Saturday, August 31, 2019

அண்ணலின் அரசியல் பிரவேச நூற்றாண்டை நினைவு கொள்வதெப்படி?

ந.வினோத் குமார்

அது 2012. உத்தர பிரதேசத்தைச் சார்ந்த சமாஜ்வாதி கட்சி 15-வது நாடாளுமன்றத் தேர்தலில் 22 உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்பியது. அதில் 10 பேர் தலித்துகள். அந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவைக் கொண்டு வர முயற்சித்தது. அரசுப் பணிகளில் தலித் மற்றும் பழங்குடிகளுக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பான மசோதா அது. அன்றை மத்திய பணியாளர்,  பொதுக் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த வே.நாராயணசாமி, அந்த மசோதாவை அறிமுகப்படுத்த எழுந்தார்.

அப்போது சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த யஷ்வீர் சிங் எனும் தலித் உறுப்பினர் அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஓடிவந்து நாராயணசாமியின் கையிலிருந்த மசோதாவைக் கிழித்து எறிந்தார். இதை அவர் தானாக முன் வந்து செய்யவில்லை. தன் கட்சி மேலிடம் சொல்லிக் கொடுத்தபடி, இத்தகைய செயலை யஷ்வீர் செய்தார். 

தனித்தொகுதியில் (ரிசர்வ்) போட்டியிட்டாலும், பெரும்பாண்மையாக இருக்கிற சாதி இந்துக்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெறுகிற நிலை இருக்கும்போது, தலித் உறுப்பினர்களால் தங்கள் சமூகத்துக்குத் தங்களால் இயன்றவற்றைச் சுதந்திரமாகச் செய்ய முடியாது.  காரணம், அவர்கள் சாந்திருக்கிற கட்சி அவர்களை அவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காது, சாதி இந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருப்பார் என்று சொல்லி சட்ட மேதை அம்பேத்கர்  ‘இரட்டை வாக்குரிமை’  வேண்டும் என்று போராடினார். அந்தப் போராட்டத்துக்கான விதை 1919-ல் விழுந்தது.

தீண்டத்தகாத மக்களுக்கென்று அரசியலில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும், அனைவருக்கும் வாக்குரிமை உள்ளிட்ட சிவில் உரிமைகளுக்காகவும் 1919-ல் சவுத்பரோ ஆணையத்தின் முன்பு தன்னுடைய கோரிக்கைகளை அம்பேத்கர் வைத்தார். அதுதான் அரசியல் ரீதியாக அம்பேத்கர் மேற்கொண்ட முதல் போராட்டம். அண்ணல் மேற்கொண்ட அந்த அரசியல் நிகழ்வுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு..!

ஆனால் அதுகுறித்துப் பரவலாக யாருக்கும் தெரியவில்லை என்பது ஒரு சோகமென்றால், நூற்றாண்டிலும் அவர் கண்ட கனவு பலிக்கவில்லை என்பது இன்னொரு சோகம்.
ஒரு ’பனியா’வின் ஒப்பந்தம்..!
இன்றைக்கு உள்ள தனித்தொகுதிகள் எனும் உரிமைதான் அம்பேத்கரின் மிகப்பெரிய சாதனை என்று  தலித் மக்கள் உள்ளிட்ட பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று உள்ள ‘தனித் தொகுதிகள்’ எனும் வடிவத்தை அடைவதற்குப் பின் நீண்ட வரலாறு இருக்கிறது. அம்பேத்கரை நாயகனாகச் சித்தரித்து எழுதப்பட வேண்டிய அந்த வரலாறு, காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகிய இரண்டு துரோகிகளையும்  இணைத்தே எழுதப்பட வேண்டியிருப்பது மாபெரும் சாபக்கேடு.
அண்ணல் கண்ட கனவு என்ன, அதை மேற்சொன்ன இரண்டு பேரும் எப்படிச் சிதைத்தார்கள் எனும் வரலாற்றைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது ‘அம்பேத்கர், காந்தி அண்ட் பட்டேல்: தி மேக்கிங் ஆஃப் இந்தியாஸ் எலக்டோரல் சிஸ்டம்’ எனும் புத்தகம். ராஜா சேகர் வுந்துரு எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், 2017-ல் ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த அன்றைய இந்தியாவின் அரசியலமைப்பு ஒவ்வொரு 10 வருடத்துக்கும் மாறுதலுக்கு உள்ளாகி வந்தது. 1927-ல் இந்தியர்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வர சைமன் கமிஷனை நியமித்தது பிரிட்டிஷ் அரசு. இந்திய மக்களின் கருத்துகளை அறிய அந்த கமிஷன் விரும்பியது.
இந்த கமிஷனுக்கு அன்றைய காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் ‘பகிஷ்கிரித் ஹிதகரனி சபா’வின் சார்பாக அம்பேத்கரும், இஸ்லாமியர்களின் சார்பாக எம்.ஏ.ஜின்னாவும் அந்த கமிஷனிடம் தங்களின் கோரிக்கையை முன் வைத்தார்கள். இந்தக் காரணத்துக்காக அவர்கள் இருவரையும் ‘துரோகிகள்’ என்று சாடியது, காங்கிரஸ் கட்சி.
அந்த கமிஷன் தன்னுடைய அறிக்கையை 1930-ம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட்டது. அதில் தலித்துகள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குத் தனித் தொகுதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. தலித்துகள் ஒரு தனியான அரசியல் குழுவாக அங்கீகரிக்கப்பட்டது அதுதான் முதல் முறை. ஆனால் ஒரு மாகாண கவர்னரின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே தலித் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அந்த அறிக்கை சொன்னது. இதற்கு அம்பேத்கர் எதிர்ப்புத் தெரிவித்தார்.   
தலித்துகள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டுமென்றால், அவர்களுக்குத் தனித்தொகுதி வழங்கப்பட வேண்டும் என்று அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லண்டனில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். அது தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருந்த போது, இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் (1931) ‘தலித்துகளுக்குத் தனி பிரதிநிதித்துவம் தேவையில்லை’ என்று தாயம் உருட்ட ஆரம்பித்தார் காந்தி. பிறகு சில காலம் கழித்து மனம் மாறி, ‘தலித்துகளுக்குத் தனி பிரதிநிதித்துவம் தேவைதான். ஆனால் அவர்களுக்கென தனியாக தொகுதிகளை ஒதுக்கக் கூடாது’ என்று பரமபதம் விளையாடத் தொடங்கினார் அவர். 
ஆனால் அண்ணல் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றார். அதனால் காந்தி அவரை வழிக்குக் கொண்டு  வர பட்டினிப் போராட்ட நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்தின் விளைவுதான் ‘பூனா ஒப்பந்தம்’. எரவாடா சிறையில் இருக்கும்போது காந்தி அந்த நாடகத்தை அரங்கேற்றினார். அப்போது தன்னுடன் சிறைவாசம் இருந்த வல்லபாய் பட்டேலிடம், ‘தீண்டத்தகாத போக்கிரிகளுக்குத் தனித் தொகுதி கொடுத்தால், அவர்கள் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கொண்டு இந்துக்களைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்’ என்றாராம். வெளியில் ‘ஹரிஜன்’ (கடவுளின் குழந்தைகள்) என்று தலித் மக்களை அழைத்துவிட்டு, தனிமையில் ‘ஹூலிகன்’ (hooligan) என்று அழைத்த நடிகர் அவர்..! தீண்டத்தகாதவர்களைக் கொலைகாரர்களாகப் பார்க்க அவருக்கு எப்படி மனம் வந்தது..?
