Wednesday, April 13, 2016

DR. B.R. AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - I

சாதியை ஒழிக்கும் வழி என்ன?

ந. வினோத் குமார்

தமிழகம் மே மாதம் எதிர்கொள்ள இருக்கிற தேர்தல் முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் கொஞ்சம் விசேஷமானது. காரணம், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் 'சாதி வெறிக் கொலைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்கிற ரீதியிலான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன.

இந்தத் தேர்தலில் யார் சாதிக்கப் போகிறார்களோ இல்லையோ, 234 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் 'சாதி'தான் ஜெயிக்கப் போகிறது என்பது நிச்சயம்!

சாதி குறித்து எழுதும் போதெல்லாம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அவர் இப்படிச் சொன்னார்: 'நீங்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் சரி. உங்களின் பாதையில் சாதி எனும் பூதம் குறுக்கிடும். அந்த பூதத்தை நீங்கள் அழிக்கும் வரையில் உங்களால் அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதார சீர்திருத்தமோ மேற்கொள்ள முடியாது'. யெஸ்... Caste is the monster!

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோர் படுகொலைக்கு உள்ளானது, பெருமாள் முருகன் உள்ளிட்ட படைப்பாளிகளுக்கு ஏற்பட்ட துர்பாக்கியங்கள் போன்ற தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோருக்கு நேர்ந்த மரணங்கள் உள்ளிட்ட தேசிய அளவிலான நிகழ்வுகள் எதை உணர்த்துகின்றன?

இந்து மதத்தின் மீது கட்டப்பட்ட சாதி அமைப்பு இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதைத்தானே?

இந்தச் சூழ்நிலையில்தான் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றன. காரணம், தலித்துகள் மட்டுமல்லாது, வலதுசாரி அமைப்புகளும் அம்பேத்கரைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படியான நிலையில், அம்பேத்கரை நாம் வாசிப்பது, மறுவாசிப்புச் செய்வது மிகவும் அவசியமாகி இருக்கிறது. சாதியம் முன்னெப்போதையும் விட மிகவும் வீர்யத்துடன் இயங்கி வரும் இந்தச் சூழலில், அம்பேத்கரின் 'அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்' (Annihilation of Caste) புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் பொருத்தமானது.

1936ம் ஆண்டு 'ஜாத் பட் தோடக் மண்டல்' எனும் இந்து மத சீர்திருத்த‌ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில், இந்து மதத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள் பற்றிப் பேசுவதற்காக அம்பேத்கர் ஓர் உரையைத் தயார் செய்திருந்தார் (அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சாதி அமைப்பு பற்றி முனைவர் பட்ட ஆய்வைச் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்க!). ஆனால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, அவர் எதைப் பற்றிப் பேசப் போகிறார் என்பது குறித்து அறிய அந்த அமைப்பினர் மும்முரமாக இருந்தனர்.

அம்பேத்கர் தன்னுடைய உரையில், வேத சாஸ்திரங்களைப் பற்றி விமர்சிக்கப் போகிறார் என்று தெரிய வந்ததும், அந்த அமைப்பினர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டனர். இதனால் அம்பேத்கர் அந்த உரையை ஆற்ற முடியாமல் போனது. பின்னர் அதனைத் தன் சொந்தச் செலவில் புத்தகமாக்கி 8 அன்னாக்களுக்கு விற்பனை செய்தார்.

அதே ஆண்டில் முதல் பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஆண்டே (1937) இரண்டாவது பதிப்பு வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது. முதல் பதிப்பு வெளியானபோது காந்தி தன்னுடைய 'ஹரிஜன்' இதழில் இந்தப் புத்தகத்துக்கு எதிராக நீண்ட விளக்கங்களை எழுதினார். அந்தச் சமயம் காந்தியை விட அம்பேத்கர் அவ்வளவு ஒன்றும் பெரிய 'செலிப்ரிட்டி'யாக இல்லை என்பதை கவனத்தில் கொள்க! (இரண்டாவது பதிப்பில் காந்தி எழுதிய விளக்கத்தையும், அதற்கு தான் அளித்த பதிலையும் சேர்த்துப் பதிப்பித்தார் அம்பேத்கர். அந்தப் புத்தகம்தான் தற்போது வரையிலும் பதிப்பிக்கப்படுகிறது).

