Thursday, July 28, 2016

DR.B.R.AMBEDKAR 125 BIRTH ANNIVERSARY SERIES - IV

வந்தார் மூக்நாயக்... வாழ வைத்தார்!


ந.வினோத் குமார்
 
அம்பேத்கருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய அரசியலமைப்பைக் கட்டியெழுப்பியவர்... சாதிகளுக்குச் சுளுக்கெடுத்தவர்... அதில் சிக்கியிருந்த பலரை விடுவித்தவர்... இந்து மதத்துக்கு வேப்பிலை அடித்தவர்... என அவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், இந்தச் சாதனைகளை எல்லாம் செய்வதற்கு ஆரம்பகாலங்களில் அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது எது என்று பார்த்தால், அது 'மஹர்' இன மக்களுக்காக அவர் கொடுத்த உழைப்புதான்! 'மூக்நாயக்' (குரலற்றவர்களின் தலைவன்) என்று தான் ஆரம்பித்த முதல் பத்திரிகை கூட அவர்களுக்காகத்தான்!

மகாராஷ்டிர மாநிலத்தில் அடித்தள மக்களுக்கும் அடுத்து மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்கள் மஹர் இன மக்கள். 'எங்கெல்லாம் கிராமங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மஹர் இனத்தவர் இருப்பார்கள்' என்பது அக்காலத்தில் மராட்டியப் பகுதிகளில் புழங்கி வந்த அவமதிப்பு மிகுந்த ஒரு பழமொழி இது.

இந்த நிலை, ஆங்கிலேயேர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு மாறியது. மஹர் இன மக்களுக்கு ஆங்கிலேயர்களின் வருகை என்பது தோல்வியாக இல்லாமல், தாங்கள் விடுதலை அடைவதற்கான ஒரு வாய்ப்பாகவே அமைந்தது. காரணம், ஆங்கிலேயர்கள் தங்களின் போர்ப்படைகளுக்கு, பெருமளவில் மஹர் இன மக்களைச் சேர்த்துக்கொண்டார்கள். அதன் பிறகு, 'எங்கெல்லாம் ஒரு மஹர் இனத்தவர் இருக்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு மகாராஷ்டிரம் இருக்கும்' என்ற புதுமொழியை மஹர் இனத்தவர் பெருமையுடன் சொல்லிக்கொண்டார்கள்.

ஆங்கிலேயர்களின் வருகை, மஹர் இன மக்களைக் கைதூக்கிவிட்டது என்று சொன்னால், அவர்களைத் தலைநிமிரச் செய்த பெருமை முழுக்க முழுக்க அம்பேத்கரையே சாரும். மஹர் இன மக்களுக்காக அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறது 'அம்பேத்கர்ஸ் வேர்ல்ட்' எனும் புத்தகம். 'நவயானா' பதிப்பகத்தின் மறுபதிப்பான இந்தப் புத்தகம் 2013-ம் ஆண்டு வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த அம்பேத்கரிய‌ அறிஞர் இலியனார் செல்லியட் எனும் பெண்மணிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

1962-ம் ஆண்டு அம்பேத்கர் குறித்தும் மஹர் இன எழுச்சி குறித்தும், 'அம்பேத்கர் மற்றும் தீண்டாமை எதிர்ப்பு இயக்கம்' எனும் தலைப்பில் இரண்டு வருடங்கள் முனைவர் ஆய்வுக்காக இலியனார், இந்தியாவுக்கு வந்தார். அந்த ஆய்வின் பலன்தான் இந்தப் புத்தகம். அதன் பின்னர் 1969-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் கார்ல்டன் கல்லூரியில் சுமார் 30 வருடங்கள் பேராசிரியராகப் பணியாற்றினார். அம்பேத்கரின் எழுத்துகள் இந்தியாவைத் தாண்டாத காலம் அது. அப்போது அவரின் எழுத்துகளை தன் ஆய்வுகள் மூலம் உலகம் முழுக்க எடுத்துச் சென்றதில் இலியனார் செல்லியட்டுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தப் பெருமைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்தப் பெண்மணி இந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி காலமானார்.

இந்தப் புத்தகத்தில், மஹர் இன மக்கள் அரசியல் தளத்திலும், சமூகத் தளத்திலும், சமய ரீதியான நடவடிக்கைகளிலும் மேம்பட்ட நிலைக்கு முன்னேற அம்பேத்கர் எவ்வாறு உந்து சக்தியாக இருந்தார் என்பதை ஆழமாக அலசுகிறார் இலியனார்.

