Friday, December 28, 2018

எல்லாம் ஒரு விளம்பரம்!

ந.வினோத் குமார்
பதிப்பிக்கப்பட்ட தேதி: 25 டிசம்பர் 2015
‘உங்களுக்குப் பியுஷ் பாண்டேவைத் தெரியுமா?', என்று கேட்டால் நம்மில் பலர் தலையை இட வலப்பக்கமாக ஆட்டுவோம். சரி. '90-களில் தூர்தர்ஷனில் அவ்வப்போது ஒளிபரப்பான‌ ‘மிலே சுர் மேரா தும்ஹாரா' என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா' என்றால், தலையை மேலும் கீழும் ஆட்டுவோம். இந்தியாவில் உள்ள மொழிகளைப் போற்றும் விதமாக உருவான அந்தப் பாடலை எழுதியவர்தான் இந்த பியுஷ் பாண்டே!
90-களில் பிறந்து வளர்ந்தவர்கள் 'டெய்ரி மில்க்' சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டு கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து ஒரு பெண் ஆட்டம் போடும் விளம்பரத்தை அனைவரும் சிலாகித்திருப்போம். அதேபோல ராஜஸ்தானில் ஒரே ஒரு வண்டியில் ஊரே செல்ல, அந்த வண்டியின் பின்புறத்தில் 'ஃபெவிகால்' போர்ட் தொங்கும் விளம்பரம், தங்கள் கல்லூரியிலிருந்து பிரியாவிடை பெறும் பேராசிரியருக்கு, அவரின் மாணவர்கள் கடிகாரம் ஒன்றைப் பரிசளிக்கும் 'டைட்டன்' விளம்பரம் எனப் பல விளம்பரங்களை சேனல் மாற்றாமல் நாம் பார்த்து ரசித்திருப்போம் இல்லையா..?
அந்த விளம்பரங்களின் கர்த்தா பியுஷ் பாண்டே. விளம்பர உலகத்துக்கு ‘ஆகில்வி அண்ட் மேதர்' நிறுவனம் ஒரு அடையாளமென்றால், அந்த நிறுவனத்துக்கே அடையாளமாக விளங்கிவருபவர் பியுஷ் பாண்டே. தற்போது அந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராக இருக்கிறார்.
கேட்பரிஸ், ஃபெவிகால், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன், வோடஃபோன் (அந்த நாய்க்குட்டி, ஸுஸு விளம்பரங்கள்) உள்ளிட்ட‌ பல 'படா படா' நிறுவனங்களுக்கு 'பளீர், ஜிலீர்' விளம்பரங்களை உருவாக்கிக் கொடுத்தவர், தனது விளம்பரங்களுக்காக சர்வதேச அளவில் 800-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர், விளம்பரங்களில் 'க்ளே அனிமேஷன்' என்ற உத்தியை இந்தியாவில் முதன்முதலில் பயன்படுத்தியவர், இந்திய தபால் துறைக்கான 'சைனேஜ்' (மஞ்சள் நிறத்தில் 'டிக்' வடிவத்தில் உள்ள சின்னம்) உருவாக்கியவர் எனப் பல பெருமைகளுக்கு உரியவர் பியுஷ்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரத் துறையில் தான் பெற்ற அனுபவங்களைத் திரட்டி, 'பாண்டேமோனியம்' என்ற தலைப்பில் சமீபத்தில் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை பென்குவின் பதிப்பகக் குழுமம் வெளியிட்டுள்ளது.
அவரின் அனுபவங்களிலிருந்து, விளம்பரத் துறையில் ஈடுபட ஆர்வமுள்ள இளைஞ‌ர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாகவே நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கான வெற்றிச் சூத்திரங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
# நாம் ஒரு துறையில் வெற்றி பெற, நம்மைச் சுற்றி விதவிதமான திறன்களைக் கொண்ட மனிதர்களை இணைத்து நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
# வாடிக்கையாளரின் திருப்திதான் அவரை நம்மிடம் திரும்பத் திரும்பக் கொண்டுவந்து சேர்க்கும்.
# உங்களுக்குள் இருக்கும் குழந்தையைக் கொன்றுவிடாதீர்கள். அவனோ, அவளோதான் ஜீனியஸ். நீங்கள் அல்ல!
# வெளிநாட்டு விளம்பர நிறுவனங்கள் நுகர்வோரின் மனநிலையைத் தொந்தரவு செய்யும் விதமாக விளம்பரங்களை அமைத்து, அதன் மூலம் பொருட்களையோ சேவைகளையோ வாங்க‌ச் செய்யும். ஆனால், இந்திய விளம்பர நிறுவனங்களோ, நுகர்வோர் மனம் விரும்பும்படியான விளம்பரங்களைச் செய்கின்றன.
# விருதுகளைக் குறி வைத்தே வேலை செய்வது நம்மை நாமே தோற்கடித்துக்கொள்வதற்கு ஒப்பாகும். விருதுகளைத் துரத்தாதீர்கள். நல்ல பணிகளைத் தேடுங்கள்.
இப்படி ஏகப்பட்ட அனுபவத் தெறிப்புகள். தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொள்ளும் முறை அவரின் விளம்பரங்களைப் போலவே மிகவும் எளிமையானதாகவும், மனதைத் தொடும் விதமாகவும் அமைந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் 'பேண்டிமோனியம்' (pandemonium) என்ற சொல்லுக்கு 'அமளி' என்று அர்த்தம் காட்டுகின்றன அகராதிகள். ‘பாண்டேமோனியம்' (Pandeymonium) எனும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, பலரின் மனதில் ஆனந்த அமளியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
நன்றி: தி இந்து (இளமை புதுமை)

Monday, November 12, 2018

வால்டருக்குப் போகட்டும் அந்தக் கோப்பை!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 29 ஜூன் 2018

இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில், 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஒரு கறுப்புச் சூரியன் உதயமானது. தனது கால்களின் திறமையால், இளமையில் அது ஒளிவீசியது. நாட்டுக்காக, விளையாட்டைத் துறந்து போரில் ஈடுபட்டது. இளமையிலேயே அஸ்தமித்தது. அந்தச் சூரியன்… வால்டர் டல்!

‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்’ என்று பெருமைகொள்வார்கள் இங்கிலாந்துக்காரர்கள். ஆனால், இங்கிலாந்து நாட்டின் இந்த முதல் கறுப்பினக் கால்பந்துச் சூரியனை இன்றுவரையில் இங்கிலாந்து அங்கீகரிக்காமல் இருக்கிறது. 

‘கிராஃபிக்’ வடிவத்தில் காமெடி

அந்தச் சூரியன் விட்டுச் சென்ற தகிப்பை, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் ஹிஸ்டரி ஆஃப் ஃபுட்பால்: ஹால் ஆஃப் ஃபேம்’ எனும் புத்தகத்தில் கார்ட்டூன் போட்டுச் சொல்கிறார் டேவிட் ஸ்குவிர்ஸ். ‘தி கார்டியன்’ இதழின் கார்ட்டூனிஸ்ட்டான இவர், எழுதி வரைந்துள்ள இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியானது.