ஆக, காந்தியே வரிந்துகட்டிக் கொண்டு பதில் எழுதும் அளவுக்கு, அம்பேத்கர் அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?


இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டை 'தொழில் பிரிவு முறை' (டிவிஷன் ஆஃப் லேபர்) என்று சிலர் கருதுவதுண்டு. அதாவது, ஒவ்வொருவரும் அவர்கள் செய்யும் வேலையின் அடிப்படையில் சமூகத்தில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.

ஆனால் இது 'தொழில் பிரிவு முறை' அல்ல. மாறாக, 'தொழிலாளர்களைப் பிரிக்கும் முறை' (டிவிஷன் ஆஃப் லேபரர்ஸ்) என்கிறார் அம்பேத்கர். அதாவது, ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப அவர்களைச் சமூகத்தின் மேல் மற்றும் கீழ்ப் படிகளில் வைப்பதுதான் சாதி செய்கிற சதி என்கிறார்.

சாதி எனும் கட்டமைப்பு இந்து மதத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. உண்மையில், இந்து மதம் என்கிற மதமே இந்தியாவில் இல்லை. 'இந்து' என்கிற பெயர் கூட அந்நியப் பெயர்தான். 'இந்து' என்பது பல சாதிகளின் ஒன்றிணைவுதான் என்கிறார் அம்பேத்கர்.

இப்படிச் சொல்லும் அவர் இன்னொரு உண்மையையும் எடுத்துக்காட்டுகிறார். இந்து மதம் என்பது ஒரு 'பரப்புரை மதமாக' (மிஷனரி ரிலீஜியன்) இருந்தது. இந்த மதத்தில் சாதி அமைப்பு வளர்ந்த காரணத்தால்தான் அதனால், பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் முதல் 13 அத்தியாயங்களில் சாதி குறித்த பின்னணித் தகவல்களைத் தரும் அம்பேத்கர், 14வது அத்தியாயத்தில் இருந்து சாதியை ஒழிப்பதற்கான வழிகளைச் சொல்கிறார். அதில் முதலாவது, ஒரு சிறந்த சமூகம் என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கான சிந்தனையை அவர் பிரெஞ்சுக் குடியரசில் இருந்து எடுக்கிறார். ஆம், ஒரு சிறந்த சமூகம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொண்டதாக‌ இருக்க வேண்டும் என்கிறார்.


ஐரோப்பாவில் ஒருவர் தன்னுடைய பவுதீக ஆயுதத்தை ராணுவப் பணியில் ஈடுபடும் உரிமையின் மூலமும், போராட்டங்களின் மூலம் தனது அரசியல் ஆயுதத்தையும், கல்வியின் மூலம் தார்மீக ஆயுதத்தையும் பெற்றார்கள். ஆனால் இந்தியாவில் இந்த ஆயுதங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற முடியாதபடிக்கு 'மேல் சாதியினர்' பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு
'ஆர்ய சமாஜம்' போதிக்கிற 'நால்வர்ணம்' இந்த ஆயுதங்களைப் பெற்றுத்தராது என்கிறார்.

பகுத்தறிவும், ஒழுக்கமும் சீர்திருத்தவாதியின் இரண்டு முக்கிய ஆயுதங்கள் என்று கூறும் அம்பேத்கர், உண்மையிலேயே சாதி அமைப்பை உடைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி சாதி மறுப்புத் திருமணமே என்கிறார்!

சாதி என்பது ஒரு விதமான மனநிலை. அந்த மனநிலை கொண்டவர்களை நான் 'மனப்பிறழ்வுக்கு உண்டானவர்கள்' என்பேன். அந்த நிலை சரியாக, சாதி மறுப்புத் திருமணமே அருமருந்து!

'இந்துக்களின் மூச்சே சாதிதான். அதை அவர்கள் வெளியேற்றியதால் காற்றை மாசுபடுத்தி மற்றவர்களையும் பாதிப்படையச் செய்துவிட்டார்கள்' என்று புத்தகத்தின் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர். அந்தக் காற்றைச் சுத்தப்படுத்த காதலும், கலப்புத் திருமணமும்தான் கைகொடுக்கும் என்றால், அவற்றைப் பரிந்துரைக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும்)

No comments:

Post a Comment