Saturday, October 29, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - VII

விடுதலையின் 60 ஆண்டுகள்!


ந.வினோத் குமார்
 
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன‌. 'ஒரு மனிதன் ஒரு வாக்கு' எனும் நிலையை நாம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் 'ஒரு மனிதன் ஒரே மதிப்பு' எனும் நிலையை நாம் அடைந்திருக்கிறோமா என்றால், அது இன்றளவும் ஒரு கேள்வியாகவே மிஞ்சுகிறது.

அந்த நிலையை வழங்க மறுக்கும் இந்து மதத்தின் நால்வர்ண அமைப்பிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க, 1956-ம் ஆண்டு அம்பேத்கர் பல்லாயிரக்கணக்கானவர்களோடு தானும் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அம்பேத்கர் மேற்கொண்ட அந்த விடுதலை முயற்சிக்கு இந்த ஆண்டு, இந்த மாதம் 60 வயது ஆகிறது!

முந்தைய நாள் முடிவு செய்து, மறுநாள் காலையில் மதம் மாறிவிடவில்லை அம்பேத்கர். சுமார் 35 ஆண்டு காலம் அனைத்து மதங்களையும் ஆய்வுக்குட்படுத்திய பிறகே புத்த மதத்தைத் தேர்வு செய்தார் அவர். அப்போது பலர் அவரிடம் 'நீங்கள் ஏன் புத்த மதத்தைத் தேர்வு செய்தீர்கள்?' என்ற கேள்விக்கு அவர் தந்த பதிலின் வடிவமாகவே அவர் எழுதிய 'தி புத்தா அண்ட் ஹிஸ் தம்மா' எனும் நூலை நாம் காண முடியும்.

1956-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகம், அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு 1957-ம் ஆண்டுதான் வெளியானது. எளியவர்கள் படிக்கக் கடினமாக இருக்கலாம் என்றும், இந்த நூலில் அவர் எடுத்தாளும் பெளத்த மத விஷயங்களைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள், விளக்கங்கள் கொடுக்கலாம் என்றும் பேராசிரியர்கள் ஆகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அஜய் வர்மா ஆகியோர் நினைத்ததன் விளைவு, இந்தப் புத்தகத்துக்கு செம்பதிப்பு (க்ரிட்டிக்கல் எடிஷன்) ஒன்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் மூலம் கிடைத்தது.


மூலப் பிரதியின் முதல் பதிப்பு (1957) வெளியானபோது பல்வேறு தளங்களிலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தன. அதில் குறிப்பாக ஒன்று: 'புத்தரின் போதனைகளை அம்பேதகர் அரசியலாக்குகிறார். புத்தரின் தம்மத்தை அவர் அரசியல் பிரகடனமாக மாற்றுகிறார்' என்பது! விட்டு விடுதலையாகும்போது சிலருக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்?

இந்தப் புத்தகம் புத்தரின் தம்மத்தைப் பற்றி மட்டும் எடுத்துச் சொல்லவில்லை. மாறாக, புத்தரின் வாழ்க்கையையே வேறொரு கோணத்திலிருந்து அணுகுகிறது. 'புத்தர் வீட்டை விட்டு வெளியே வந்தார், நோயாளியைப் பார்த்தார், ஏழைகளைப் பார்த்தார், மரணத்தைப் பார்த்தார், அதனால் சாமியார் ஆனார்' என்கிற கதையெல்லாம் இல்லை.

புத்தனின் துறவற வாழ்க்கையே, சாக்கிய முனிகளின் சங்கத்தை எதிர்ப்பதிலிருந்துதான் தொடங்குகிறது. சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையிலான ரோகிணி நதிநீர்ப் பங்கீடு குறித்து விவாதம் எழுகிறது. அப்போது சாக்கியர்கள் 'இந்தப் பிரச்சினைக்குப் போர்தான் தீர்வு' என்று பிடிவாதம் பிடிக்க, கெளதம சித்தார்த்தன் 'போர் கூடாது' என்கிறான். மனித குல வரலாற்றில் அதிகாரம், பெரும்பாண்மை வாதம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதன் முதல்படி, இப்படியான எதிர்ப்புகளிலிருந்தே தொடங்கியிருக்கின்றன.

புத்தனின் வாழ்க்கையைச் சொல்லிச் செல்வதன் வழியே அவர் போதனைகளையும் சொல்லிச் செல்கிறார் அம்பேத்கர். அதில் முக்கியமான ஒரு போதனை, மனிதர்களை இனங்காணுவது எப்படி என்பது.

புத்தரின் பார்வையில் மூன்று விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். துன்மார்க்கன், சிறந்த மனித‌ன், ஞானமடைந்தவன் ஆகியோர்தான் அவர்கள்.