 
டீகோ மரடோனா, பீலே, ரொனால்டோ, மெஸ்ஸியைப் போன்று இந்தத் தலைமுறைக்குத் தெரிந்த வீரர்களை மட்டுமல்லாது, சாக்ரடீஸ், ஆண்ட்ரியா பிர்லோ, மரியோ சகால்லோ போன்ற கடந்த தலைமுறை வீரர்களைப் பற்றியும், அலெக்ஸ் ஃபெர்கூஸன் போன்ற கிளப் நிர்வாகிகளைப் பற்றியும் காமெடியாக, கறுப்பு வெள்ளையில் ‘கிராஃபிக்’ புத்தக வடிவத்தில் சொல்லியிருக்கிறார் டேவிட்.

அதிகம் கோல் போடும் அல்லது அதிகம் ரசிகர்களைக் கொண்ட வீரர்களைப் பற்றிப் பேசும் வழக்கமான விளையாட்டு வரலாற்றுப் புத்தகங்கள்போல் அல்லாமல், கோல் கீப்பர்கள், மிட்ஃபீல்ட் ஆட்டக்காரர்கள், டிஃபெண்டர்கள், ஃபார்வேர்டு ஆட்டக்காரர்கள் எனப் பல நிலை வீரர்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் சுவாரசியமாகப் பேசுகிறது. 

முதல் கறுப்பின வீரர்

பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் இங்கிலாந்தின் உள்ள கெண்ட் நகரத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகனாக 1888 ஏப்ரல் 28 அன்று பிறந்தார் வால்டர் டல். இப்படி, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர்களை மேற்கத்திய நாடுகளில் ‘கலப்பினத்தவர்கள்’ என்றுஅழைக்கும் வழக்கம் உள்ளது. இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்த முதல் கறுப்பர், கலப்பினத்தவர் வால்டர் டல்!

தனது 9 வயதில் பெற்றோர்களைப் பறிகொடுத்த வால்டர், லண்டனில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குக்கால்பந்தவிளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரது திறமையைப் பார்த்து ‘டோட்டென்ஹாம் ஹாட்ஸ்பர்’ எனும் கால்பந்து கிளப், வால்டரைத் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டது. அந்த கிளப்பில் சில காலம் விளையாடியபிறகு 1911-ல் ‘நார்த்தாம்ப்டன் டவுன்’ கிளப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். அங்கிருந்தபோது சுமார் 110 போட்டிகளில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

 
முதல் உலகப் போர் தொடங்கியபோது, கால்பந்தை விட்டுவிட்டு இங்கிலாந்து ராணுவத்தின் ‘மிடில்செக்ஸ் ரெஜிமெண்ட் 17-வது பட்டாலியன்’ படைப் பிரிவில் சேர்ந்தார் வால்டர். அங்கு அவரது தலைமைப் பண்பைப் பார்த்த வெள்ளை அதிகாரிகள், அவரை ‘சர்ஜெண்ட்’ நிலைக்கு உயர்த்தினார்கள். இவ்வாறு, இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியான முதல் கறுப்பினத்தவரும் வால்டர் டல்தான்! 

சூரியன் அஸ்தமித்த நூற்றாண்டு

முதல் உலகப் போரில், தனது தலைமையில் 26 வீரர்கள் கொண்ட குழுவை வழிநடத்தி, ஜெர்மனி ராணுவ முகாம்களுக்குச் சென்று போரிட்டு, 1918-ம் ஆண்டு, மார்ச் 25-ம் தேதி வீர மரணமடைந்தார் வால்டர் டல். ஆனால், எவ்வளவோ தேடியும் அவரது உடலை மீட்க முடியவில்லை. முதல் உலகப் போர் முடிந்த நூறாவது ஆண்டு மட்டுமல்ல, வால்டர் டல் எனும் அந்தக் கால்பந்துச் சூரியன் மறைந்த நூறாவது ஆண்டும் இதுதான்!

போரில் காட்டிய அவரது வீரத்தை அங்கீகரிக்கும் விதமாக, ராணுவத்தின் மூலம் அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ‘இறந்தவர்களுக்கு அவ்வாறு விருது வழங்கும் வழக்கமில்லை’ என்று இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் மறுத்து வந்தது.

ஆனால் 2016-ல், வால்டர் டல்லின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஃபில் வஸிலி எனும் வரலாற்றாசிரியர், ‘வால்டர் டல் போன்ற கறுப்பர்களுக்கு விருது வழங்கக் கூடாது’ என்று அன்றைய வெள்ளை அதிகாரி ஒருவர் கொடுத்த ரகசிய ‘மெமோ’வைக் கண்டு பிடித்தார். அதைச் சாட்சியமாக வைத்து, ‘நிறவெறி காரணமாக, வால்டருக்கு அன்று விருது வழங்கப்படவில்லை’ என்று நிரூபித்தார்.


இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே, வால்டருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்றபடி சட்டத்தைத் திருத்த, இங்கிலாந்து அரசு முன் வருவதாக இல்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றிருக்கும் இங்கிலாந்து அணி, ஒரு விஷயம் செய்யலாம். அதாவது, இந்த முறை ‘ஃபிஃபா’ கோப்பையை இங்கிலாந்து வென்றால், அணி வீரர்கள் அதை வால்டருக்குச் சமர்ப்பிக்கலாம். ஏனென்றால், விருது கொடுப்பதைவிட, வால்டருக்குச் செய்யும் மிகச் சிறந்த மரியாதை அதுவே!

நன்றி: இந்து தமிழ் நாளிதழ்

Tuesday, October 30, 2018

ஆதிக்கத்தை வென்ற அன்னா பர்ன்ஸ்!

ந.வினோத் குமார் 

அவளுக்கு வயது 18. பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்தவள். அதனால் அவள் ‘மிடில் சிஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறாள். பிரெஞ்சு மொழி வகுப்பில் படிக்கும் அவள், எப்போதும் சாலையில் நடந்து செல்லும்போது, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே செல்வாள். அது ஏன் 19-ம் நூற்றாண்டு? ஏனென்றால் அவளுக்கு 20-ம் நூற்றாண்டு, விரும்பத்தக்கதாக இல்லை.  

அன்றும் அப்படித்தான். பிரெஞ்சு வகுப்பை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சர் வால்டர் ஸ்காட் எழுதிய ‘இவான்ஹோ’ நாவலைப் படித்துக்கொண்டே நடந்து போகிறாள். அப்போது, ஒரு வெள்ளை நிற வேன், அவள் அருகில் வந்து நிற்கிறது. ‘லிஃப்ட் வேண்டுமா?’ என்று கேட்கிறார் வேனுக்குள் இருந்தவர். கேட்டவர், 41 வயது ஆண். அவள் மறுக்கிறாள்.  

வெள்ளை நிற வேனில் வந்ததால் அவருக்கு ‘மில்க்மேன்’ என்று பெயரிடுகிறாள் அவள். அடுத்த சில நாட்களில், அவள் ‘ஜாகிங்’ சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டாவது முறையாக அவளைச் சந்திக்கிறார் ‘மில்க்மேன்’. அவர்கள் இருவரும் சாலையில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்று முடிவு கட்டுகிறார்கள். 

