல்லை.

இந்தப் பயிற்சிகளுக்கு மாணவர்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அனைத்தும் இலவசம். உணவு, தங்கும் வசதி உட்பட!

இந்தத் திட்டத்தால் தங்கள் பிசினஸ் பாதிக்கப்படும் என்று கூறி, சில கோச்சிங் சென்டர் முதலாளிகள் அவரைக் கொலை செய்யக்கூடத் துணிந்திருக்கின்றனர். அத்தனையையும் தாண்டி, அவரால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிகிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அவர் தன் மாணவர்களிடத்தில் சொல்கின்ற ‘சக்சஸ் சீக்ரெட்’ தான். அது: “வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க எப்போதும் பல வழிகள் உண்டு. அது கணிதத்துக்கும் பொருந்தும்!”

ஆனந்த் குமார் சிறுவனாக இருக்கும்போது, அவரின் தந்தை ஆனந்தின் காலில் விழுந்து வணங்குவாராம். அதனை ஆனந்த் பதறித் தடுத்து “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அதற்கு அவரின் தந்தை “நீ பெரியவனாகி, சமூகத்தில் சிறந்த மனிதனாக விளங்கும்போது, ஒருவேளை நான் உயிரோடு இல்லாமல் போய்விட்டால், உன்னை எப்படி வணங்குவது? அதுதான் இப்போதே உன்னை வணங்குகிறேன்!” என்றாராம்.

ஆனந்த் குமாரின் முயற்சியால்தான் இன்று பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிற்கு ஆகும் செலவும், கல்விக் கடனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதனால், இன்று பல மாணவர்களின் மனதில் அவர் கடவுளாகத் தெரிகிறார்.

இவன் தந்தை என்னோற்றான் கொல்..! 

நன்றி: தி இந்து (இளமை புதுமை)