Wednesday, June 18, 2014

பேட்டில் ஹிம் ஆஃப் தி டைகர் மதர்: ஆமி சுவா (Battle Hymn of the Tiger Mother - Amy Chua)



.வினோத் குமார்

குழந்தைகள் குறித்து கலீல் ஜிப்ரான் கூறும்போது, 'உங்கள் குழந்தைகள் என்பவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள். உங்களில் இருந்து வரவில்லை' என்பார். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு செய்தியுடன் வருகிறது. குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை அவற்றின் போக்கில் விடுவது குழந்தை வளர்ப்பியலில் முக்கியமான ஒன்று. குழந்தைகளே ஒவ்வொன்றையும் தொட்டுத் தடவி, பார்த்து, நுகர்ந்து, சுவைத்து, உணர்ந்து பழகிக் கொள்ளும் திறன் பெற்றவை. அவ்வாறு நடந்துகொள்வது குழந்தைகளுக்கு இயல்பான வளர்ச்சியை, அறிவை தன்னைச் சுற்றியுள்ள சூழலைப் புரிந்துகொள்ளும் திறனை வழங்குகிறது.

குழந்தைகள் இயல்பிலேயே ஒருவித மேதமையுடன் இருக்கின்றன. கல்வி புகட்டுவதன் மூலம் அந்த மேதமையை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருகிறோம். அதனிடமிருக்கும் திறமைகளை ஒருமுகப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட இலக்கில் பயனிக்க வைப்பதற்குத்தான் ஏட்டுக்கல்வி என்பது அத்தியாவசியமாகிறது.

ஈரநிலங்களைப் போன்றவை குழந்தைகள். எதை விதைக்கிறோமோ அதுதான் வளரும். விதைக்கப்படுகிற ஒரு விதை, தன் போக்கில் வளரும்போதுதான் அது மரமாகி, கனிந்து, நிழல் தந்து உதிர்கிறது. அதற்கு நாம் நீர் வார்க்கலாம். ஆநிறைகள் அவற்றை மேய்ந்துவிடாமல் அதைச் சுற்றி வேலி போடலாம். அதன் பழங்களை ருசிக்கலாம். நிழலில் இளைப்பாறலாம். ஆனால்... இந்த கிளை இப்படித்தான் வளர வேண்டும், இந்த இலை இந்த அளவு நீளத்தில் இருக்க வேண்டும், இதன் பூக்கள் இந்த வண்ணத்தில் இருக்க வேண்டும் என்று நாம் கட்டளையிட முடியாது. அப்படிச் செய்வது நமக்கு ஆறறிவு இல்லை என்பதைப் பொருள்படுத்தும்.

குழந்தைகளும் அவ்வாறே. அவர்களிடம் அன்பு செலுத்தலாம். கண்டிப்புக் காட்டலாம். அவர்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டும், இந்த கல்லூரியில்தான் படிக்க வேண்டும், இந்த நேரத்தில் இந்தப் பாடத்தைத்தான் படிக்க வேண்டும், இந்த விளையாட்டைத்தான் நீ விளையாட வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பட்டியலிடலாமா? பெற்றோருக்குப் பிடித்த ஒன்றை குழந்தைகள் மீது திணிக்கலாமா? தன்னால் சாதிக்க முடியாததை குழந்தையின் மூலம் சாதிக்க நினைப்பது தகுமா? உங்களால் கற்றுக்கொள்ள முடியாத ஒன்றை குழந்தையைக் கற்கச் சொல்லி கட்டாயப்படுத்தலாமா?

அப்படி எனில், ஆங்கிலத்தில் 'பேரன்டிங்' என்று சொல்லப்படும் குழந்தை வளர்ப்பியல் என்பது உண்மையில் குழந்தையை வளர்ப்பதா அல்லது குழந்தைகளைத் தனக்கான அடிமைகளாக மாற்றுவதா என்கிற கேள்வி எழுகிறதில்லையா? அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதாக அமைந்திருப்பதுதான் ஆமி சுவா எழுதிய 'பேட்டில் ஹிம் ஆஃப் தி டைகர் மதர்' எனும் புத்தகம்.


நம்முடைய ஜோதிடத்தில் மேஷம், ரிஷபம் என்று இருப்பதுபோல, சீனர்களில் ஜோதிடத்தில் புலி, ஆண் காட்டுப் பன்றி, குரங்குகள் என்று விதவிதமாக இருக்கின்றன. சீனர்கள் ஒவ்வொரு ஆண்டையும் ஒரு குறிப்பிட்ட விலங்கின் ஆண்டாக அறிவிக்கிறார்கள். அதன்படி, அந்த வருடத்தில் பிறந்தவர்கள் அதற்குரிய விலங்கின் குணாதிசயங்களோடு இருப்பார்களாம்.