இதனால் அவளது வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. உண்மையில், அவள், ‘மில்க்மேனை’ காதலிக்கவில்லை. மாறாக, தனக்கு அறிமுகமாகி ஒரு வருடமேயான ‘இவனை நாம் ‘பாய் ஃபிரெண்ட்’ ஆக வைத்துக்கொள்ளலாமா..?’ என்று யோசிக்கச் செய்கிற ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டை காதலிக்கிறாள். அது காதல்கூட இல்லை. சும்மா ஒரு ‘டேட்டிங்’. அவ்வளவுதான். 

அவள் வேறொருவனைக் காதலிப்பது ‘மில்க்மேனு’க்குத் தெரிந்துவிடுகிறது. ‘என்னுடைய ஆசைக்கு அடிபணிந்து விடு’ என்று அவளைத் திரும்பத் திரும்ப ‘ஸ்டாக்கிங்’ செய்கிறார் அவர். அவள் மறுத்துவிடுகிறாள். ‘இதற்கு நீ சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், உன் ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’டைக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டுகிறார். அவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? ஏனென்றால், அவர் அந்த தேசத்தின் அரசை எதிர்க்கும் மிக முக்கியமான தீவிரவாதக் கூட்டத்தில் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அந்த மாவட்டத்தில் அவர்தான் பெரிய ஆள்!  

அவரின் அந்தப் பயமுறுத்தலுக்கு ‘மிடில் சிஸ்டர்’ ஆற்றிய எதிர்வினை என்ன? அவளது ‘மேபீ – பாய் ஃபிரெண்ட்’ காப்பாற்றப்பட்டானா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது அன்னா பர்ன்ஸ் எழுதிய ‘மில்க்மேன்’ நாவல். 2018-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை, இந்த நாவல் கடந்த 16-ம் தேதி பெற்றது!

 
*** 
இந்த நாவலில் எந்தக் கதாப்பாத்திரத்துக்கும் பெயர்கள் இல்லை. அவர்களின் உறவு முறை, அவர்கள் செய்யும் வேலை போன்றவற்றின் அடிப்படையில், அந்த உறவு முறையும், செய்யும் வேலையுமே பெயர்களாக வழங்கப்பட்டுள்ளன. இதனால், நாவலைப் படிக்கும்போது, யார், எதைச் சொல்கிறார்கள் என்ற குழப்பமும் அயற்சியும் ஏற்படுகிறது. எனவே விமர்சகர்கள் இதை, ‘உங்களைச் சோதிக்கும் நாவல்’ என்று சொல்கிறார்கள். ஆம்… நம் பொறுமையை ஏகத்துக்கும் சோதிக்கிறது! 

நாவல் முழுவதும், ‘மிடில் சிஸ்டர்’ எனும் நாயகி, தன் கதையைச் சொல்வது போல அமைந்திருக்கிறது. கதையில், வடக்கு ஐயர்லாந்து சிவில் போர், சர்வதேச அளவிலான பெண்ணியக் குழு உருவாதல், தலிபான்களின் அடக்குமுறை, ஸ்டாலின் கால ரஷ்யாவில் இருந்த நிலை, இன்றைப் பெரும் பரபரப்பைக் கிளப்பி வரும் ‘மீ டூ’ போன்ற பல அரசியல் நிகழ்வுகளின் சாயல் ஆங்காங்கே தென்படுகின்றன.  

புகழ்பெற்ற ஐயர்லாந்து நாடகாசிரியர் சாமுவேல் பெக்கெட்டின் எழுத்துச் சாயல், இந்த நாவலில் தெரிவதால், இதை ‘பெக்கெட்டியன்’ நாவல் என்றும் கருதுகிறார்கள் விமர்சகர்கள். ஆனால், அன்னாவோ, ‘இந்த நாவலை எழுதி முடிக்கும் வரை, நான் பெக்கெட்டைப் படித்ததே இல்லை’ என்கிறார். 

*** 
அன்னா பர்ன்ஸ், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட வடக்கு ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இதுவரை இரண்டு நாவல்களும், ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறார். ‘மில்க்மேன்’, இவரது நான்காவது படைப்பாகும்.


இந்த நாவல், வடக்கு ஐயர்லாந்தின் தலைநகரமான பெல்ஃபாஸ்ட் நகரத்தில், 1970-களில் நடப்பதாகச் சித்தரித்துள்ளார் அன்னா. அந்தக் காலகட்டம் வடக்கு ஐயர்லாந்துக்கு மிகவும் சோதனையான காலகட்டம். ‘தி ட்ரபிள்ஸ்’ என்று அழைக்கப்பட்ட வடக்கு ஐலர்லாந்து சிவில் போர், அப்போதுதான் உச்சத்தில் இருந்தது.  

புரொட்டெஸ்டண்ட் மதப் பிரிவினரைப் பெரும்பான்மையினராகவும், கத்தோலிக்கர்களைச் சிறுபான்மையினராகவும் கொண்ட நாடு, வடக்கு ஐயர்லாந்து. சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து பல அநீதிகள் நடைபெற்று வந்தன. அதற்கு எதிராக, 1969-களின் மத்தியில், கத்தோலிக்கர்கள் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர். புரொட்டெஸ்டண்ட்கள் அதை ஒடுக்க ஆரம்பிக்க, தொடங்கியது ‘தி ட்ரபிள்ஸ்’ சிவில் யுத்தம்.  

நாட்டின் அரசியலமைப்பு, இந்த யுத்தத்தின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. புரொட்டெஸ்டண்ட்களோ, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்துடனேயே, வடக்கு ஐயர்லாந்து இணைந்திருக்க வேண்டுமென்று கூக்குரலிட்டார்கள். கத்தோலிக்கர்களோ, ஒருங்கிணைந்த ஐயர்லாந்துக் குடியரசுடன், வடக்கு ஐயர்லாந்து இணைய வேண்டும் என்றனர்.  

இந்த யுத்தம் அடுத்த சுமார் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இறுதியாக 1998-ம் ஆண்டு, ‘புனித வெள்ளி உடன்படிக்கை’ மூலம், அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அந்த உடன்படிக்கையின்படி, ஐக்கிய ராஜ்ஜியத்தின் நாடாளுமன்றத்தின் பொறுப்புகள், வடக்கு ஐயர்லாந்துக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று வரையில், அந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே வடக்கு ஐயர்லாந்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.  

இப்படி ஒரு யுத்தப் பின்னணியைக் கொண்ட தேசத்திலிருந்து வந்த நாவலாசிரியர் அன்னா பர்ன்ஸ், புக்கர் பரிசை வென்ற முதல் ஐயர்லாந்து நாட்டு எழுத்தாளர் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.  

புக்கர் பரிசு, அடிப்படையில், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் காமென்வெல்த் நாடுகளைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களுக்குத்தான் என்று இருந்தது. பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டு, 2014-ல்தான் அமெரிக்க எழுத்தாளர்களையே இதில் சேர்க்க ஆரம்பித்தார்கள். இந்த ஆண்டு, இந்த விருது தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு. ஆனால், கடந்த 49 வருடங்களில் வடக்கு ஐயர்லாந்தில் இருந்து, ஒரு எழுத்தாளருக்குக்கூட இந்த விருது போய்ச் சேரவில்லை. அந்த விருது, முதன்முதலில் அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குப் போய்ச் சேர்ந்திருப்பது மட்டுமல்லாமல், இதுவரையில் இந்தப் பரிசுக்கான போட்டியில் இங்கிலாந்து எழுத்தாளர்கள் செலுத்தி வந்த ஆதிக்கமும் முடிவுக்கு வந்திருப்பதால், அன்னா பர்ன்ஸ் பெற்ற வெற்றி கொண்டாடப்பட வேண்டியதாகிறது!  

ஆ… சொல்ல மறந்துவிட்டோமே…. அன்னா பர்ன்ஸ், ஒரு கத்தோலிக்கர்!

நன்றி: காமதேனு (29/10/2018 - 05/11/2018)

Monday, October 15, 2018

துணிந்து நின்றாய் பெண்ணே!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 14 அக்டோபர் 2018 

முதலில் ஹாலிவுட், பிறகு நோபல் இலக்கியப் பரிசுக் குழு, பின்னர் அமெரிக்க நீதிமன்றம், தொடர்ந்து பாலிவுட், அதைப் பின்பற்றி இந்தியப் பத்திரிகை, எழுத்துத் துறை என்று நீண்டு இப்போது கோலிவுட் வரை வந்து நிற்கிறது ‘மீ டூ’ (#MeToo). அதனால்தான், இது ‘மீ டூ’க்களின் காலமாக இருக்கிறது!

‘எந்த ஒரு வன்முறையிலும் முதலில் சீரழிக்கப்படுவது பெண்ணும் பேருந்தும்தான்’ என்பார்கள். வன்முறைக் காலத்தில் மட்டுமல்ல. அமைதிக் காலத்திலும், பெண்கள் ஆகப் பெரிய வன்முறைக்கு ஆளாகி வருகிறார்கள்.

2017 அக்டோபரில்தான் முதன்முறையாக ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கியது. இந்த ஆண்டு அக்டோபரில் ஓராண்டை நிறைவு செய்வதற்குள், இந்தியாவில் ‘மீ டூ’ பூகம்பம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தருணத்தில், ‘மீ டூ’ பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன், எழுதிய ‘பிரேவ்’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு மட்டுமல்லாது, மொத்த மானுடத்துக்குமே பல படிப்பினைகளைத் தருவதாக அமைந்துள்ளது.

  
கடவுளின் பெயரில் களியாட்டம் 

பிறந்த வீடுகளில், விரும்பி வந்த துறைகளில், ‘உன் உயர்வுக்கு நான் பொறுப்பு’ என்று கூட நின்றவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது, பெண் முதல்முறையாக அவமதிக்கப்படுகிறாள். ‘உனக்கு நேர்ந்த துயரத்துக்கு நீயேதான் காரணம்’ என்று குற்றம்சாட்டும்போது, பெண் இரண்டாவது முறையாக அவமதிக்கப்படுகிறாள்.

ரோஸ் மெக்கோவனுக்கும் அதுதான் நேர்ந்தது. இத்தாலி நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், ‘சில்ட்ரன் ஆஃப் காட்’ எனும் அமைப்பு நடத்தும் விடுதியில் பிறந்தார் ரோஸ். அவருடன் பிறந்தவர்கள் 5 பேர். அவரது பெற்றோரும் அங்குதான் மதப் பிரசாரம் செய்து பணியாற்றி வந்தார்கள். சிறு வயது முதலே இறை நம்பிக்கையற்றவராக ரோஸ் வளர்ந்தார். அதனால், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் உடல் ரீதியான தண்டனைகளுக்கு ஆளானார்.

அங்கு அவரைப் போன்ற சிறுவர்களுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்தன. அதை எதிர்த்த சிலர், மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதனால், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அந்தத் துன்பம் நேரலாம் என்று அஞ்சிய ரோஸின் பெற்றோர், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்கா காட்டிய வறுமை 

அமெரிக்காவுக்கு முதன்முறையாக விமானத்தில் வந்தபோதுதான், உலகில் நிலைக் கண்ணாடி என்ற விஷயம் இருப்பது ரோஸுக்குத் தெரிய வந்தது. கண்ணாடியில் முதன்முறையாகத் தன் முகத்தைப் பார்த்தவருக்கு எந்த உணர்வும் தோன்றவில்லை. காரணம், அவருக்கு அப்போது ‘அழகு’ என்றால் என்ன என்பதே தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் அவர் பதின்பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

அமெரிக்கா என்பது பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அது பணம் படைத்தவர்களுக்குத்தான் அது பணக்கார நாடு. மற்றபடி, நிலையான வேலை இல்லாமல், முறையான வருமானம் இல்லாமல், ஒரு வேளை மட்டும் கிடைக்கக் கூடியதை உண்டுவிட்டு, நடைபாதைகளிலும் கல்லறைத் தோட்டங்களிலும் படுத்துக் கிடப்பவர்கள் நிறையப் பேர்.

அமெரிக்காவில், ரோஸின் தந்தை தொடங்கிய மதப் பிரசார அமைப்புக்குச் சரியான கூட்டம் இல்லை. அதனால் போதிய வருமானம் இல்லை. இதன் காரணமாக, வீட்டில் தினமும் சச்சரவுகள் ஏற்பட்டன. பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றார்கள். ரோஸும் அவரது உடன்பிறந்தவர்களும் தனித்துவிடப்பட்டார்கள். காலப் போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் போனார்கள். ரோஸ், போதைப் பொருளுக்கு அடிமையானார். மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட, அங்கிருந்து தப்பித்தார். இடுகாட்டிலும் திரையரங்கிலும் சொற்ப சம்பளத்துக்கு சில காலம் வேலை பார்த்தார்.

சினிமா தந்த சிக்கல்கள் 

திரையரங்கு ஒன்றில் ரோஸ் பணியாற்றிபோது, ‘ஹூ ஃபிரேம்ட் ரோஜர் ரேப்பிட்’ மற்றும் ‘வொர்க்கிங் கேர்ள்’ ஆகிய இரண்டு படங்கள் அவரை மிகவும் பாதித்தன. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆசை அவருக்குத் துளிர்விட்டது. போதாக்குறைக்கு, அவர் மிகவும் அழகாக இருந்தார். நீண்ட கூந்தலும் இருந்தது.

அப்போது ரோஸ், தன் தந்தையுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, படம் ஒன்றில் ‘எக்ஸ்ட்ரா’வாக வந்து செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் ரூபாய் கூலி என்பதால், ‘கிளாஸ் ஆஃப் 1999’ என்ற படத்தில் நடித்தார் ரோஸ். அதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் படம். அதற்குப் பிறகு, ‘டூம் ஜெனரேஷன்’, ‘ஸ்கிரீம்’ என அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் வந்தன.

‘ஸ்கிரீம்’ படத்தைத் தயாரித்த ‘மிராமாக்ஸ்’ நிறுவனம்தான் 1997-ல் ‘ஃபேண்டம்ஸ்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், மிராமாஸ் உரிமையாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ரோஸ் ஆளாக்கப்பட்டார். அதைப் பற்றி, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர், நிர்வாகிகள் எனப் பலரிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘ஹாலிவுட்டில் அப்படித்தான் இருக்கும். பெண் என்றால் இவை அனைத்தையும் சந்தித்தே தீர வேண்டும்’ என்று ரோஸுக்குச் சொல்லப்பட்டது. அடுத்த 20 வருடங்களுக்கு அந்தத் துயரத்தைத் தன் மனதில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கு இடையில், சில காதல்கள், சில திருமணங்கள், சில பிரிவுகளும் ரோஸ் வாழ்வில் அரங்கேறின. அந்தப் பிரிவுகள், தோல்விகள், அவை தந்த வேதனைகள் அனைத்துக்கும் ‘நீதான் ரோஸ் காரணம்’ என்று சொல்லப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  
தொடங்கியது ‘மீ டூ’ பூகம்பம்!  

இந்நிலையில் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பலர், ட்ரம்ப் தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். அதையொட்டி, தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளை ரோஸ், ட்விட்டரில் பதிய, ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் புலனாய்வு மேற்கொண்டது. அப்படித்தான் வெளியாகின ஹார்வி வெய்ன்ஸ்டீனின் லீலைகள். ரோஸ் கொடுத்த துணிச்சலால், வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இதர பெண்களும் வாக்குமூலம் கொடுக்க முன் வந்தார்கள். தொடங்கியது ‘மீ டூ!’. இதனால் ‘2017-ம் ஆண்டின் நபர்’ என்று ‘டைம்’ இதழால் கவுரவிக்கப்பட்டார். 

தான் சந்தித்த கசப்புகளை ‘பிரேவ்’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கும் ரோஸ், தன் புத்தகத்தில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை ‘மான்ஸ்டர்’ (பூதம்) என்றே குறிப்பிடுகிறார். எனில், அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்?

பெண்ணுக்கு, கூந்தல் என்பது அழகின் ஓர் அங்கம். ‘மீ டூ’ பிரசாரம் தொடங்கிய பிறகு, தனது கூந்தலை வெட்டி, மொட்டை அடித்துக்கொண்டார் ரோஸ். அதற்கு அவர் சொன்ன காரணம்: “நீண்ட கூந்தல் இருந்தால், நீ செக்ஸியாகத் தெரிவாய் என்றும், செக்ஸியாகத் தெரிந்தால்தான் எனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எண்ணம் என்னுள் இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறவே நான் மொட்டையடித்துக்கொண்டேன். என் சுதந்திரத்தை உணர்ந்தேன்!”

‘பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உங்கள் மகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்’ என்று சொல்லும் ரோஸ், பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை இது: ‘எப்போதும் துணிச்சலுடன் இருங்கள். நீங்கள் விரும்பாத விஷயங்கள், உங்கள் மீது திணிக்கப்பட்டால் ‘முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள்!’

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று (சில மாறுதல்களுடன்),  (ரோஸ் படம்) time.com

Monday, October 1, 2018

சமூகத்தை விசாரிக்கும் கொலைகள்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 18 டிசம்பர் 2016

வாழ்க்கையின் மீது நம்பிக்கையற்றும், வாழ்க்கை தந்த கசப்புகளாலும் ஒருவர் அடைந்த வெறுமையால் இன்னொருவரைக் கொல்ல முடியுமா?

முடியும் என்கிறது ‘இன் கோல்ட் ப்ளட்’ எனும் ஆங்கில நாவல். 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் ஹோல்காம்ப் எனும் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அந்தக் கொலைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ட்ரூமன் கபோட் எழுதியதுதான் இந்த நாவல்.


நாவலாக வருவதற்கு முன், இது ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகையில் 1965-ம் ஆண்டு நான்கு பாகங்கள் கொண்ட தொடராக வெளியானது. பின்னர் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தால் 1966-ம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.

நாவலின் சிறப்பம்சம் என்னவென்றால், அந்தக் கொலைகளைச் செய்த இளைஞர்கள் ரிச்சர்ட் டிக் ஹிக்காக், பெர்ரி ஸ்மித் ஆகியோரின் வாழ்க்கையை மிக ஆழமாக கபோட் ஆராய்ந்திருப்பதுதான். இரண்டு பேருமே வேறு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினை ஒன்றுதான். தத்தமது அடையாளத்தை இழப்பதுதான் அது!

தங்கள் குடும்பத்தில் தங்களுக்கு நேர்ந்த கசப்புகளால் காயமடைந்தவர்கள் அவர்கள். வீட்டை விட்டு வெளியேறியவர்கள். இருவருமே தங்களின் திறன்களை நிரூபிக்கத் தேவையான வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்கள். பெண்களால் போஷிக்கப்பட்டவர்கள். குற்றம் புரிந்தவர்கள். சிறை சென்றவர்கள்.

இப்படியானவர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொல்வது ஆச்சர்யப்படத்தக்க விஷய மல்ல. ‘ஆளுமைச் சிதைவு’ உள்ள யாரும் ஒரு கட்டத்தில் அந்த இளைஞர்களின் நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். அவர்களைச் சிறையில் வைத்துத் தண்டிப்பதைவிட, மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், நாம் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் அதற்கு ஏற்றவை அல்ல, என்கிறார் கபோட். இப்படிச் சொல்வதன் வாயிலாக, சமூகத்தையும் அவர் இந்தக் குற்றத்தின் பின்னணியில் கொண்டுவருகிறார்.


சட்டங்கள் பற்றிப் பேசுகிற இந்த நாவல், மரண தண்டனை குறித்தும் பேசுகிறது. நாவலின் ஓரிடத்தில் ரிச்சர்ட் டிக் ஹிக்காக் இப்படிச் சொல்வான்: “மரண தண்டனை என்பது ஒரு பழிவாங்கல்தான். நான் தூக்கிலிடப்படாத வரை, அந்தப் பழிவாங்கல் தேவை என்றுதான் நானும் சொல்வேன்”.  இன்னொரு பக்கம், பெர்ரி ஸ்மித் இப்படிச் சொல்வான்: “நான் செய்த குற்றத்துக்காக மன்னிப்புக் கேட்பது முறையாகாது. அது அர்த்தமற்றது. ஆனாலும் நான் மன்னிப்புக் கேட்கிறேன்”.

