Tuesday, August 21, 2018

கிறிஸ்டோபர் வென்றார்… கடவுள் தோற்றார்…!

ந.வினோத் குமார்

மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து இப்போது வரை, ஒரு கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்றால், அது இதுதான்: ‘கடவுள் இருக்கிறாரா..?’

‘இருக்கிறார்’ என்றுதான் உலகில் உள்ள எல்லா மதங்களும் சொல்கின்றன. சொல்லி வைத்தாற்போன்று அந்தக் கடவுளர் அனைத்தும் ஆண் பாலினத்தவராகவே இருப்பது மட்டும்தான் மதங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை!

கடவுள், மதங்கள் ஆகியவற்றின் பெயரால்தான் மூடநம்பிக்கைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. பரப்பப்படுகின்றன. அவற்றுக்கு எதிராகத்தான் கலிலியோ, சாக்ரடீஸ், ராஜா ராம் மோகன் ராய், பெரியார் போன்றோர் பணியாற்றி வந்தனர். அந்த வரிசையில் வருபவர்தான் நரேந்திர தபோல்கர். அடிப்படையில் மருத்துவரான இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்ட போலி சாமியார்கள், மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவான சமூக விரோதிகள், அவரது உயிருக்குக் குறி வைத்தனர். 2013, ஆகஸ்ட் 20-ம் தேதி அவர் கொல்லப்பட்டார்.

அந்த தினத்தை இந்த ஆண்டு முதல் ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ என்று அனுசரிக்க, மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஆல் இந்தியா பீப்பிள் சயின்ஸ் நெட்வொர்க்’ எனும் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தினத்தில், ‘ஹிட்சென்ஸ் எதிர் ப்ளேர்’ எனும் புத்தகத்தை அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். கனடா நாட்டில் உள்ளவர் பீட்டர் மங்க் எனும் கொடையாளர். இவரும் இவரது மனைவியும் இணைந்து 2006-ல் ‘ஆறியா ஃபவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அதன் கீழ், 2008-ல் ‘தி மங்க் டிபேட்ஸ்’ எனும் விவாத நிகழ்ச்சியைத் தொடங்கினர். ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்த விவாத நிகழ்ச்சியில், குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றுவார்கள்.

அப்படி, 2010-ல், பத்திரிகையாளரும் கடவுள் மறுப்பாளருமான கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் ஆகியோர் ‘உலகில் நடைபெறும் நன்மைகளுக்கு மதங்கள் காரணமா?’ எனும் தலைப்பில் விவாதித்தனர். கிறிஸ்டோபர் அந்தத் தலைப்பு எதிராகவும், ப்ளேர் அதற்கு ஆதராகவும் உரையாற்றினர். அந்த உரையாடல்கள் தொகுக்கப்பட்டு, ‘ஹிட்சென்ஸ் எதிர் ப்ளேர்’ எனும் தலைப்பில் புத்தகமாக 2011-ல் வெளியானது.


கிறிஸ்டோபரின் கடவுள் மறுப்புச் சிந்தனைகள் உலகப் புகழ் பெற்றவை. அதனால் எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியரில்’ பறந்தார். ‘யுத்தங்களிலும், அன்றாட மனிதச் செயல்பாடுகளிலும் தனக்கென்று ஒரு நிலையை எடுக்கும் கடவுள் நமக்குத் தேவையா? காமம் மற்றும் உடலுறவு சார்ந்த விஷயங்களைக் குறித்து நம்மைக் கேவலமாக நினைக்க வைக்கிற கடவுள், இந்த உலகத்துக்கு நல்லதுதானா? இல்லாத நரகத்தையும், ‘சாமி கண்ணைக் குத்திவிடும்’ என்று சொல்லி பயம் காட்டியும் நமது குழந்தைகளை வளர்ப்பது சரியா? ‘ஆணுறையைப் பயன்படுத்துவதைவிட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது எவ்வளவோ மேல்’ என்று பிரசங்கம் செய்யும் மதங்கள் நமக்குத் தேவைதானா?...’ என்று இப்படி அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டு வந்தவர், கடைசியாக ஒரு முக்கியமான கேள்வியை முன் வைக்கிறார். ‘பெண்களைக் கீழ்த்தரமான படைப்பாகக் கருதும் கடவுள், மதங்கள் ஆகியவை உலகுக்கு நன்மை பயக்குமா?’ (‘சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கியதால்தான் கேரளத்தில் வெள்ளம்’ என்று பிதற்றுகின்ற குருமூர்த்திகள் கவனிக்க..!).

இப்படிக் கேட்டுவிட்டு, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலாளர் ஸ்டீவன் வீன்பெர்க் சொன்ன ஒரு கருத்தை மேற்கோள் காட்டுகிறார் கிறிஸ்டோபர்: ‘இந்த உலகில், நல்லவர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லதையும், தீயவர்கள் தங்களால் இயன்ற அளவு தீயவற்றையும் செய்வார்கள். ஆனால், நல்லவர்களைத் தீங்கு செய்ய வைக்க வேண்டுமென்றால், மதங்கள் போதும்!’.