அப்படி, இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் ஆமி சுவா புலி ஆண்டில் பிறந்தவர். இவரின் மூத்த மகள் சோஃபியா குரங்கு ஆண்டில் பிறந்தவர். இவரின் இளைய மகள் லூலூ எனும் லூசியா ஆண் காட்டுப் பன்றி ஆண்டில் பிறந்தவர். இந்த இரண்டையும் கட்டி மேய்க்கிற 'புலித்தாயின் போர்ப் பாடல்'தான் இந்தப் புத்தகம்.

சோஃபியாவை அவளின் சின்ன வயதில் இருந்தே பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்ளப் பழக்குகிறார் ஆமி. லூலூவை வயலின் கற்றுக்கொள்ள வைக்கிறார். முதலாமவர், எந்த எதிர்ப்பையும் காட்டாமல் பியானோ கற்றுக்கொண்டு பல பரிசுகளைத் தட்டிச் செல்ல, இரண்டாமவரோ தன் தாயை எதிர்க்கிறார். வயலின் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். அவரின் பிடிவாதத்தை மீறி அந்த 'புலித்தாய்' அவரை வயலின் கற்றுக் கொள்ள வைத்தாரா... அதற்கு என்னென்ன வழிகளைக் கையான்டார்... தாயின் மனதை மகள் குளிர்வித்தாரா... இவற்றுக்கான பதிலாக விரிகிறது இந்த 230 சொச்சம் பக்க புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் மையப் புள்ளி, தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மேற்கத்தியப் பெற்றோர்களுக்கும் ஆசியப் பெற்றோர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான். ஆசியப் பெற்றோர்கள் என்று பொதுவிற்குச் சொன்னாலும், சீனப் பெற்றோர்களைத்தான் ஆமி குறிப்பிடுகிறார்.

மேற்கத்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்கிறார்கள். எப்போதும் அவர்களைப் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மற்ற குழந்தைகள், பெரியவர்கள் முன் தங்கள் குழந்தைகளை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார்கள். இதனால் அவர்களின் குழந்தைகள் சோம்பேறிகளாக, உடல் பருமனானவர்களாக, மடையர்களாக, பெற்றோரை மதியாதவர்களாகஇருக்கிறார்கள் என்கிறார் ஆமி. ஆனால் சீனப் பெற்றோர்களும், குழந்தைகளும் இதற்கு அப்படியே எதிர்த்திசையில் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

தன் கருத்தை இவர் இப்படி பதிவு செய்கிறார்:

"What Chinese parents understand is that nothing is fun until you're good at it. To get good at anything you have to work, and children on their own never want to work, which is why it is crucial to override their preferences. This often requires fortitude on the part of the parents because the child will resist; things are always hardest at the beginning, which is where Western parents tend to give up. But if done properly, the Chinese strategy produces a virtuous circle..."

விளையாட்டுப் போட்டிகளில் சீனர்கள் ஏன் சிறந்திருக்கிறார்கள்? அதற்கு மேற்சொன்னதுதான் காரணம் என்கிறார். இந்தப் புத்தகம் முழுக்க ஆமி சொல்லிச் செல்வது ஒரு விதத்தில் 'Chinese way of parenting'.

மேற்கத்தியர்கள் குழந்தை வளர்ப்பியலில் மிக மோசமான விஷயம் என்று கருதும் 'ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடுதல்' என்பதை, சீனக் குழந்தை வளர்ப்பியலில் 'அவ்வாறு ஒப்பிடுவது நல்லதுதான்' என்கிறார் ஆமி.

இன்னும் ஒருபடி மேலே போய், 'the Child is the extension of the self' என்கிறார். ஆகையால், பெற்றோர் நினைப்பதைத்தான் குழந்தைகள் செய்ய வேண்டும். அது குழந்தைகளுக்குத்தான் நன்மை. இந்த வகையான குழந்தை வளர்ப்பியலை குறைந்தபட்சம் குழந்தைகளின் 18 வயது வரைக்குமாவது தொடரலாம். அதற்குள் குழந்தைகள் நன்கு பக்குவப்பட்டு விடுவார்கள். அதற்குப் பின் மேற்கத்திய சிந்தனைகளால், குழந்தைகள் ஈர்க்கப்பட்டாலும், தங்களின் பலமான அடித்தளத்தால் அவர்கள் வழி தவறுவது குறைவு என்பதைச் சூசகமாகச் சொல்கிறார் ஆமி.

பிரச்சார நெடி இல்லாமல் தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு சீன வழிமுறை குழந்தை வளர்ப்பியல் என்பதை விறுவிறு நடையில் ஒரு நாவலைப் போலச் சொல்லிச் செல்வதால் புத்தகத்தின் எந்த ஒரு இடத்திலும் இடறலோ, அயர்ச்சியோ ஏற்படவில்லை. அதுவே புத்தகத்தின் வெற்றிக்கு முக்கியமான அம்சம்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பது உங்கள் குழந்தை வளர்ப்பியலை இன்னும் செறிவுள்ளதாக்கும்.

No comments:

Post a Comment