மரண தண்டனை குறித்து அதிகளவில் உரையாடல்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், நாம் மேற்கண்ட இரண்டு பேரின் நிலைகளிலிருந்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ், (கபோட் படம்:  nypost.com)

Saturday, September 22, 2018

புலிகளுக்கு இடையே ஒரு புனிதி

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 16 செப்டம்பர் 2018 

மனித வாழ்க்கையில் மிகப் பெரிய குற்றம் எது? உரிமைகள் மறுக்கப்படுவதுதான். உயிர் வாழ்வதற்கு, பிடித்த தெய்வங்களை வணங்குவதற்கு, தனக்கான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு, மனதில் நினைப்பதைப் பேசுவதற்கு, எண்ணங்களை எழுத்தாக்குவதற்கு என மனித உரிமைகள் பல வண்ணங்களைக் கொண்டவை. இவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையானவை, எந்த உரிமைகள் அவசியமில்லாதவை என்ற ஆய்வுகள் எல்லாம் தேவையற்றவை. மனிதர்கள் சுதந்திரமாக வாழ, எவையெல்லாம் அத்தியாவசியமோ அவை அனைத்துமே அடிப்படை உரிமைகள்தான்!

இந்த உரிமைகள் மறுக்கப்படும்போது, அதற்கான எதிர்ப்புகளும் எழவே செய்யும். பெரும்பாலும், அதிகார பீடங்களால்தான் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மீறப்படவும் செய்கின்றன. ஒரு ஜனநாயக அமைப்பில் மாற்றுக் கருத்துகளுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அங்கு எதிர்ப்பு இருந்தே தீரும். மாற்றுக் கருத்துகளைச் சொல்ல அனுமதிக்கப்படாத நிலையே ‘பாசிஸ’ நிலை. உலக வரலாற்றில், இந்த ‘பாசிஸம்’ அரசுகளிடம் மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்கிற போராளிக் குழுக்களிடமும் தென்பட்டிருக்கிறது.

இலங்கையில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வந்த போரில், மனித உரிமைகள் கிஞ்சித்தும் பின்பற்றப்படவில்லை. போராளிக் குழுக்களில், மாற்றுக் கருத்துகளை முன் வைத்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள். அப்படிக் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும் மிகச் சிலரே, தொடர்ந்து  ‘பாசிஸ’ தலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ராஜனி திராணகம. சிங்கள ராணுவம், இந்திய அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராட்டக் குழுக்களின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து உலகத்துக்குச் சொல்லி வந்தவர், 1989-ம் ஆண்டு கொல்லப்பட்டார். வரும் செப்டம்பர் 21-ம் தேதி அவரது 29-வது நினைவு நாள்!

  
மருத்துவம் கற்ற போராளி 

1954-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார் ராஜனி ராஜசிங்கம். இவர்களுடையது தமிழ்க் கிறித்துவக் குடும்பம். அதனால் ‘சக உயிர்கள் மீது அன்பு கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் இவருக்கும் இவருடன் பிறந்த சகோதரிகளுக்கும் இளமையிலிருந்தே இருந்தது. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்தவர், தனது மருத்துவக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்தார். மாணவப் பருவத்திலேயே அவருக்கு அரசியல் ஈடுபாடு இருந்தது. நிறைய கூட்டங்களுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார்.

அப்படி ஒரு மாணவர் அரசியல் கூட்டத்தில்தான் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தயாபாலா திராணகமவைச் சந்தித்தார் ராஜனி. அவர் ஒரு சிங்கள பவுத்தர். அவரது அரசியல் ஈடுபாடுகளால் ஈர்க்கப்பட்ட ராஜனி, இனம், மதம், மொழி கடந்து 1977-ல் தயாபாலாவை மணம் முடித்து ராஜனி திராணகம ஆனார். அவர்களுக்கு நர்மதா, சரிகா என இரண்டு மகள்கள் உண்டு.

ராஜனியின் அக்கா நிர்மலா, அமெரிக்காவுக்குப் படிக்கப் போனார். அவர் போன நேரம், வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தது. வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்து, மாணவர்கள் போராடினர். அது நிர்மலாவுக்கு அரசியல் ரீதியான விழிப்புணர்வைத் தந்தது. இடதுசாரி அரசியலைத் தேர்வு செய்தார் அவர். படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அவர், விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்.

ஒருமுறை, காயமடைந்த ‘இயக்கத்தினர்’ ஒருவருக்கு உதவ நிர்மலாவை நாடினார். நிர்மலா, ராஜனியை நாடினார். ராஜனி அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தார். அப்படித்தான் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் வந்தார்.

ஆவணப்படமான போராட்ட வாழ்க்கை 

மருத்துவப் படிப்பை முடித்தவுடன், சில காலம் யாழ்ப்பாண மருத்துவமனை ஒன்றில் பணியாற்றினார் ராஜனி. பின்னர் 1983-ம் ஆண்டு காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற்று, உடற்கூறியல் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க இங்கிலாந்தில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். பிறகு லிவர்பூல் மருத்துவக் கல்லூரியில் மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கை நரம்புகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

  
இந்த நேரத்தில்தான், நிர்மலா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்தில் இருந்துகொண்டு, தனது சகோதரியின் விடுதலைக்காகக் குரல் எழுப்பி வந்த ராஜனி, லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சிலருடன் இணைந்து, இலங்கையில் சிங்கள ராணுவம் மேற்கொண்டு வந்த மனித உரிமை மீறல்கள் குறித்து உலகின் பல்வேறு மனித உரிமை அமைப்புகளிடம் எடுத்துரைத்து வந்தார். பிறகு, நிர்மலா விடுதலையானார்.

80-களின் மத்தியில் தாயகம் திரும்பிய ராஜனி, யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அந்தச் சமயத்தில்தான் இந்திய அமைதிப் படைகள் வந்தன. சிங்கள ராணுவம், அமைதிப் படைகள் ஆகியவை அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து வந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். பின்னர் அவற்றை ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமாகத் தொகுத்துக் கொண்டிருந்தார். அவர்களது மறுவாழ்வுக்காக ‘பூரணி மகளிர் மையம்’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார்.

அதே நேரம், அவரும் அவரது சக ஆசிரியர்களும் இணைந்து ‘மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். சிங்கள ராணுவம், அமைதிப் படைகள், விடுதலைப் புலிகள் ஆகியோரின் மனித உரிமை மீறல்களை ‘தி புரோக்கன் பாமைரா’ (தமிழில், ‘முறிந்த பனை’ என்று வெளியானது) என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வந்தனர்.

  
ராஜனி தனியாகத் தொகுத்த ‘நோ மோர் டியர்ஸ் சிஸ்டர்’ எனும் ஆவணமும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றது. 2005-ல் அந்த ஆவணத்தின் பெயரிலேயே ராஜனி திராணகம குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியானது. அந்தப் படத்தில் அவரது மகள் சரிகாவே ராஜனியாக நடித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் பிரபல எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாஜ்ஜி.

நாவலில் நிலைபெற்ற ராஜனி 

ராஜனியை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் 2014-ல் ‘சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி’ எனும் நாவலை டி.டி.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அது தற்போது,  ‘சுகந்தி அலைஸ் ஆண்டாள் தேவநாயகி’ எனும் தலைப்பில், பிரியா நாயர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

போருக்குப் பிந்தைய இலங்கையில் நடைபெறுவதாக அமைந்திருக்கும் இந்த நாவலில், ராஜனியை ஆண்டாள் தெய்வநாயகி எனும் கற்பனையான பெண் கடவுளின் வழித் தோன்றலாகச் சித்தரித்து, அந்தக் கடவுளைப் பற்றியக் கதையைச் சொல்வதன் மூலமாக, இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரின் பாதிப்பு சொல்லப்பட்டிருக்கிறது.

