Sunday, February 11, 2018

நாடு கடத்தப்பட்டவனின் இறுதி மடல்!

.வினோத் குமார்

நான் நோயுறும் சமயங்களில் எல்லாம் நோய் தொடர்பான புத்தகங்களைப் படிப்பது வழக்கம். இதனால் இரண்டு பயன்கள். ஒன்று, குறிப்பிட்ட நோயால் தாக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தஅந்த நூலாசிரியர்களின் அனுபவங்களைப் படிக்கும்போது, 'நல்லவேளை... நம்ம கேஸ் எவ்வளவோ பரவாயில்லை போலையே!' என்ற நினைவு வந்து, நாம் ஆறுதல் அடைவோம். இன்னொன்று, நோயுற்று வெறுமனே 24 மணி நேரமும் படுத்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, இப்படி புத்தகங்களைப் படிக்கும்போது, நாம் ஆரோக்கியமாக இருந்த காலத்தில் படிக்காமல் விட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடலாம்.

நிற்க... சமீபத்தில் நான் பிரபல பத்திரிகையாளர் கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் எழுதிய 'மார்ட்டாலிட்டி' புத்தகத்தைப் படித்தேன். அதாவது, நான் நோயுற்றிருந்தேன்.

அமெரிக்க இதழியலில் கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ், ஓங்கி ஒலித்த குரல். அப்படித்தான் அவரை அறிமுகப்படுத்த வேண்டும். அவர் ஒரு சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல், சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். இன்னும் சொல்லப் போனால், அவர் சிறந்த பேச்சாளராக இருந்த காரணத்தால்தான், சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார்.

இந்தப் புத்தகத்தில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்: 'யாரால் பேச முடியுமோ, அவரால் எழுதவும் முடியும். அதாவது, விஷய ஞானத்துடன் ஒருவரால் பேச முடிகிறபோது, அவரால் அதே விஷய ஞானத்துடன் எழுதவும் முடியும். அதற்கு, உங்களுக்கான குரலை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் பேசுவது போலவே எழுதவும் வேண்டும். ஏதேனும் ஒன்றைக் கேட்கவோ அல்லது கவனிக்கவோ தகுந்ததாக இருக்கிறது எனில், அது வாசிக்கத் தகுந்ததாகவும் இருக்கும். அப்படி எழுதுகிற போது, உங்களின் எழுத்தை வாசிக்கும் வாசகர், தனக்காகவே நீங்கள் எழுதியது போல உணர வேண்டும். அப்படி உணர்ந்ததாக யாராவது உங்களிடம் சொன்னால், அதுதான் ஒரு வாசகரால் உங்களுக்கு அளிக்கப்படும் மிகச் சிறந்த பாராட்டு'.


இப்படி எழுதிய அவர், எங்கே தனது குரலை இழந்துவிடுவோமோ என்று அஞ்சினார். காரணம், அவருக்குத் தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. அதுவும், 'ஹிட்ச்-22' என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தை அமெரிக்கா முழுவதும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது, அந்த நோய் அவரைப் பீடிக்கத் தொடங்கியிருந்தது.

ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்தபோது, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. உடனடியாக 'எமெர்ஜென்ஸி சேவை'க்கு அவர் தகவல் அளிக்க, அந்தப் பணியாளர்கள் வந்து அவரை ஆம்புலன்ஸில் அள்ளிக் கொண்டு போகிறார்கள். அதிலிருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகம். தான் அவ்வாறு அள்ளிச் செல்லப்படுவதை அவர் இப்படி விவரிக்கிறார்: 'ஆரோக்கியம் என்ற நாட்டிலிருந்து நோய் என்ற நாட்டுக்கு நான் நாடு கடத்தப்பட்டேன்'.

எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் பிரபலமடைந்திருந்த ஹிட்சென்ஸுக்கு இன்னொரு பிரபலமான அடையாளமும் உண்டு. உலகறிந்த நாத்திகர் அவர். பல மேடைகளின் தனது தர்க்க ரீதியான வாதங்களால், மதபோதகர்களையும் மதத் தலைவர்களையும் வாயடைத்துப் போகச் செய்தவர்.

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவுடன், பலரும் 'கடவுள் நிந்தனை செய்தவனுக்கு மிகச் சரியான உறுப்பில், மிகச் சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்று கொக்கரிப்பார்கள்' என்றவர், 'அப்படி அவர்கள் கொக்கரித்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பது போல, 'என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கடவுளிடம் மண்டியிட மாட்டேன்' என்று உறுதிபடக் கூறுகிறார். இறுதி வரையிலும் அப்படித்தான் இருந்தார்.

