Wednesday, June 29, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - III

இந்தியாவில் சாதிகள்


ந.வினோத் குமார்

'சாதியை யார் தோற்றுவித்தது?' என்று கேட்டால் பலர், 'அது தெய்வம் தந்தது!' என்று சொல்லலாம். 'அது மனிதன் உருவாக்கியது' என்று சொன்னால், அது உண்மை என்றபோதும் அதனை மனிதர்கள் ஏற்றுக்கொள்ள முன் வரமாட்டார்கள். அதுதான் சாதியின் பலம்!

சாதி என்பது மனித நாகரிகத்தின் ஒரு பகுதியா என்று கேட்டால் அதுதான் இல்லை. அம்பேத்கர் அதற்குச் சரியான ஒரு விளக்கம் தருகிறார் இப்படி:

"மனித நாகரிகம் குறித்து உள்ளூர் அளவில், தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் பல கண்காட்சியைப் பார்த்திருக்கலாம். ஆனால் மனிதனால் நிறுவனமயமாக்கப்பட்ட விஷயத்தை நீங்கள் கண்காட்சியாகப் பார்த்திருக்க முடியாது. அத்தகைய ஒரு விஷயம் சாதி!"

அந்தக் கண்காட்சியை இந்தியாவில் நாம் தினந்தோறும் பார்க்க முடியும் என்பது எவ்வளவு கொடூரம்!

இந்தியாவில், ஏன் உலக அளவில் கூட சாதிகளைப் பற்றி அம்பேத்கரைப் போல மிக ஆழமாக ஆராய்ந்து பேசியவர் எவருமில்லை என்று சொல்லலாம். அமெரிக்காவின் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் 1916-ம் ஆண்டு, மே 9-ம் தேதி 'Castes in India: Their Mechanism, Genesis and Development' என்ற தலைப்பில் இந்தியாவில் சாதிகளின் அமைப்பு, தோற்றும் மற்றும் அவற்றின் வளர்ச்சி ஆகியவை குறித்து ஒரு கட்டுரையை வாசிக்கிறார். பின்னாளில் அம்பேத்கர் எழுதிய முதல் புத்தகமாகவும் இது வெளியானது. அம்பேத்கர் எழுதிய முதல் புத்தகத்துக்கு இந்த ஆண்டுடன் நூறு வயதாகிறது!

நூறு வருடங்கள் ஆகியும் இன்னும் அந்தப் புத்தகம் பலராலும் வாசிக்கப்படுகிறது என்றால், அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது?


'இந்தியாவில் சாதிகள் மிகவும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம் அகமண முறையே' என்கிறது இந்தப் புத்தகம். அகமண முறை இந்தியாவில் தோன்றவில்லை. தொடக்க காலங்களில் ஒரு குழு மக்கள், இன்னொரு குழு மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்தது.

'இப்படி ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவுடன் திருமண உறவு வைத்துக்கொண்டால் நம் குழுவின் பலம் குறைந்து போகுமே' என்று சிலர் எண்ணியதன் விளைவு குழுவுக்குள்ளேயே திருமண உறவு வைத்துக்கொள்ளும் அகமண முறை தோன்றியது. இந்த அகமண முறை நீடித்திருக்க வேண்டுமானால், அந்தக் குழுவுக்குள் ஆண் பெண் பாலின எண்ணிக்கை சமநிலையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக 100 பேர் கொண்ட ஒரு குழுவுக்குள் ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அந்தக் குழுவின் எண்ணிக்கை 99 ஆகிவிடும். அப்போது ஆண் இறந்தால் ஒரு பெண் கூடுதலாகவும், பெண் இறந்தால் ஒரு ஆண் கூடுதலாகவும் அந்தக் குழுவில் இருப்பர்.

