Thursday, September 30, 2021

பிஹார் முதல் திஹார் வரை!

 .வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 09 டிசம்பர், 2016 

தேசங்களின் தலைவிதி வகுப்பறைகளில் எழுதப்படுகின்றனஎன்று சொல்லப்படுவதுண்டு. அது மற்ற நாடுகளுக்கு எப்படியோ... இந்தியாவுக்கு அது நூறு சதவீத உண்மை

இந்தியாவில் மாணவர்களின் போராட்டம் என்பது 1905-ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்போதுதான் ஆங்கிலேயே ஆட்சியாளர் கர்சன் பிரபு, வங்கப் பிரிவினையைக் கொண்டுவந்தார். அதை எதிர்த்து அன்றைய மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பின்னால் திரண்டனர்

அதற்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாணவர்களில் ஒரு பிரிவினர் பால கங்காதர திலகரின் கீழும், இன்னொரு பிரிவினர் காந்தியின் கீழும் திரண்டனர். ரவ்லட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் போன்றவற்றுக்கு எதிராக மாணவ சக்தி ஒருங்கிணைந்தது. பின்னர் 1920-ம் ஆண்டு லஜபதி ராயின் தலைமையின் கீழ், நாக்பூரில் முதன்முறையாக அனைத்திந்திய மாணவர் மாநாடு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் அவர்கள் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றனர். இந்த மாநாடு தந்த நம்பிக்கையின் காரணமாக 1936-ம் ஆண்டு அனைத்திந்திய மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. ‘வெள்ளையனே வெளியேறுபோராட்டத்தின்போது இந்தப் பேரவையின் பங்கு அளப்பரியது

கேரளத்தின் முன்னாள் முதல்வர் பி.கே.வாசுதேவன் நாயர், பஞ்சாப் மாநில அரசின் முன்னாள் அமைச்சராக இருந்த சத்யபால் தங், மலையாளக் கவிஞர் .என்.வி.குரூப், மலையாள எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த மாணவர் பேரவையின் மூலமாக அடையாளம் காணப்பட்டவர்கள்தான்

இப்படியான பாரம்பரியத்திலிருந்துதான் வருகிறார் கன்னையா குமார். இந்த ஆண்டு இந்தப் பெயர் ஏற்படுத்திய சலசலப்புகள் ஏராளம். பல்கலைக்கழகத்துக்கு மாணவர் தலைவன். ஆட்சியாளர்களுக்கு உறுத்தல். ஊடகங்களுக்குத் தலைப்புச் செய்தி. மாணவர்களுக்குநம்மில் ஒருவன்!’. 

முப்பது வயதைக்கூட எட்டாத இந்த இளைஞர் செய்த சாதனை குறிப்பிடத்தக்க ஒன்று. அதற்காக அவர் சந்தித்த போராட்டங்களும் எதிர்கொண்ட வசவுகளும் ஏராளம். அந்தப் பயணத்தை அவரே தன் மொழியில்பிஹார் முதல் திஹார் வரை (From Bihar To Tihar)’ என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார். இந்தியில் இவர் எழுதிய இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் அதே தலைப்பில் வந்தனா சிங்கின் மொழிபெயர்ப்பில் ஜக்கர்நாட் பதிப்பகத்தின் வெளியீடாகச் சமீபத்தில் வெளியாகியுள்ளது

சுமார் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் பிஹார் மாநிலத்தின் பிஹாட் எனும் கிராமத்தில் வறுமைக் குடும்பம் ஒன்றில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, ..எஸ். தேர்வு எழுத கனவு கண்டு, அது நிராசையில் முடிந்ததால் பட்டமேற்படிப்பு படித்து, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, மாணவர் தேர்தலில் வென்று, உயர் கல்வித் துறையில் நடக்கும் ஊழல்கள், பாகுபாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் தேசத் துரோகி குற்றம் சுமத்தப்பட்டு, திஹார் சிறையில் தனிமைச் சிறையில் வாடி, இன்று இந்திய மாணவர்களின்ஐகான்ஆக உயர்ந்திருப்பது வரை கன்னையா குமார் கடந்து வந்த பாதையை இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்துகொள்ளலாம்

ஆனால், நாம் இதுவரை தெரிந்துகொள்ளாத ஒரு விஷயத்தை இந்தப் புத்தகத்தில் தன் அனுபவத்தினூடாக நமக்குச் சொல்கிறார் கன்னையா. ‘வறுமைதான் ஒருவரின் அரசியல் சார்பு நிலைக்குக் காரணமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த வறுமை அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த சிலரால்தான் உருவாக்கப்படுகிறதுஎன்பதுதான் அது

இந்தப் பின்னணியிலிருந்துதான் கன்னையா குமாரின் மாணவ அரசியல் நடவடிக்கைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் பிஹார் மாநிலத்தின் அரசியலைப் பற்றி நமக்குச் சிறிது அறிமுகம் வேண்டும்.

 

வளர்ச்சியின் எல்லா அளவுகோலின்படியும், நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலமாக இருக்கிறது பிஹார். மக்கள் தொகை மிகுந்த மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் இதற்குத்தான். ஆரம்பத்தில் இங்கு காங்கிரஸ் கட்சியும், பிறகு சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியும் செல்வாக்கு செலுத்தின. எமர்ஜென்ஸி காலத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் தன்னுடைய இயக்கத்தை அமைத்த இந்த மாநிலத்தில், 90-களுக்குப் பிறகு இங்கு பாரதிய ஜனதா கட்சி கொஞ்சம் கொஞ்சமாகக் கால்பதிக்கத் தொடங்கியது

கன்னையா குமார் பிறந்த பிஹாட் எனும் கிராமம் பேகூசராய் எனும் மாவட்டத்தில் உள்ளது. 80 மற்றும் 90-களில் இந்தப் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கியது. எனினும் காலப்போக்கில் அது தன் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. இக்கட்சியின் செல்வாக்கு உச்சத்திலிருந்து மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கிற காலத்தைச் சேர்ந்தவராக இருந்த கன்னையா குமாருக்கு, அவரின் அரசியல் சிந்தனைகளைப் பட்டை தீட்டிக் கொள்ளும் இடமாக இருந்தது இக்கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பேரவை. கட்சி அரசியலுக்கான பிரவேசத்திற்கு இதுபோன்ற மாணவ, இளைஞர் பேரவை அமைப்புகள் காலம் காலமாக ஒரு கடவுச்சீட்டாகப் பயன்பட்டு வருகின்றன

ஆனால் எந்தக் கட்சிகள் இங்கு ஆட்சிக்கு வந்தபோதும், வறுமைக் காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. நவதாராளப் பொருளாதாரக் கொள்கை அறிமுகத்துக்குப் பிறகு, பிற மாநிலத்து இளைஞர்களைப் போலவே பிஹார் இளைஞர்களும் நல்ல கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குப் போதி அளவில் ஏற்படுத்தித் தரப்படவில்லை. இதனால் அந்த மாநிலத்தின் இளைஞர்கள் பலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டனர். சிலர் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர, அங்கிருந்தும் சிவசேனா கட்சியினரால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்

யாரோ சிலர் செய்யும் சமூக விரோதச் செயல்களால் அந்த மாநிலத்தின் இதர இளைஞர்கள் மீதும் குற்றத்தின் நிழல் படர்கிறது. எனவே, அவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றால், ‘ஏய் பிஹாரிஎன்று ஏளனமாக அடையாளம் காணப்படுபவர்களாக இருக்கின்றனர்

இப்படி ஒரு சூழலில் ஏழை பிஹாரி மாணவர் ஒருவர் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இதர மாணவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு உறுத்தல் ஏற்படத்தானே செய்யும்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மாணவர் தேர்தலின்போது இவர் ஏற்படுத்தியஇடது முற்போக்கு முன்னணிஎனும் மாணவர் பிரிவின் வாசகம்ஜெய் பீம், லால் சலாம்!’ என்பது. சாதியில்லா சமத்துவச் சமூகத்தை உருவாக்க இந்த மாணவர் பிரிவு முயற்சிக்கும் என்ற காரணத்தால் இந்த வாசகத்தைத் தேர்வு செய்ததாகச் சொல்லும் கன்னையா குமார் தன் புத்தகத்தின் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: “இந்தச் சமூகத்தில் ஏழையாக இருப்பது குற்றவாளியாக இருப்பதற்குச் சமம்!” 

இதிலுள்ள வலியை நீங்கள் உணர்வீர்கள் என்றால், நீங்கள் கன்னையாவின் பக்கம்

நன்றி: இந்து தமிழ் திசை (இளமை புதுமை)