எனினும், மஹர் இனத்துக்காக அம்பேத்கர் ஆற்றிய முக்கியப் பணிகளில் ஒன்று, அவர்களை இந்து மதத்திலிருந்து வெளியேற்றி, புத்த மதத்துக்கு மதம் மாற்றியதுதான். 'நான் நிச்சயமாக இந்துவாக இறக்க மாட்டேன்' என்று அம்பேத்கர் சபதமேற்ற வருடம் 1935. சுமார் இருபது வருடங்கள் கழித்து 1956-ல் தான் அவரால் புத்த மதத்துக்கு மதம் மாற முடிந்தது. ஆக, அந்த இருபது வருடங்கள் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? இந்து, இஸ்லாம், சீக்கியம், ஜைனம், கிறிஸ்துவம், தேராவாத பவுத்தம் எனப் பல சமயங்களைப் பற்றி ஆராய்ந்தார். இறுதியாக அவர் தேர்வு செய்தது பவுத்தம்.

தனது முடிவு, அதாவது, இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் இணைவது குறித்து 1936-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டமொன்றில், வெளிப்படுத்துகிறார். தன்னோடு, இதர மஹர் இன மக்களும் மதம் மாற வேண்டிய கட்டாயம் குறித்து அவர் உரையாற்றுகிறார். அந்த உரை மிகவும் கவித்துவமான உரையாக இருந்தது. 'முக்தி கோன் பதே?' (முக்தி அடைவதற்கான வழி என்ன?) என்ற தலைப்பில், மராத்தியில் எழுதப்பட்ட அந்த உரையை, இந்தப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார் இலியனார். அந்த வரிகள் இவை:

மதம் என்பது மனிதனுக்காக. மனிதன் மதத்துக்காகப் பிறக்கவில்லை.

நீங்கள் சுயமரியாதையுடன் இருக்க, மதம் மாறுங்கள்.
ஒத்துழைப்பு நல்கும் சமுதாயத்தை உருவாக்க, மதம் மாறுங்கள்.
அதிகாரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
சமத்துவம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
சுதந்திரம் கிடைக்க, மதம் மாறுங்கள்.
மகிழ்ச்சி தரும் உலகம் படைக்க, மதம் மாறுங்கள்.

உங்கள் மனிதத்தை மதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்கள் தாகத்துக்கு நீர் தராத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்கள் கல்விக்குத் தடையாக இருக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களுக்கு நல்ல பணி கிடைப்பதைத் தடுக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
உங்களை ஒவ்வொரு விஷயத்திலும் அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?

மனிதர்களுக்கிடையில் மனிதநேயத்தைத் தடுக்கும் ஒரு மதம், மதமல்ல. அபராதம்.
மனிதனின் சுயமரியாதையைப் பாவமாகக் கருதும் ஒரு மதம், மதமல்ல. நோய்.
செத்த மிருகத்தைத் தொடலாம் ஆனால் மனிதனைத் தொடத் தடை விதிக்கும் ஒரு மதம், மதமல்ல. பைத்திய நிலை.
ஒரு சாதி மட்டும் கல்வி கற்கக் கூடாது, பொருள் சேர்க்கக் கூடாது, ஆயுதம் ஏந்தக் கூடாது என்று கூறும் ஒரு மதம், மதமல்ல. மனித வாழ்வை கேலிக்குட்படுத்துவது.
கல்லாதவர் கல்லாதவராகவும், ஏழை ஏழையாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று போதிக்கும் ஒரு மதம், மதமல்ல. தண்டனை.

சொல்லாதே: மனிதர்களை விட மிருகங்களை மதிப்பவர்களை, பார்ப்பனர்களைக் கடவுளாக மதிப்பவர்களை, பக்திமான்கள் என்று.
சொல்லாதே: எறும்புகளுக்குச் சர்க்கரையையும், மனிதர்களுக்குத் தாகத்தையும் வழங்குபவர்கள், பக்திமான்கள் என்று.
சொல்லாதே: தன்னுடைய மதத்திலிருந்து வேறு மதத்துக்கு மாறுபவர்களை, சமுதாயத்தை வெறுப்பவர்கள் என்று.

                                                                                      (தமிழில்: ந.வினோத் குமார்)

என்ன சொல்ல? நாடு தன்னிடமிருந்த ஒரு நல்ல கவிஞனை வெளிப்படுத்திக் கொள்ள மறந்துவிட்டது. மறுத்துவிட்டது என்பதும் சரிதான்!

(அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, இந்த ஆண்டு முழுக்க அம்பேத்கர் படைப்புகள், அம்பேத்கரைக் குறித்த படைப்புகள் ஆகியவை பற்றிய அறிமுகங்கள் இங்கு தொடர்ந்து பதிவேற்றப்படும். அதில் நான்காவது பதிவு இது)
 

1 comment: