Monday, June 6, 2016

பசுமை சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும்!

ந.வினோத் குமார்

பதிப்பிக்கப்பட்ட தேதி: 2016, ஏப்ரல் 9.

“1972- ம் ஆண்டு முதன்முறையாகச் சென்னைக்கு வந்தேன். அதற்குப் பிறகு அவ்வப்போது இந்தியாவுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறேன். 90-களில் உலகமய மாக்கலுக்குப் பிறகு பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் மாற்றத்துக்கு உள்ளாகத் தொடங்கியிருந்தது. இன்றைக்கு இந்தியா சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எல்லாமே, அதற்குப் பிறகு உருவானவைதான். இங்கே நாம் சந்திக்கும் பிரச்சினைகள் மற்ற நாடுகளிலும் இருக்கவே செய்கின்றன. ஆனால், பிரச்சினைகளை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் மற்ற நாடுகளிடமிருந்து வேறுபடுகிறோம்!” என்கிறார் மீரா சுப்பிரமணியன்.

பூர்வீகம் தமிழ்நாடு, வசிப்பது அமெரிக்காவில். பத்திரிகையாளர் - ‘நியூயார்க் டைம்ஸ்', ‘நேச்சர்' உள்ளிட்ட சர்வதேச இதழ்களில் சுற்றுச்சூழல் தொடர்பாக எழுதிவருபவர். அந்தக் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை தொகுக்கப்பட்டு ‘எலிமென்டல் இந்தியா' எனும் தலைப்பில் சமீபத்தில் புத்தகமாக வெளியாகியுள்ளது. இது இவருடைய முதல் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்காகச் சமீபத்தில் சென்னை வந்திருந்த மீராவை சந்தித்துப் பேசியதிலிருந்து...
 
உங்கள் புத்தகத்தில் கேரளாவும் சிக்கிம் மாநிலமும் இயற்கை விவசாயம் நோக்கிப் பயணிக்கின்றன என்று எழுதியிருந்தீர்கள். சமீபத்தில் 'முற்றிலும் இயற்கை விவசாய மாநிலம்' ஆக சிக்கிம் அறிவித்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அந்தத் தகவலைக் கேட்டு ரொம்பவே உற்சாகமாக உணர்ந்தேன். இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு இது பெரும் ஊக்கம் அளிக்கும். இதனால், மேலும் பலர் இயற்கை விவசாயத்தை நோக்கி வருவார்கள். இயற்கை விவசாயம் மூலம் அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

ஆனால், ‘இந்தப் பொருள் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்டதுதானா' என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் வெளிப்படையான ‘சர்டிஃபிகேஷன்' (சான்றிதழ் நடைமுறைகள்) எப்போது வரும் என்பது பெரிய கேள்வி. அது பற்றிய விவாதங்கள்கூட இங்கு நடப்பதில்லை என்பதுதான் வருத்தம்.
 
நீங்கள் கலந்துரையாடிய பலரும் இயற்கை விவசாயம் அதிக விளைச்சலைத் தருமா என்பது குறித்துச் சந்தேகத்துடனேயே எதிர்காலத்தை நோக்கியிருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இயற்கை விவசாயத்தைப் பல விவசாயிகள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இன்னும் சிலர் ‘இயற்கை விவசாயத்தை வேறு எந்த வகைகளில் கொண்டுசெல்லலாம்' எனப் பரிசோதனைகளையும் செய்துவருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால், இயற்கை விவசாயத்தில் உடனடியாகப் பலனை எதிர்பார்க்க முடியாது. ரசாயனத்துக்குப் பழகிய மண், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும். அதன் பிறகுதான் இயற்கை விவசாயத்தின் பலன் தெரியவரும். எனினும், இன்று விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு இயற்கை விவசாயம் ஒரு பகுதி விடை மட்டுமே. அதுவே முழுமையான விடை அல்ல!
 

காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றான பாரம்பரிய அடுப்புகள் குறித்து எழுதியிருக்கிறீர்கள். இந்த அடுப்புகளுக்கு மாற்றாக 'உன்னத் சூலா அபியான்' என்ற பெயரில் மரபுசாரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் புகையைக் கட்டுப்படுத்தும் புதிய அடுப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

நான் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன்பு சில காலம் அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிவந்தேன். பாரம்பரிய அடுப்புகளுக்கு மாற்றான அடுப்புகளை உருவாக்குவதுதான் அங்கே முக்கியப் பணி. அங்கே நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், மாசுபாட்டைக் குறைக்க வழி செய்தால், மக்கள் ருசியை இழக்க வேண்டியிருக்கும். பாரம்பரிய அடுப்பில் செய்வது போன்ற ருசியும் வேண்டும், வெளியாகும் புகையின் அளவும் குறைய வேண்டும் என்றால், அதற்கு மின்சாரம், எரிவாயு போன்ற விலை உயர்ந்த ஆற்றல் தேவைப்படும். அதோடு உணவு செய்யும் நேரம் குறைய வேண்டும். இப்படிப் பல முனைகளில் இருந்து பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே யிருக்கின்றன. இப்படி எல்லாப் பிரச்சினைகளையும் அணுகும் அடுப்பு இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

ஆக, இன்று இருக்கும் மாற்று அடுப்புகள் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் முழு உத்தரவாதம் அளிப்பதில்லை. இந்த மாற்று அடுப்புகள் எல்லாம் தீர்வை நோக்கிச் செல்லும் பயணம்தான். அவையே இறுதி இலக்கு அல்ல.
 
சென்ற ஆண்டு ‘மல்டி டோஸ் டைக்ளோஃபினாக்' இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், இனி அது ‘சிங்கிள் டோஸ் குப்பியாக 3 மில்லி லிட்டர்' மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், உங்கள் புத்தகத்தின் ஓரிடத்தில் 0.0004 மைக்ரோகிராம் டைக்ளோஃபினாக்கூட பாறுகளை (பிணந்தின்னிக் கழுகு) கொல்லும் ஆபத்து உள்ளவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மருந்தை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமில்லையா?

மத்திய அரசு விதித்த தடை வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கு எதிராக இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். கால்நடைகளுக்கு 'டைக்ளோஃபினாக்' மருந்து பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டாலும், அது மனிதப் பயன்பாட்டுக்காகத் தொடர்ந்து விற்பனை செய்யப்படத்தான் போகிறது.

பாறுகள் இறந்த உயிரினங்களின் சடலங்களையே உணவாகக் கொள்ளக்கூடியவை. பார்ஸி மக்கள், இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்காமலும் எரிக்காமலும் பாறுகளுக்கு ஒப்படைத்துவிடுவார்கள். அவை அந்தச் சடலங்களைத் தின்கின்றன.

கால்நடைகளுக்கு 'டைக்ளோஃபினாக்' பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால், இறந்த கால்நடைகளை உணவாகக் கொண்டு, பாறுகள் இறந்துபோகாமல் இருக்கலாம். ஆனால், பார்ஸிக்களின் வழக்கப்படி சடலங்களைப் பாறுகள் தின்னும்போது, அவை இறப்பதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், இறப்பதற்கு முன்பு ‘டைக்ளோஃபினாக்'கைக் கொண்ட வலிநிவாரணிகளை ஒருவர் எடுத்துக்கொண்டிருக்கலாம். அவருடைய சடலத்தைத் தின்னும் பாறுகளுக்கு, அந்த ‘டைக்ளோஃபினாக்' பரவி அவை உயிரிழக்க நேரிடலாம்.

இப்படிப் பல பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன. அவற்றை எப்படிக் கையாளப் போகிறோம்?
 
உங்களுடைய புத்தகத்தில் ‘இந்தியா, சூழலியல் விடுதலை அடைய வேண்டும்' என்று எழுதியிருக்கிறீர்கள். நாடு இன்றிருக்கும் நிலையில் அது சாத்தியம்தானா?

காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு 200 ஆண்டுகள் போராடியிருக்கிறோம். அதன் மூலம் எப்படிப் போராட வேண்டும் என்ற பயிற்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் போராட வேண்டியதுதான். பசுமை சுதந்திரம் நம் காலத்தின் கட்டாயம்! 

 

பெட்டிச் செய்தி:

 

 ‘எலிமென்டல் இந்தியா’ என்ன சொல்கிறது?


இயற்கை விவசாயம், தண்ணீர் பிரச்சினை, காற்று மாசுபாடு, பாறுகளின் (பிணந்தின்னிக் கழுகு) அழிவு மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் என ஐந்து தலைப்புகளில் இவருடைய கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் எனப் பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம். மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்கின்றனவோ இல்லையோ, இந்தியா இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. எனவே, ஒவ்வொரு பூதத்துக்கும் பொருத்தமாக ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினையை எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி ஆய்வு செய்திருக்கிறார் மீரா சுப்ரமணியன்.

சுமார் 2,500 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்ட இந்திய வரலாற்றில், இதுவரை 90 முறை பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது; மண்ணில் இருக்கும் ஆக்டினோபாக்டீரியா, காசநோய்க்கான முதல் ‘ஆன்டிபயாடிக்' ஆக இருந்தது; ‘பிரஷர் குக்கர்' அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் முதல் பத்து லட்சம் குக்கர்களை இந்தியாவில் விற்பதற்கே 15 வருடங்கள் ஆனது என்பன போன்ற வரலாற்று, மருத்துவ, கலாசாரத் தகவல்கள் புத்தகமெங்கும் நிறைந்திருக்கின்றன.

புத்தகத்தின் ஓரிடத்தில் மீரா இப்படி எழுதுகிறார்: “இந்தியா மிகவும் இரைச்சலான தேசமாக மாறிவருகிறது. ஆனால் அதன் காடுகளை அமைதியாக நிறைத்துவருகிறது”. அந்தக் கூற்று முற்றிலும் உண்மைதான். 

நன்றி: தி இந்து (உயிர் மூச்சு)

No comments:

Post a Comment