 
‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்’ என்று சொன்ன ராஜனியின் வார்த்தைகள் பலித்தன. விடுதலைப் புலிகளால் அவர் கொல்லப்பட்டார். அதை மறுப்பவர்களும் இருக்கிறார்கள்.

‘முறிந்த பனை’ புத்தகத்தின் ஆரம்பத்தில் ‘ராஜனியை யார் கொன்றார்கள் என்பது முக்கியமல்ல. அவர் எதற்காகக் கொல்லப்பட்டார் என்ற கேள்வியே முக்கியம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘பாசிஸம்’தான் அந்தக் கேள்விக்கான பதில் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?

நன்றி: இந்து தமிழ் - பெண் இன்று ‍(சற்றே மாறுதல்களுடன்)

Thursday, September 6, 2018

பேனாவிடம் தோற்றுப் போன ‘பாசிஸ’ தோட்டா..!

ந.வினோத் குமார்

‘குற்றங்களை நீக்குபவர்’ என்ற பொருளில் அமைந்ததுதான் ‘ஆசிரியர்’ எனும் சொல். மாணவர்களிடத்தில் இருக்கும் குற்றம், குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தும் ஆசிரியர் எப்படி மதிக்கத்தக்கவரோ, அதேபோல, சமூகத்தில் நடக்கும் குற்றங்களைத் தன் பேனாவின் மூலம் நீக்க முற்படுகிற பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களே! 

அப்படியான ஆசிரியர்களில் ஒருவர்தான் கெளரி லங்கேஷ். அதற்கான பரிசு, அவர் ஆசிரியர் தினத்தில் கொல்லப்பட்டது! 

கன்னட மொழி பத்திரிகை உலகத்தின் முகங்களில் ஒன்றாக ‘லங்கேஷ் பத்திரிக்கே’வும், 2005-க்குப் பின்னர் ‘கெளரி லங்கேஷ் பத்திரிக்கே’வும் விளங்கின என்றால் அது மிகையில்லை. என்ன… அந்த முகம், ஒப்பனைகளற்ற முகம். அரசியலை சுயலாபத்துக்காக ஆராதிக்காத பேனாக்களில் ஒன்று, கெளரியினுடையது! 

நாட்டை, பண்பாட்டை காவிமயப்படுத்துவதற்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தவர் கெளரி. அந்தக் கண்டனங்களை எதிர்கொள்ள முடியாத இந்து பாசிஸ வெறிக்கு 2017-ல், இதே தினத்தில் அவர் பலியானார். ஓர் ஆண்டாகியும், அன்றைய தின இரவில் நடந்த கொலைக்கு, இன்னும் விடியல் வரவில்லை. 

கெளரி லங்கேஷின் மரணத்துக்கு முன்பு வரை, அவரைப் பற்றியோ, அவரது செயல்பாடுகள் பற்றியோ கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, பொது மக்களிடையே பரவலாக அறியப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்றே கருதுகிறேன். ஆனால் அவர் கொல்லப்பட்ட, அடுத்த இரண்டு மாதங்களில் அவரைப் பற்றிப் பலரும் தெரிந்துகொண்டார்கள். அதற்கு முக்கியக் காரணமாக விளங்கியது, ‘தி வே ஐ ஸீ இட்’ எனும் புத்தகம். 

கெளரி லங்கேஷ் எழுதிய கட்டுரைகள், கெளரி லங்கேஷ் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர், கெளரியின் நண்பரும் பேராசிரியருமான சந்தன் கவுடா. ‘நவயானா’ பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் 2017 நவம்பர் மாதத்தில் வெளியானது. 

  
என்னதான் கெளரி, இதழியல் படிப்பைப் படித்திருந்தாலும், அவர் எடுத்த உடனே, அவரது தந்தை ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிக்கே’வில் சேர்ந்துவிடவில்லை. பெரிய காரணம் எதுவும் இல்லை, அவருக்கு கன்னடம் அவ்வளவாகத் தெரியாது, அதனால்! எனவே, ஆங்கில இதழியலில் கவனம் செலுத்தினார் கெளரி. அவரது ஆரம்பகால ஆங்கில இதழியல் கட்டுரைகள் சில, இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. 

புட்டபர்தி சாய் பாபாவின் தில்லுமுல்லுகள், 80-களில் பெங்களூருவை மிரள வைத்த சைக்கோ கொலைகாரன் ‘நாகராஜா’ (அவனைச் சிறையில் வைத்துப் பேட்டி எடுத்திருக்கிறார் கெளரி), ராஜீவ் கொலையில் ஈடுபட்ட சிவராசனை ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ பெங்களூருவில் வைத்துச் சுற்றி வளைத்தபோது, அவர்களுடன் கூட இருந்து, வழங்கிய நேரடி ரிப்போர்ட் என கெளரியின் ‘ரிப்போர்ட்டேஜ்’ அனைத்தும், ஒரு ‘க்ரைம் திரில்லர்’ நாவலைப் போன்று அவ்வளவு விறுவிறுப்புடனும், தகவல் செறிவுடனும் எழுதப்பட்டிருக்கின்றன. 

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு, 2000-ல் ‘லங்கேஷ் பத்திரிக்கே’வின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் கெளரி. அப்போது, ‘இவருக்கு கன்னடம் தெரியாதே.. எப்படிப் பத்திரிகையை நடத்துவார்?’ என்று பலரும் கேலி பேசினர். ஆனால், தனக்கு கன்னடம் தெரியாது என்பதை மறைக்காததுடன், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியால் கன்னடத்தை நன்கு கற்கவும் செய்தார் அவர். அந்த விடாமுயற்சியும் பயிற்சியும்தான், தாய்மொழியைக் கற்காதவர்களை ‘வேர்களற்ற ஆன்மாக்கள்’ என்று கெளரியை எழுதச் செய்தன. 

இந்தப் புத்தகத்தில் அவர் கன்னடத்தில் எழுதிய கட்டுரைகளில் சில, ஆங்கிலத்தில் வெவ்வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்த அதே தெள்ளிய எழுத்து நடை, மொழிபெயர்ப்புக் கட்டுரைகளிலும் காண முடிகிறது. வேறு வேறு நபர்கள் மொழிபெயர்த்திருந்தாலும், அந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தட்டுத் தடங்கலைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு ‘ஸ்மூத்’ ஆக இருக்கிறது ‘ரைட்டிங் ஃப்லோ’. ஆங்கில, கன்னட மொழிகளின் மீது கெளரிக்கு இருந்த வளம் காரணமாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. இந்த வெற்றிக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 

ஆங்கில மொழி ‘அதிகாரத்தின் கருவி’ என்ற புரிதலை கெளரி கொண்டிருந்த காரணத்தால்தான், ‘மோடியின் ஆங்கிலம் மோசமாக இருக்கிறது’ என்று சிலர் கேலி செய்தபோது, ‘கருத்தியல் ரீதியான எதிரியை, அவரது ஆங்கில மொழித் திறன் குறைபாட்டைப் பயன்படுத்தி கேலி செய்யக் கூடாது’ என்றார். 