ஏன் 25 சதவீதம்..?
அம்பேத்கர் முன்மொழிந்த தனித் தொகுதி என்பது இன்றைக்கு இருக்கும் தனித் தொகுதியிலிருந்து மாறுபட்டது. அவர் முன் வைத்த தனித் தொகுதியில், தலித்துகள் மட்டுமே வாக்களித்து தங்களிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். 
இதை எதிர்த்த காந்தியின் பட்டினி நாடகத்துக்குப் பிறகு, பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் 1937 மற்றும் 1946-ம் ஆண்டுகளில், இரண்டு நிலையாகத் தேர்தல் நடைபெற்றது. முதல் நிலையில், தலித் மக்களிடையே இருந்து நான்கு பேர், தலித் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு அந்த நான்கு பேரும் வேறு சமூகத்தினருடன் போட்டியிட வேண்டும். இந்த இரண்டு அடுக்குத் தேர்தல் முறை நேர விரயமாகவும், செலவு மிக்கதாகவும் இருந்தது. தவிர, இந்த வகையான தேர்தல் முறையில், வரி செலுத்துபவர்களும் நிலச்சுவான்தார்களும் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. இந்தத் தேர்தல்களில், முதல் நிலையில் தலித் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும், இரண்டாம் நிலையில் பொது சமூகத்தினருடன் போட்டி போடும்போது வெற்றி பெற முடியவில்லை. 
அம்பேத்கர் பயந்தது சரியாகிப் போனது. இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் 1933-லேயே பூனா ஒப்பந்தத்தில் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வர முயன்றார். அதாவது, தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவதற்குப் பதிலாக, ஒரே தேர்தலில் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய ஒரு யோசனையை முன்மொழிந்தார். அந்த வகையான தேர்தலில், இரண்டு வாக்குப் பெட்டிகள் இருக்கும். ஒன்று, தலித்துகளுக்கு மட்டுமே ஆனது. இன்னொன்று, பொதுப் பிரிவினருக்கானது. வாக்கு எண்ணிக்கையின்போது, முதலில் தலித் சமூகத்தினரின் வாக்குகள் எண்ணப்படும். அதில், யாரெல்லாம் (நான்கு பேரில்) தன் சமூகத்திடமிருந்து 25 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்களே முதல் கட்ட வெற்றியாளர்களாகக் கருதப்படுவர். இரண்டாவதாக, பொதுப் பிரிவினரின் பெட்டி எண்ணப்படும். அதில் வரும் சதவீதத்துடன் ஏற்கெனவே பெற்ற 25 சதவீதத்தையும் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்போது யார் அதிக வாக்கு சதவீதத்துடன் உள்ளாரோ, அவரே இறுதி வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த முறையை ‘குவாலிஃபைட் ஜாயிண்ட் எலக்டோரேட்ஸ்’ என்று அழைத்தார் அம்பேத்கர். ‘இரட்டை உறுப்பினர் தொகுதி’யைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இது. ஆனால் இதற்கும் காந்தி எதிர்ப்புத் தெரிவித்தார்.
மேலோட்டமாகப் பார்த்தால் காந்தி தலித்துகளுக்கு நல்லதுதானே செய்திருக்கிறார், எதற்காக தலித்துகள் 25 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பு.  இங்குதான் அம்பேத்கரின் ஆளுமை புலப்படுகிறது. அந்த நான்கு பேரில் ஒருவர் 40 சதவீதமும், இன்னொருவர் 30 சதவீதமும், மீதமுள்ள இரண்டு பேர் தலா 15 சதவீதமும் என வாக்குகளைப் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவர்களில், 25 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருப்பது இருவர். இதில் இரண்டாமவர், முன்னவரைக் காட்டிலும் குறைந்த வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும், தேர்தல் விதி காரணமாக அவர் இரண்டாம் நிலை தேர்தலுக்குச் சென்றுவிடுவார். ஒருவேளை அவர் திறமை அற்றவராக, எடுப்பார் கை பிள்ளையாக இருக்கிறார் என்று தெரிந்தால், பொதுப் பிரிவில் உள்ள பெரும்பாண்மையான இந்துக்கள் அவருக்கே வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்துவிடுவர். அப்போது, தேர்வு பெற்ற அந்த நபர், முதுகெலும்பற்றவராக, இந்துக்களின் சொல் பேச்சுக் கேட்டு நடப்பவராக இருப்பார். அவர், தலித்துகளுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கமாட்டார்.
