Thursday, September 6, 2018

பேனாவிடம் தோற்றுப் போன ‘பாசிஸ’ தோட்டா..!

ந.வினோத் குமார்

‘குற்றங்களை நீக்குபவர்’ என்ற பொருளில் அமைந்ததுதான் ‘ஆசிரியர்’ எனும் சொல். மாணவர்களிடத்தில் இருக்கும் குற்றம், குறைகளை நீக்கி நல்வழிப்படுத்தும் ஆசிரியர் எப்படி மதிக்கத்தக்கவரோ, அதேபோல, சமூகத்தில் நடக்கும் குற்றங்களைத் தன் பேனாவின் மூலம் நீக்க முற்படுகிற பத்திரிகையாளர்களும் ஆசிரியர்களே! 

அப்படியான ஆசிரியர்களில் ஒருவர்தான் கெளரி லங்கேஷ். அதற்கான பரிசு, அவர் ஆசிரியர் தினத்தில் கொல்லப்பட்டது! 

கன்னட மொழி பத்திரிகை உலகத்தின் முகங்களில் ஒன்றாக ‘லங்கேஷ் பத்திரிக்கே’வும், 2005-க்குப் பின்னர் ‘கெளரி லங்கேஷ் பத்திரிக்கே’வும் விளங்கின என்றால் அது மிகையில்லை. என்ன… அந்த முகம், ஒப்பனைகளற்ற முகம். அரசியலை சுயலாபத்துக்காக ஆராதிக்காத பேனாக்களில் ஒன்று, கெளரியினுடையது! 

நாட்டை, பண்பாட்டை காவிமயப்படுத்துவதற்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தவர் கெளரி. அந்தக் கண்டனங்களை எதிர்கொள்ள முடியாத இந்து பாசிஸ வெறிக்கு 2017-ல், இதே தினத்தில் அவர் பலியானார். ஓர் ஆண்டாகியும், அன்றைய தின இரவில் நடந்த கொலைக்கு, இன்னும் விடியல் வரவில்லை. 

கெளரி லங்கேஷின் மரணத்துக்கு முன்பு வரை, அவரைப் பற்றியோ, அவரது செயல்பாடுகள் பற்றியோ கர்நாடக மாநிலத்தைத் தாண்டி, பொது மக்களிடையே பரவலாக அறியப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்றே கருதுகிறேன். ஆனால் அவர் கொல்லப்பட்ட, அடுத்த இரண்டு மாதங்களில் அவரைப் பற்றிப் பலரும் தெரிந்துகொண்டார்கள். அதற்கு முக்கியக் காரணமாக விளங்கியது, ‘தி வே ஐ ஸீ இட்’ எனும் புத்தகம். 

கெளரி லங்கேஷ் எழுதிய கட்டுரைகள், கெளரி லங்கேஷ் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்திருக்கும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர், கெளரியின் நண்பரும் பேராசிரியருமான சந்தன் கவுடா. ‘நவயானா’ பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் 2017 நவம்பர் மாதத்தில் வெளியானது. 

  
என்னதான் கெளரி, இதழியல் படிப்பைப் படித்திருந்தாலும், அவர் எடுத்த உடனே, அவரது தந்தை ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிக்கே’வில் சேர்ந்துவிடவில்லை. பெரிய காரணம் எதுவும் இல்லை, அவருக்கு கன்னடம் அவ்வளவாகத் தெரியாது, அதனால்! எனவே, ஆங்கில இதழியலில் கவனம் செலுத்தினார் கெளரி. அவரது ஆரம்பகால ஆங்கில இதழியல் கட்டுரைகள் சில, இந்தப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. 

புட்டபர்தி சாய் பாபாவின் தில்லுமுல்லுகள், 80-களில் பெங்களூருவை மிரள வைத்த சைக்கோ கொலைகாரன் ‘நாகராஜா’ (அவனைச் சிறையில் வைத்துப் பேட்டி எடுத்திருக்கிறார் கெளரி), ராஜீவ் கொலையில் ஈடுபட்ட சிவராசனை ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ பெங்களூருவில் வைத்துச் சுற்றி வளைத்தபோது, அவர்களுடன் கூட இருந்து, வழங்கிய நேரடி ரிப்போர்ட் என கெளரியின் ‘ரிப்போர்ட்டேஜ்’ அனைத்தும், ஒரு ‘க்ரைம் திரில்லர்’ நாவலைப் போன்று அவ்வளவு விறுவிறுப்புடனும், தகவல் செறிவுடனும் எழுதப்பட்டிருக்கின்றன. 

தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு, 2000-ல் ‘லங்கேஷ் பத்திரிக்கே’வின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் கெளரி. அப்போது, ‘இவருக்கு கன்னடம் தெரியாதே.. எப்படிப் பத்திரிகையை நடத்துவார்?’ என்று பலரும் கேலி பேசினர். ஆனால், தனக்கு கன்னடம் தெரியாது என்பதை மறைக்காததுடன், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியால் கன்னடத்தை நன்கு கற்கவும் செய்தார் அவர். அந்த விடாமுயற்சியும் பயிற்சியும்தான், தாய்மொழியைக் கற்காதவர்களை ‘வேர்களற்ற ஆன்மாக்கள்’ என்று கெளரியை எழுதச் செய்தன. 

இந்தப் புத்தகத்தில் அவர் கன்னடத்தில் எழுதிய கட்டுரைகளில் சில, ஆங்கிலத்தில் வெவ்வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்த அதே தெள்ளிய எழுத்து நடை, மொழிபெயர்ப்புக் கட்டுரைகளிலும் காண முடிகிறது. வேறு வேறு நபர்கள் மொழிபெயர்த்திருந்தாலும், அந்தக் கட்டுரைகளில் எந்தவொரு இடத்திலும் தட்டுத் தடங்கலைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு ‘ஸ்மூத்’ ஆக இருக்கிறது ‘ரைட்டிங் ஃப்லோ’. ஆங்கில, கன்னட மொழிகளின் மீது கெளரிக்கு இருந்த வளம் காரணமாகவே இது சாத்தியமாகி இருக்கிறது. இந்த வெற்றிக்கு, மொழிபெயர்ப்பாளர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 

ஆங்கில மொழி ‘அதிகாரத்தின் கருவி’ என்ற புரிதலை கெளரி கொண்டிருந்த காரணத்தால்தான், ‘மோடியின் ஆங்கிலம் மோசமாக இருக்கிறது’ என்று சிலர் கேலி செய்தபோது, ‘கருத்தியல் ரீதியான எதிரியை, அவரது ஆங்கில மொழித் திறன் குறைபாட்டைப் பயன்படுத்தி கேலி செய்யக் கூடாது’ என்றார். 

சம்பளத்துக்காக அல்லாமல், சமூகத்துக்காகப் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் இன்று ஒரு குழப்பம் உண்டு. தான் ஒரு ‘ஆக்டிவிஸ்ட்’டாகவும் இருக்க வேண்டுமா அல்லது வெறுமனே பத்திரிகையாளராக மட்டும் இருந்துவிட வேண்டுமா என்பதுதான் அது. இந்தக் குழப்பத்துக்கு கெளரி தரும் பதில் இது: 

“நமது ‘ஜர்னலிஸ’த்துக்கு இதயத்தையும், ஒரு பார்வையையும் ‘ஆக்டிவிஸம்’ தருகிறது என்றால், நமது ஆக்டிவிஸத்துக்கு ஒரு முழுமையான புரிதலையும் கூர்ந்து அறியும் திறனையும் ஜர்னலிஸம் தருகிறது. எனவே, இன்றைய காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் ‘மக்கள் நலன் சார்ந்து’ இயங்குபவராக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் தன்னளவில் ஒரு ஆக்டிவிஸ்ட்டாக இல்லாமல் அது முடியாது!” 

சமீபத்தில், கெளரியைப் போலவே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி, உயிர் தப்பித்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், கெளரி குறித்து எழுதிய கட்டுரை இந்தப் புத்தகத்தில் உண்டு. அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் இப்படி இருக்கின்றன:

“கெளரி எப்படி இறந்தார் என்பதை நாம் மறவாமல் இருப்போம். போலவே, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!”

கெளரி நம் நினைவில் வாழ்வார்… ‘பாசிஸ’ தோட்டாவைச் சுமந்துகொண்டு!

No comments:

Post a Comment