சம்பளத்துக்காக அல்லாமல், சமூகத்துக்காகப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் இன்று ஒரு குழப்பம் உண்டு. தான் ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’டாகவும் இருக்க வேண்டுமா அல்லது வெறுமனே பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிட வேண்டுமா என்பதுதான் அது. இந்தக் குழப்பத்துக்கு கெளரி தரும் பதில் இது: 

“நமது ‘ஜர்னலிஸ’த்துக்கு இதயத்தையும், ஒரு பார்வையையும் ‘ஆக்டிவிஸம்’ தருகிறது என்றால், நமது ஆக்டிவிஸத்துக்கு ஒரு முழுமையான புரிதலையும் கூர்ந்து அறியும் திறனையும் ஜர்னலிஸம் தருகிறது. எனவே, இன்றைய காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் ‘மக்கள் நலன் சார்ந்து’ இயங்குபவராக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் தன்னளவில் ஒரு ஆக்டிவிஸ்ட்டாக இல்லாமல் அது முடியாது!” 

சமீபத்தில், கெளரியைப் போலவே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி, உயிர் தப்பித்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், கெளரி குறித்து எழுதிய கட்டுரை இந்தப் புத்தகத்தில் உண்டு. அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் இப்படி இருக்கின்றன:

“கெளரி எப்படி இறந்தார் என்பதை நாம் மறவாமல் இருப்போம். போலவே, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!”

கெளரி நம் நினைவில் வாழ்வார்… ‘பாசிஸ’ தோட்டாவைச் சுமந்துகொண்டு!

Monday, September 3, 2018

கடல் பிரார்த்தனை!

ந.வினோத் குமார்
 
2015-ம் ஆண்டு, செப்டம்பர் 2-ம் தேதி. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த தருணம். அங்கிருந்து பலர், அகதிகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தனர். அப்படிப் பயணப்பட்டவர்களில் சிலர், ஐரோப்பிய நாடுகளில் அரவணைப்பைத் தேடிச் சென்றனர்.

அந்தப் பயணத்தில், பெரும்பாலான மக்கள் மத்திய தரைக்கடலில், ரப்பர் படகுகளில், எந்தப் பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல் சென்று, புயலடித்தபோது கவிழ்ந்த படகிலிருந்து விழுந்து, நீரில் மூழ்கி இறந்தனர். அப்படி இறந்தவர்கள் சிலரின் சடலங்கள் துருக்கியின் கரையை அடைந்தன. அந்தச் சடலங்களில் ஒன்றுஆலன் குர்திஎனும் பெயரைத் தாங்கி இருந்தது.

சிறுகதை அஞ்சலி

மெத்தையில், குப்புறக் கவிழ்ந்து ஆழ்ந்து உறங்குவது போல, மூன்று வயது ஆலன் குர்தியின் உடல் கரையில் கிடந்தது. பத்திரமாய்க் கரையில் சேர்த்துவிட்ட திருப்தியில் அலைகள் அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியான அவனின் படத்தைக் கண்டு, பலர் கண்ணீர் சிந்தினர். கடலில் நிராதரவாக விடப்பட்ட குர்தி, இன்றைய அகதிகள் சந்திக்கும் இன்னல்களுக்குச் சாட்சியாக வரலாற்றில் நின்றுவிட்டான்!

அவன் மறைந்து, இந்த நாளுடன், மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எனினும், அகதிகளின் நிலையில் எந்தப் பெரிய மாற்றமும் வந்துவிடவில்லை. இந்நிலையில், ஆலன் குர்தியை மீண்டும் நினைவுகொள்வதன் மூலம், அகதிகளின் நிலையை உலகுக்கு எடுத்துச் செல்ல முடியுமென்று நம்பியிருக்கிறார், காலித் ஹுசைனி. அவர் ஒரு மருத்துவர். தி கைட் ரன்னர்எனும் அற்புதமான நாவலை நாவலாசிரியர்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி, சிறுகதை. ஆலன் குர்தியின் நினைவாக, அவர்ஸீ பிரேயர்எனும் சிறுகதையை எழுதினார். கதையின் ஒவ்வொரு வரியும் கவித்துவச் சோகத்துடன் நம்மை எதிர்கொள்கின்றன. 

சிரியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு அகதியாகச் செல்ல, கப்பலுக்காகக் காத்திருக்கும் பொழுதில், சிரியாவிலிருந்து தப்பித்த தந்தை, தன் மடியில் படுத்திருக்கும் மகனுக்குச் சொல்வதுபோன்ற, கடித வடிவத்தில் அந்தக் கதையை எழுதியிருந்தார். இது ஒரு வகையில், தனிமையில் பேசி நடிக்கும்மோனோலாக்வகைமையைச் சேர்ந்த ஒரு படைப்பு. அந்தச் சிறுகதை தற்போது புத்தகமாகியிருக்கிறது.  

 
டான் வில்லியம்ஸின் அற்புதமான நீர் வண்ண ஓவியங்களுடன் ப்ளூம்ஸ்பரி பதிப்பக வெளியீடாகச் சமீபத்தில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம். விற்பனையாகும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து கிடைக்கக்கூடிய வருவாயில், ஒரு பவுண்டை (இந்திய மதிப்பில் சுமார் 92 ரூபாய்) அகதிகளின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்துக்கு வழங்கப்பட உள்ளதாகப் புத்தகத்தின் பின் அட்டையில் கூறப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த பொக்கிஷம்

இந்தக் கதையை, சுமார் 7 நிமிடங்கள் ஓடக்கூடிய மெய்நிகர் படமாக உருவாக்கி அதை 2017-ல் யூடியூப்பில் தவழ விட்டிருந்தார் ஹுசைனி. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கும் அவர் எழுதியஸீ பிரேயர்கதையின் இறுதி வரிகள் இப்படியிருக்கின்றன:

இந்த இரவில் நான் நினைத்துப் பார்ப்பதெல்லாம், கடலின் ஆழத்தையும், பரப்பளவையும், அலட்சியத்தையும்தான். இதனிடமிருந்து உன்னைக் காப்பதற்குத் திராணியற்றவனாக இருக்கிறேன். என்னால் செய்யக் கூடியதெல்லாம் பிரார்த்திப்பது மட்டும்தான். கரை தென்படுவதற்கு முன், இந்த நீரில் நாம் மூழ்கிவிடாமல் இருக்க, கடவுள் இந்தக் கப்பலைச் செலுத்துவாராக.

 
ஏனென்றால், நீ விலையுயர்ந்த பொக்கிஷம், மர்வான். காணக் கிடைக்காத மிக விலையுயர்ந்த பொக்கிஷம். அது இந்தக் கடலுக்குத் தெரியும். என் பிரார்த்தனை இந்தக் கடலுக்குத் தெரியும்”. 

நன்றி (ஆலன் குர்தி படம்): aljazeera.com