தகுதியில்லாதவர்கள் தலித்துகளுக்குத் தலைவர்களாக வந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான் அம்பேத்கரின் இந்த நகர்வுக்குக் காரணம்.
பூனா ஒப்பந்தத்தின் படி நடைபெற்ற தேர்தல்களால் தலித்துகள் பயனடையவில்லை. அது எப்படி என்பதைத் தரவுகளுடன் அம்பேத்கர் எழுதிய புத்தகம்தான் ‘வாட் காங்கிரஸ் அண்ட் காந்தி ஹேவ் டன் டு அன்டச்சபிள்ஸ்’ (காங்கிரஸும் காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்தது என்ன?). இது 1945-ல் வெளியானது. இந்தப் புத்தகத்தை எதிர்த்து புத்தகங்களை எழுதுமாறு ராஜாஜியிடமும் (அம்பேத்கர் ரெஃப்யூட்டட்) கே.சந்தானத்திடமும் (அம்பேத்கர்ஸ் அட்டாக்) தஞ்சமடைந்தார் காந்தி.  
வாக்குரிமை ஏன் அடிப்படை உரிமை இல்லை..?
இப்படியான  சூழலில் 1948-ல் காந்தி கொல்லப்பட, மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் மெளன சாட்சியாக நின்று கவனித்துக் கொண்டிருந்த வல்லபாய் பட்டேல், விடுதலை இந்தியாவின் முக்கியத் தலைவராகத் தலையெடுக்க ஆரம்பித்திருந்தார். காந்தி எரவாடா சிறையிலிருந்த போது, நேரு வேறொரு சிறையில் இருந்தார். எனவே, அம்பேத்கரின் போராட்டம் பற்றியோ, காந்தியின் நாடகம் பற்றியோ அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 
இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, சிறுபான்மையினருக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த அனைத்து தனித் தொகுதிகளையும் ஒழிக்க பட்டேல் முன்மொழிந்தார். அப்போது அம்பேத்கர் நமது அரசியல் சாசனத்தை ஓரளவு முடிக்கும் தருவாயில் இருந்தார். பட்டேலின் முன்மொழிவு அண்ணலை ஆத்திரப்படுத்தியது. எனவே, அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திலிருந்து 1948-ல் விலகினார். எங்கே மிச்சமிருக்கும் பணியைச் செய்யாமல் விட்டுவிடுவாரோ என்ற பயத்தில், அண்ணலை சாந்தப்படுத்தும் விதமாக தலித்துகளுக்காக மட்டும் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுவது தொடர்ந்தது. அதுவும் 10 ஆண்டுகளுக்கு மட்டும்தான்.
இந்தச் சமயத்தில், வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். அனைவருக்குமான வாக்குரிமை குறித்து முதலில் பேசியதும் அவர்தான். அன்றைய அரசு, ‘அனைவருக்குமான வாக்குரிமை’யை 1947-ல் ஏற்றுக் கொண்டது. அது ஒரு மிகப்பெரிய புரட்சி. காரணம், அப்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவில் கூட அனைவருக்குமான வாக்குரிமை வழங்கப்படவில்லை. அவ்வளவு ஏன், நம்மை ஆண்ட பிரிட்டிஷார் கூட தங்கள் நாட்டில் 1928-ல்தான் அந்த உரிமையை வழங்கினர். அம்பேத்கரோ அதை 1919-லிருந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் என்றால், அவரது தொலைநோக்குப் பார்வையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. 
ஆனால் அனைவருக்குமான வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க அன்றைய விடுதலை இந்தியாவின் அரசு முன் வரவில்லை. இதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா..? வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாக இல்லாதபட்சத்தில், தேர்தலில் போட்டியிட நினைக்கும் வேட்பாளர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும். உதாரணத்துக்கு பாரதிய ஜனதா கட்சி 2014-ல் பொறுப்பேற்ற சில  ஆண்டுகளில் ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதி, வீட்டில் கழிவறை வசதி போன்றவை இருக்க வேண்டுமென்று புதிய விதி எழுதின. ராஜஸ்தானில் இப்போது காங்கிரஸ் ஆட்சி. எனவே, அந்த விதியை நீக்கிவிட்டது. ஆனால் ஹரியாணாவில் பா.ஜ.க.வின் ஆட்சி தொடர்கிறது. எனவே அங்கே அந்த விதி இன்னும் நடைமுறையில் உள்ளது.
அபாயத்திலிருந்து மீளும் வழி..!
