Thursday, September 15, 2016

அகதா கொடுத்த விஷம்

ந.வினோத் குமார் 

பதிப்பிக்கப்பட்ட தேதி: 11 செப்டம்பர் 2016

பொதுவாக மனிதர்கள், கதை அல்லது நாவல் சார்ந்த தங்களின் வாசிப்பை சுவாரஸ்யத்தின் அடிப்படையிலேயே அமைத்துக்கொள்கிறார்கள். பிறகு வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட, சுவாரஸ்யம் என்ற அடிப்படையிலிருந்து ஆழமான வாசிப்புக்கு நகர்கிறார்கள். பெரும்பாலும் அந்த சுவாரஸ்யமான வாசிப்பை, ‘க்ரைம்’ கதைகளே தருகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படியான க்ரைம் நாவல்கள்தான் பெருந்திரளான மக்களை வாசிப்பை நோக்கி இழுத்து வந்தன. 

'க்ரைம்' நாவல் தளத்திலும்கூட ஆரம்பத்தில், ஆண் எழுத்தாளர்களே அதிகம் எழுதிவந்தார்கள். ஆனால், இந்தத் தளத்தில் இன்றைய காலத்தில் இந்தியா உட்பட பல நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் எழுதி வந்தாலும், அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அகதா கிறிஸ்டி. 1890-ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் வாழ்நாளில் மொத்தம் 66 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

அவர் ஒவ்வொரு கதையிலும் ஒரு குற்றத்தைத் தோற்றுவிக்கிறார். அந்தக் குற்றத்தை யார் செய்தது என்று நாம் அறிவதற்குப் பல இடங்களில் பல குறிப்புகளைக் கொடுத்துச் செல்வார். ‘இவர்தான் குற்றவாளி’ என்று வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கட்டம்கட்டும்போது, வாசகர்கள் எதிர்பார்க்கவே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ‘இவரே குற்றவாளி' என்று சொல்லி நம் முன் நிறுத்துவார். அந்த ஆச்சரியத்துடன் நாம் மீண்டும் அந்தக் கதையைப் படிக்கும்போது, அவர் தந்து சென்ற குறிப்புகள் எல்லாம் உண்மையில், அந்த உண்மையான குற்றவாளியை நோக்கியே இருப்பது நமக்குப் புரியும்.

இன்னும் சில கதைகளில் குற்றவாளி இவர்தான் என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அவர் அந்தக் குற்றத்தை எப்படிச் செய்தார் எனும் புதிரை அவரே அவிழ்க்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இந்தச் சிறப்புகள் எல்லாம் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியச் சிறப்பம்சம், ஒரு குற்றத்தைச் செய்வதற்கு அவர் படைத்த‌ கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான ஆயுதத்தைத் தேர்வு செய்கின்றன என்பது. இவரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேர்வுசெய்தது விஷம்!

விஷம் தோய்ந்த அந்தக் கதைகள் மற்றும் அந்தக் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷம் குறித்து நமக்கு அறிமுகம் செய்கிறது ‘ஏ இஸ் ஃபார் ஆர்செனிக்’ எனும் புத்தகம். அகதா கிறிஸ்டியின் ரசிகரும் வேதியியலாளருமான காத்ரின் ஹர்குப் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ப்ளூம்ஸ்பெர்ரி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது.

 
அகதா தன் கதைகளில் 14 விதமான விஷங்களைப் பயன்படுத்துகிறார். அவர் காலத்தில் சமூகத்தில் புழக்கத்திலிருந்த பெருமளவு விஷ வகைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவின. அப்படியான விஷ வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்ட விஷ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன் நாவல்களைப் படைத்திருந்தார்.

தன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் விஷம், அது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிவியல்பூர்வமான விவரங்களைத் தன் கதைகளில் விளக்கமாகச் சொல்லியிருப்பார் அகதா. இந்த அம்சம், அவரின் நாவல் ஒன்று ‘பார்மாசூட்டிக்கல் ஜர்னல் அண்ட் பார்மாசிஸ்ட்’ எனும் மருந்தியல் இதழ் ஒன்றால் மதிப்பீடு செய்யப்படும் அளவுக்கு அகதாவை உயர்த்தியது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நாவல், ‘தி மிஸ்டீரியஸ் அஃபயர்ஸ் அட் ஸ்டைல்ஸ்’ எனும் அவரின் முதல் நாவலாகும். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?

ஏனென்றால், அவர் அடிப்படையில் ஒரு செவிலியர். முதலாம் உலகப் போரில் செவிலித் தொண்டு புரிந்தவர். அப்போது அவர் மருந்துகளைக் கையாள வேண்டியிருந்தது. அந்த ஆர்வம், மருந்தியல் நிபுணர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் அவரை மாணவியாகச் சேர உந்தித் தள்ளியது. அந்த நாட்களில் அவர் பல விதமான விஷ மருந்துகளைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவர் கதைகள் எழுதுவதற்குக் கைகொடுத்தன.

இவரின் நாவல்களைப் படித்துவிட்டு, பலர் அந்த நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷத்தை வாங்கிக் குற்றங்களைப் புரிந்தனர் என்பது இவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல. மாறாக இவரின் ‘தி பேல் ஹார்ஸ்’ என்ற நாவலைப் படித்ததன் காரணமாக, மருத்துவமனை செவிலியர்கள் சிலர் ‘தாலியம்’ எனும் விஷத்தின் தாக்கத்தை உணர்ந்து, அந்த விஷத்தை உட்கொண்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இப்படிப் பல விஷயங்களை அலசும் இந்தப் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட வகை விஷம் எப்படித் தோன்றியது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் மருத்துவக் குணங்கள் என்ன, அந்த விஷத்துக்கான விஷமுறி மருந்து என்ன, அந்த விஷம் தொடர்பான குற்ற வழக்குகள் என்ன, அந்த வழக்குகள் எப்படி அகதாவைக் கதை எழுதத் தூண்டின என்பது உள்ளிட்ட தகவல்களையும் தருகிறார் நூலாசிரியர்.

நச்சுயியல் துறையை அறிமுகப்படுத்தியவர் என்று அறியப்படும் பாராசெல்சஸ், ‘எல்லாவற்றிலும் விஷம் இருக்கிறது. விஷம் இல்லாத ஒரு விஷயமும் இல்லை. நாம் எடுத்துக்கொள்ளும் அளவுதான், ஒரு விஷயத்தை விஷமாகவோ அல்லது நிவாரணமாகவோ மாற்றுகிறது’ என்கிறார். அதைப் புரிந்துகொண்ட அகதா, தன் படைப்புகளின் வழியே நம் முன் வைப்பது ரசாயன விஷத்தை மட்டுமல்ல. மனித மனத்தின் விஷத்தையும் சேர்த்துத்தான். அதுவே அவரது எழுத்துக்களை வெறும் சுவாரஸ்யம் என்பதாகச் சுருக்கிவிடாமல் படைப்பின் தளத்துக்கு உயர்த்துகிறது. 

நன்றி: தி இந்து (கலை ஞாயிறு)

No comments:

Post a Comment