இப்போது அந்தக் குழுவின் எண்ணிக்கையை சமநிலையில் வைத்திருக்க வேண்டுமானால், அந்த 'கூடுதல் ஆண்' (சர்ப்ளஸ் மேன்), 'கூடுதல் பெண்' (சர்ப்ளஸ் வுமன்) ஆகியோருக்குச் சரியான நீதி வழங்க வேண்டும். இவர்களில் 'கூடுதல் பெண்'ணை அவளின் கணவன் இறந்தவுடனே, அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றுவிடலாம். ஏனெனில், அவளை உயிருடன் விட்டால், அந்தக் குழுவிலிருந்து வெளியேறி வேறு குழுவுக்குச் சென்று திருமணம் செய்துகொள்வாள். இதனால் அந்தக் குழுவில் அகமண முறை உடைந்து எண்ணிக்கை குறைவாகும் என்ற அச்சத்தினால்தான் 'சதி' போன்ற வழக்கங்கள் தோன்றின.

அல்லது அவளுக்குக் கட்டாய விதவைக்கோலத்தை வழங்கலாம். அதனால் அவள் அந்தக் குழுவுக்குள்ளேயே இன்னொரு ஆணை மறுமணம் செய்துகொள்ளவும் தடுக்கப்படும். என் இப்படி? காரணம், இவள் பெண்ணாயிற்றே! காலம் காலமாக ஆண் எவ்வாறு தன் ஆதிக்கத்தை பெண் மீது கொண்டு வருகிறான் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

தற்போது அந்த 'கூடுதல் ஆண்' என்ன ஆவான்? அவனுக்குத் தானே மனமுவந்து பிரம்மச்சர்யம் ஏற்றுக்கொள்கிற வாய்ப்பு உண்டு. ஆனால் பல ஆண்கள் அதனை ஏற்பதில்லை. எனவே, அவனுக்குப் பருவ வயதை எட்டாத ஒரு பெண்ணை மண முடித்து வைக்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் எவ்வாறு தோன்றியது என்பதையும் நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அகமண முறை குறித்துப் பேசும் அம்பேத்கர், 'இவையெல்லாம் ஏன் தோன்றின என்பதற்கு எந்த விதமான அறிவியல்பூர்வமான விளக்கங்களும் இல்லை. ஆனால் இவை ஏன் போற்றப்பட வேண்டும் என்பதற்கான தத்துவங்கள் மட்டும் நிறைய உள்ளன. என்னுடைய கருத்து என்னவென்றால், அவை போற்றப்படுவதற்குக் காரணம் அவை பின்பற்றப்படுவதுதான். காலம்தோறும் 'இயக்கம்'தான் முக்கியமாக இருந்து வந்திருக்கிறது. அவற்றை நியாயப்படுத்தும் தத்துவங்கள் எல்லாம் பின்னாட்களில்தான் தோன்றின. அவை பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே அவை போற்றப்படுகின்றன' என்கிறார். மேலும், 'வர்க்கமும் சாதியும் ஒன்றுக்கொன்று அண்டை வீட்டார் போல இருப்பவை' என்கிறார்.

இந்த அகமண முறை எல்லாம் முதலில் பிராமணர்கள் மத்தியில் தோன்றியதுதான். தாங்களும் வெளியே செல்லாமல், பிறரும் தங்கள் குழுவுக்குள் வராமல் கதவடைத்துக்கொண்டவர்களும் பிராமணர்கள்தான். இவர்களைப் பார்த்து மற்ற குழுவினரும், சாதியினரும் 'போலச் செய்தார்கள்' என்று தன் ஆய்வுகளின் வழியே நிறுவுகிறார் அம்பேத்கர்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் இப்படிச் சொல்கிறார் அவர்: "இந்தியாவில் சாதிகள் இருக்கும் வரை, எந்த ஒரு இந்துவும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ள மாட்டான். அவன் இந்த நாட்டை விட்டு இதர நாடுகளுக்குச் சென்றால் அப்போது இந்திய சாதிகள் என்பது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுக்கும்",

'என்.ஆர்.ஐ. மணமகன்/ள் வேண்டும்' என்பது கூட அதன் வெளிப்பாடுதானோ?

புத்தக அட்டைப் படம் நன்றி: அமேசான் இந்தியா இணைய‌தளம்

 (அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் மூன்றாவது பதிவு இது)

No comments:

Post a Comment