மேலும், தான் நோயுற்றிருப்பதை அறிந்து, பலரும் தனக்காகப் பிரார்த்தனை செய்துகொள்வதாகக் கூறினார்கள் என்றும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் கூறும் அவர், பிரார்த்தனை குறித்து இப்படித் தெரிவிக்கிறார்பயம் மற்றும் சந்தேகத்தின் பிடியில் சிக்குண்ட ஒருவரை, நடக்காத ஒன்றின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்ய வைக்க மேற்கொள்ளப்படும் சுரண்டலே பிரார்த்தனை'.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காகப் பல சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் அலைக்கழித்தது. அது, 'நான் வீணாகப் படுத்துக் கொண்டிருக்கிறேனே என்ற அழுத்தம்தான் என்னைத் தற்போது அரித்துக்கொண்டிருக்கிறது', என்ற எண்ணம்தான். 'மானுடத்துக்காக நீங்கள் ஏதேனும் பங்களிப்பைச் செய்யாத வரையில், நீங்கள் மரணித்துப் போவதற்காக வெட்கப்பட வேண்டும்' என்ற அமெரிக்கக் கல்வியாளர் ஹோரேஸ் மன்னின் கூற்றும், அதே வேளையில் ஹிட்சென்ஸைத் தொந்தரவு செய்தது.

ஆகவே, தன்னைப் பல்வேறு ஆய்வுகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்திக் கொள்வதன் மூலம், தன்னால் பிறருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ முடியும் என்று நம்பினார். அதனால் வலி மிகுந்த பல சிகிச்சை முறைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார். அந்த அனுபவங்களையும் அவர் இந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார். வலியைப் பற்றி அவர் எழுதும்போது, 'நினைவிலிருந்து வலியைப் பற்றி விளக்க முடியாமல் போவது, உண்மையில் கருணை மிகுந்த ஒரு விஷயம்' என்கிறார். உண்மைதான் இல்லையா?

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலும், விடாமல் சிந்தித்துக் கொண்டே இருந்தார். அந்தச் சிந்தனைகளைத் தன் எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது நோய் குறித்தும், தனது மருத்துவமனை அனுபவங்கள் குறித்தும் ஒரு பெரிய புத்தகம் எழுதத் திட்டமிட்டிருந்தார் ஹிட்சென்ஸ். ஆனால் துர்பாக்கியம், அவர் எழுதிய கடைசிப் புத்தகம் இதுதான்.

புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயத்தில் ஹிட்சென்ஸ் இப்படிச் சொல்கிறார்: 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நோய் ஏற்பட்டது?' என்ற என் கேள்விக்கு, இந்தப் பிரபஞ்சம், 'ஏன் ஏற்படக் கூடாது?' என்று பதில் சொல்கிறது'.

ஆம், நாமும் நோயுறுகிற போதெல்லாம் 'ஒய் மீ?' (Why me?) என்று கேள்வி எழுப்பினால் 'ஒய் நாட்?' (Why not?) என்பதுதான் நமக்கான பதிலாகவும் இருக்கும். ஆகவே, நோயை ஏற்றுக்கொள்வதுதான் சரி. புலம்பிப் பிரயோஜனம் இல்லை!

நன்றி: கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் படம் உதவி - huffingtonpost.com

1 comment:

  1. மிகவும் அருமையான கட்டுரை. ஆழமான படிப்பு. இந்த புத்தகத்தின் நாயகனான கிறிஸ்டோஃபர் ஹிட்சென்ஸ் போல்
    டென்னிஸ் வீரர் Arthur Asheக்கு HIV Positive என்று தெரிந்த உடன் அனைவரும் உங்களுக்கா? உங்களுக்கா? என்று கேட்டார்கள். அதற்கு Arthur Ashe சொன்ன பதில், நான் நிறைய தடவை விம்பிள்டன் பரிசு பெரும்பொழுது, எனக்கு மட்டும் ஏன் பரிசு என்று கடவுளிடம் கேட்டதில்லையே அதனால் இவற்றை மட்டும் எனக்கு ஏன் என்று கேட்பது என்ன நியாயம் என்றார். அதனால் ஒய் மீ?' (Why me?) என்று கேள்வி எழுப்பினால் 'ஒய் நாட்?' (Why not?) என்பதுதான் நமக்கான பதிலாகவும் இருக்கும். மிக சரியான பதில். - செழியன்.ஜா

    ReplyDelete