துன்மார்க்கன் யார்?

மற்றவர்களின் தவறுகளை நாம் கேட்காமலேயே சொல்பவன். ஆனால் நாம் கேட்கும்போது சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மற்றவர்களின் தவறுகளை எந்த வித ஒளிவு மறைவுமின்றி விளக்கமாகக் கூறுபவன்.

மற்றவர்களின் நல்ல குணங்களைப் பற்றிக் கேட்டால், சொல்லாதவன். நாம் கேட்காதபோதும் சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மற்றவர்களின் நல்ல குணங்களைப் பேசுபவன்.

தன்னுடைய தீய குணங்களைப் பற்றிக் கேட்டால் சொல்லாதவன். நாம் கேட்காதபோதும் சொல்லாதவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், மேலோட்டமாகத் தன் தீய குணங்களைப் பற்றிச் சொல்பவன்.

தன்னுடைய நல்ல குணங்களைப் பற்றித் தானாகவே சொல்பவன். நாம் கேட்காதபோதும் சொல்பவன். கொஞ்சம் அழுத்திக் கேட்டால், எந்த வித ஒளிவு மறைவுமின்றி தன்னுடைய நல்ல குணங்களைப் பற்றி விளக்கமாகக் கூறுபவன்.

இவர்கள் எல்லோரும் துன்மார்க்கர்கள்.

சிறந்த மனித‌ன் யார்?

தன்னுடைய நலனுக்காகவோ அல்லது பிறரின் நலனுக்காகவோ உழைக்காதவர்கள்; தன்னுடைய நலனுக்காக மட்டுமே உழைத்து, பிறரின் நலனுக்காக உழைக்காதவர்கள்; பிறரின் நலனுக்காக மட்டுமே உழைத்து, தன்னுடைய நலனுக்காக உழைக்காதவர்கள்;  தன்னுடைய நலனுக்காகவும், பிறரின் நலனுக்காகவும் உழைப்பவர்கள் என்று நான்கு பிரிவுகளில் மனிதர்கள் அடங்குவர்.

இதில் முதல் வகையினர், சடலத்தின் இரு முனைகளிலும் கொளுத்தப்பட்ட தீ போன்றவர்கள். எதற்கும் பயன்படமாட்டார்கள். முதலிரண்டு வகையினரை விட மூன்றாம் வகை மக்கள் நல்லவர்கள். ஆனால் நான்காம் வகையினரே மூவரை விடவும் சிறந்தவர்கள் ஆவர்.

ஞானமடைந்தவன் யார்?


ஒரு முறை புத்தன் தன் வழியே சென்றுகொண்டிருக்கும்போது, எதிரே வந்த முனிவர் ஒருவர், "ஐயா நான் வணங்கத் தகுந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் தேவரோ, கந்தர்வரோ, அசுரரோ அல்லது உயர்ந்த மனிதரோ?" என்று கேட்கிறார்.

அதற்கு புத்தன், "என்னுடைய அறியாமையிலிருந்து நான் வெளிவராதிருந்தால், நீங்கள் சொல்லும் அத்தனையாகவும் நான் இருந்திருப்பேன். ஆனால் தற்போது நான் தெளிவடைந்துவிட்டேன். நீரிலேயே பிறந்து, நீரிலேயே வளர்ந்தாலும் எவ்வாறு தாமரையில் தண்ணீர் ஒட்டாமல் இருக்கிறதோ அப்படியே நான் இந்த உலகத்தில் பிறந்திருந்தாலும், வாழ்ந்திருந்தாலும் இந்த உலகத்தினால் கறைபடாதவனாக இருக்கிறேன். எனவே, என்னை ஞானியென்று நீங்கள் அறிவீர்களாக!" என்றான்.

இந்த மூவரில் நீங்கள் யார்?

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் ஏழாவது பதிவு இது.)

Sunday, October 9, 2016

மனம் திறக்கும் சொற்கள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 9 அக்டோபர், 2016
 
ஒவ்வொரு மனித‌ மனமும் எவ்வளவு பைத்தியக்காரச் சிந்தனைகளுடன் இருக்கிறது என்பது விலகவே விலகாத மர்மம். ஒவ்வொரு மனதிலும் அந்தச் சிந்தனைகளின் சதவீதத்தில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், யாரிடமும் பைத்தியக்காரத்தனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. 

எது பைத்தியக்காரத்தனம்? அதை யார் முடிவு செய்வது? அதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? 'நிர்வாணமாக இருக்கும் ஒரு மனிதனை நீங்கள் ‘நாகரிகமற்றவன்’ என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்கிற ரீதியில் ஜெயகாந்தன் தன் கதை ஒன்றில் கேள்வி எழுப்பியிருப்பார்.

‘பைத்தியக்காரத்தனம்’ என்பதை எப்போதும் நாம் மற்றவர்களுக்கே அடையாளப்படுத்துகிறோம். அதை ஒருபோதும் நம் அடையாளமாக மாற்றிக்கொள்வதில்லை. நாம் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பது தெரிந்தாலும், அதை அங்கீகரிக்கத் தயங்குகிறோம்.

நம் வீட்டில், நம் குடும்பத்தில் ஒருவருக்குப் பைத்திய நிலை ஏற்பட்டால் அதை நாம் என்ன செய்வோம்? அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவோம்? அவர்களை நாம் எப்படி அணுகுவோம்?

இதற்கான பதில்களை அளிப்பதாக இருக்கிறது ‘எ புக் ஆஃப் லைட்’ எனும் புத்தகம். நாவலாசிரியர் ஜெர்ரி பின்டோ தொகுத்த இந்தப் புத்தகத்தை ‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

 
பைபோலார் டிஸார்டர், மனச்சிதைவு, மன அழுத்தம், ஆட்டிஸம், தற்கொலை எண்ணம் என மனப் பிறழ்வு நிலைகள் பலவற்றைப் பேசுகிறது இந்தத் தொகுப்பு. சிறுகதை, நினைவுக் குறிப்பு, வாக்குமூலம் எனப் பல வடிவங்களில் மேற்கண்ட பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. மொத்தம் 13 கதைகள். அவற்றில் கையாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாமே அந்தக் கதைகளை எழுதியவர்களின் நிஜ வாழ்க்கையில், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டவை. அந்த அனுபவங்களைச் சொற்களின் மூலம் நமக்குக் கடத்துவதன் மூலம் வாசகர்களுக்கு மனப் பிறழ்வுகளைக் கையாள்வதற்கான சில முக்கியமான பாடங்களை விட்டுச் செல்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஜெர்ரி பின்டோவே, இதற்கான ஒரு வாழும் சாட்சியமாக இருக்கிறார். அவருடைய அம்மாவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருந்தது. அதை அவர் எப்படிக் கையாண்டார் என்பதைத்தான் தனது முதல் நாவலான ‘எம் அண்ட் தி பிக் ஹூம்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருந்தார்.

பொதுவாகவே, நம் வீடுகளில் யாரேனும் நோயுற்றால், அவர்களுக்குச் சேவை செய்து சோர்வடையும் நேரத்தில் அவர்கள் மீது ஏன் என்று புரியாத ஒரு கோபம் ஏற்படும். அந்தக் கோபம் எத்தகையதாக இருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் அமன்தீப் சந்து என்பவர், தன்னுடைய கதையில் இப்படிச் சொல்கிறார்: “கோபம் ஒரு அழிவு சக்தி. அதுவும் நம் நாக்கிலிருந்து புறப்படும்போது, பேரழிவை உண்டாக்கக்கூடியது”.

இன்னொரு கதையில் ‘ஆட்டிஸம்’ பாதிப்பு கொண்ட தன் மகனைத் தான் நடத்தும் விதம் குறித்து மதுசூதன் ஸ்ரீநிவாஸ் என்பவர் எழுதிய பதிவில் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் குழந்தைகள் எதையும் எப்போதும் எங்களிடம் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை. மாறாக, இந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்பதற்காக நாங்கள்தான் அவர்களிடம் நிறைய விஷயங்களுக்காகப் பிடிவாதம் பிடிக்கிறோம்”.

சாதாரண உடல்நிலைக் கோளாறுகளுக்கே பொறுமை இழந்து கோபப்படும் நாம், மனநலக் கோளாறு உடையவர்களை எப்படி நடத்துவோம்?

உலக மனநல நாளின் (அக்டோபர் 10) இந்த ஆண்டு கருப்பொருள் ‘மனநல கண்ணியமும் மனநல முதலுதவியும்’ என்பது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதும், மனக் குழப்பங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் நாமே முதலுதவியும் செய்யலாம் என்பதும்தான் இதன் பொருள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவது சமூகத்தின் கைகளில் உள்ளது. ஆனால், முதலுதவியை நம் ஒவ்வொருவராலும் செய்ய முடியும். எப்படி? 

இந்தத் தொகுப்பில் உள்ள கதையொன்றில் வரும் வரிதான் இதற்குப் பதில்: ‘குழம்பிய மனதுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள்!’ 

நன்றி: தி இந்து (கலை இலக்கியம்)