‘தீயவற்றிலிருந்து நன்மையைப் பிரித்தறிய நமக்குத் தெய்வீக சக்தி எதுவும் தேவையில்லை. போலியோவுக்குச் சொட்டு மருந்து கொடுப்பது குழந்தைக்கு நல்லது. ஆனால், ‘போலியோவுக்குச் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளாதே. அது நமது மதத்துக்கு எதிரானது’ என்று, ஆப்கானிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது. ‘எங்களால் அற்புதங்களைச் செய்ய முடியும்’ என்று சொல்வதை மதங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கிறிஸ்டோபர் தன் வாதங்களை முன் வைக்கிறார்.

அவற்றுக்குப் பதில் சொல்லும்விதமாக, ப்ளேர், ‘மதங்களின் பெயரால் அக்கிரமங்கள் நடப்பது உண்மைதான். எனினும், மதம் சார்ந்த அமைப்புகள் பல ஆப்பிரிக்கா முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் நல்ல பணிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. அறிவியல், இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுத் தருகிறது. ஆனால் கடவுள் நம்பிக்கையோ, என்ன காரணத்துக்காக நமக்கு அறிவு வழங்கப்பட்டிருக்கிறது, அதை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. கடவுள் நம்பிக்கை நம் வாழ்க்கையை வளமாக்காது. மாறாக, நம் ஆன்மாவை வளமாக்கும்’ என்கிறார்.

ப்ளேரின் வாதங்களை மறுக்கும்விதமாக, கிறிஸ்டோபர், ‘மதங்கள் மனிதர்களை ஒன்றிணைப்பதில்லை. மாறாக, ‘இதுதான் நம் கடவுள். இவரைத்தான் பின்பற்ற வேண்டும். இன்னொரு மதத்தின் கடவுளை நீ கும்பிடக்கூடாது’ என்று பிளவுபடுத்துகின்றன’ என்பவர், ‘இன்னொருவருக்கு நாம் உதவுவதில் நிச்சயமாக ஒரு சந்தோஷம் இருக்கிறது. அது போதும். அதற்கு ‘மதம்’ என்ற சாயத்தைப் பூசத் தேவையில்லை என்று டோனி ப்ளேரைக் கேட்டுக்கொள்கிறேன். மதச்சார்பின்மையே இன்றைய தேவை’ என்கிறார்.

‘மதத்தின் பெயரால் நடைபெறும் தீமைகள், மத இலக்கியங்களில் உள்ளார்ந்த விஷயமாக இருக்கின்றன’ என்கிறார் கிறிஸ்டோபர். அயோத்தியில் நடைபெறும் பிரச்சினைகூட அப்படியான ஒன்றாக இருக்கலாம், இல்லையா?

‘மனித நாகரிகத்தின் இருப்புக்கு மிக ஆபத்தான விஷயமாக மதங்கள் இருக்கின்றன’ என்கிறார் அவர். நாம் அதைப் புரிந்துகொள்வது நமக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நல்லது. 

இருவரின் விவாதங்களும் முடிந்த பிறகு, பார்வையாளர்களிடமிருந்து கேள்வி வருகிறது. அதில் ஒன்று, ‘அமெரிக்காதான் உலகிலேயே மிகவும் மதரீதியான நாடு. ஆனால், இங்குதான் ஜனநாயகமும் தழைக்கிறது. இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று கிறிஸ்டோபரிடம் கேட்கப்படுகிறது.

அதற்கு கிறிஸ்டோபர், ‘மத விஷயத்தில் அமெரிக்க அரசு எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காதபடிக்கு, அதன் அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. இது அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன் காலத்திலிருந்து இருக்கிறது. ஒருமுறை ‘டான்பரி பேப்டிஸ்ட் அசோஸியேஷன்’ எனும் மத அமைப்பு, ‘தங்களுக்கு வழங்கப்படுவது சலுகைகள்தான், உரிமைகள் அல்ல’ என்று சொல்லி ஜெஃபர்சனுக்குக் கடிதம் எழுதியது. அதற்கு ஜெஃபர்சன், ‘தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும்விதமாக, இவற்றுக்கு இடையில் எப்போதும் ஒரு சுவர் இருக்கத்தான் செய்யும்’ என்றார். அந்தச் சுவரைப் பராமரிப்பது என்னைப் போன்ற ஆட்களின் வேலை’ என்கிறார்.

அப்படியான சுவர், இந்தியாவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? அப்படியே இருந்தாலும், அதைப் பராமரிக்க கிறிஸ்டோபரைப் போன்று எத்தனை பேர் முன் வருவார்கள்?

இந்த விவாதத்தைச் சுமார் 2,700 பார்வையாளர்கள் ரசித்தார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்பு, தலைப்புக்கு ஆதரவாக 25 சதவீதத்தினரும், எதிராக 55 சதவீதத்தினரும், 20 சதவீதத்தினர் எந்த முடிவையும் எடுக்க முடியாமலும் இருந்தனர். விவாதம் முடிந்த பிறகு, 32 சதவீதத்தினர் ஆதரவாகவும், 68 சதவீதத்தினர் எதிராகவும் வாக்களித்தனர். ஆம்… கிறிஸ்டோபர் ஜெயித்தார்… கடவுள் தோற்றார்!

No comments:

Post a Comment