தனித் தொகுதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு  என்ற அடிப்படையில் 1980, 1989, 2000 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. 2020-ல் அந்த விதி பின்பற்றப்படுமா என்பது தெரியவில்லை.  காரணம் தொகுதி மறுவரையறை என்று சொல்லப்படும் ‘டீலிமிட்டேஷன்’ எனும் நடவடிக்கை. ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பது சட்டம். அந்தத் தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதியாகவோ (தலித் மக்கள் பெரும்பாண்மையாக இருக்கும்பட்சத்தில் அது தனித் தொகுதி) அல்லது இரட்டை உறுப்பினர் தொகுதியாகவோ இருக்கலாம். இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் தலித் மக்கள் மைனாரிட்டியாக இருக்கும்பட்சத்தில் ஒரு இடம் பொதுப் பிரிவினருக்கும், இன்னொரு இடம் தலித்துகளுக்கும் கிடைக்கும்.
பொதுப் பிரிவினருக்கான இடம் என்பது யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதால், அந்தத் தொகுதியில் தலித் ஒருவர் நின்று வெற்றி பெற்ற நிகழ்வுகளும் உள்ளன. விடுதலை இந்தியாவில் 1952 மற்றும் 1957-ம் ஆண்டுளில் நடைபெற்ற தேர்தல்கள் இந்த முறையில்தான் நடந்தன.
1957-ல் நடைபெற்ற தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, பொதுப் பிரிவினருக்கான இடத்தில் போட்டியிட்டு, திப்பல சூரி தோரா எனும் பழங்குடியிடம் தோற்றார். அதை எதிர்த்து கிரி உச்ச நீதிமன்றம் செல்ல, 1959-ல் தோராவின் வெற்றி நியாயமானதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்படி, இதர பொதுத் தொகுதிகளிலும் தலித்துகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்த அன்றைய மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் கட்சி இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை ஒழித்தது.  
இந்நிலையில், 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய நான்கு முறை மட்டுமே தொகுதி மறுவரையறை நடைபெற்றுள்ளது. 1976-ல் அன்றைய காங்கிரஸ் அரசு, குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் மக்களவைக்கான மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக 2001 வரை தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. பிறகு, 2002-ல் மறுவரையறை நடந்தது. அதனால் 2026-ம் ஆண்டு வரை (வுந்துரு தன் புத்தகத்தில் 2036 என்கிறார்) அடுத்த மறுவரையறை நடக்காது. காரணம், 2021 மக்கள்  தொகைக் கணக்குக்குப் பிறகு மறுவரையறை நடந்தால், மக்கள் தொகையைக் குறைத்த தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களுக்கு தற்போது உள்ள மக்களவைக்கான இடங்கள் குறையும்.  அந்த இடங்கள், மக்கள் தொகையைக் குறைக்காத உத்தர பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களுக்குப் போய்ச் சேரும். 
அப்போது மக்களவையில் வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். தென் மாநிலங்கள், கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டிய நிலை ஏற்படும். சுருக்கமாக, ‘வடக்கு வளரும், தெற்கு தேயும்..!’ 
ஒருவேளை மறுவரையறை நடந்தால், அது நாட்டில் தற்போது உள்ள தனித்தொகுதி எண்ணிக்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சில மாநிலங்களில் அதிகரிக்கவும், சிலவற்றில் குறையவும் செய்யலாம். எண்ணிக்கை அதிகரித்த மாநிலங்களில், பெரும்பாண்மை சாதி இந்துக்கள் தலித் தலைவர்களைத் தங்களின் கைப்பாவையாக மாற்றி, தலித் சமூகத்துக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்தவும் செய்யலாம். யாதவ்கள் யஷ்வீர் சிங்கை ஆட்டுவித்ததைப் போல. எண்ணிக்கை குறைந்த மாநிலங்களில், சிலை உடைப்புகளும் தலை உடைப்புகளும் நிகழலாம். இந்துத்துவ சக்திகள் வேதாரண்யத்தில் ஆடிய ஆட்டத்தைப் போல…!
இரட்டை உறுப்பினர் தொகுதி முறை அல்லது இரட்டை வாக்குரிமை ஆகிய அம்பேத்கரின் கனவுகளில் ஏதேனும் ஒன்றைச் சாத்தியமாக்குவதுதான், மேற்சொன்ன அபாயத்திலிருந்து மீள ஒரே வழி..!  

No comments:

Post a Comment